தானாய் வந்த தண்டனை!
நான், பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, சென்னை விரிவாக்க பகுதியில், குடியேறினோம். அந்த பகுதியில், அதிக வீடுகளோ, கடைகளோ இல்லை; வீட்டிலிருந்து, பேருந்து நிறுத்தம் செல்லும் வீதியில், ஒரே ஒரு மிதிவண்டி பழுதுநீக்கும் கடை இருந்தது.ஆள் நடமாட்டம் அதிகம் இருக்காது; நான் அந்த இடத்தை கடந்து செல்லும் போதெல்லாம், மிதிவண்டிக்கடைக்காரர், என் நிறத்தை குறிப்பிட்டு, கிண்டல் செய்வார்.வகுப்பு ஆசிரியரிடம், இது பற்றி புகார் சொன்னேன்; அவர், 'நீ எதுவும் திரும்ப பேசாதே... அவர் என்ன வேண்டுமானாலும் கேலி பேசட்டும்; கடவுள் திருத்துவார்...' என, ஆறுதல் கூறினார். தினமும், அந்த கடையை கடக்கும் போது, கவலையில் என் முகம் வாடிவிடும். ஒரு நாள், கடை பூட்டி இருந்தது. அன்று நிம்மதியாக பள்ளிக்கு சென்றேன். சில மாதங்களாக, பூட்டியே கிடந்தது. ஒருநாள், கடை திறந்திருந்தது; மனம் சோர்ந்து, பயந்தபடி அந்தக் கடையை பார்த்தேன். அன்று, கேலி செய்யும் குரல் கேட்கவில்லை. வழக்கமாக, என்னை கேலி செய்பவர் தான் கடையில் இருந்தார்.அவர் முகத்தில் ஒரு பக்கம், கொடிய தீக்காயம் பட்டிருந்தது; வீட்டில் சமையலில் உதவிய போது, விபத்து ஏற்பட்டு, தீக்காயம் பட்டதாக அறிந்தேன். என் கருப்பு நிறம் இயல்பாக அமைந்தது; ஆனால், சிவப்பான அவர் முகத்தில், தீக்காய தழும்புகள் படர்ந்திருந்தன. அவர் அவதி கண்டு, பரிதாபப்பட்டேன். நான், புகார் கூறியபோது, ஆசிரியர் ஆறுதல் சொல்லியிருக்கா விட்டால், தவறான முடிவு கூட எடுத்திருப்பேன். ஆனால், தக்க அறிவுரை கூறி, சரியாக வழிநடத்திய ஆசிரியரை இன்றும் நினைத்து பார்க்கிறேன்.- ஆர்.மெர்சி, சென்னை.