பொறுப்புடமை!
மதுரை, மாரியம்மன் தெப்பக்குளம் அருகே, தியாகராஜர் நன்முறை பள்ளியில், 1968ல், 10ம் வகுப்பு படித்தேன்.வகுப்பு ஆசிரியராக இருந்தார் பொன் பாண்டியன். பாடங்களில் கவனம் செலுத்தி படிக்காதவர்களை கண்டிப்பார். ஒருநாள், 'தம்பி... நீ கல்யாணத்துக்காக படிக்கிறாயா... உத்யோகம் தேட படிக்கிறாயா...' எனக் கேட்டார். புரியாமல் விழித்தேன். சிரித்தபடியே, 'கல்யாணத்துக்காக படிக்க வந்தவர்களை, இனி திட்டவோ, கண்டிக்கவோ மாட்டேன்... திருமணத்தின் போது, 'மாப்பிள்ளை, 10ம் வகுப்பு பெயில்' என்றாலும் பெருமை குறையாது...'ஆனால், நம்பி இருக்கும் பெற்றோரை காப்பாற்ற வேண்டிய பொறுப்புள்ளவர்கள் கவனம் செலுத்தி படிக்க வேண்டும். அது போன்றவர்களை திட்டி, கண்டிப்புடன் படிக்க வைக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது...' என்றார். எளிய பயிற்சிகளால் திறனுாட்டினார். அவ்வப்போது, 'பள்ளி பரீட்சைகள் பெரிதல்ல; பிற்காலத்தில் வாழ்க்கை எனும் பரீட்சையில் வெற்றி பெறுவதே முக்கியம்...' என அறிவுரைத்தார். அதை ஏற்று படித்து உயர்ந்தேன். இப்போது என் வயது, 69. அறிவுரையுடன், பயிற்சியும் தந்து குறையின்றி படிப்பை முடிக்க உதவிய குருநாதரை, மனதில் கொண்டு வாழ்கிறேன்.- க.ராஜேந்திரன், மதுரை.தொடர்புக்கு: 94425 30969