உள்ளூர் செய்திகள்

நடிப்பு!

புள்ளம்பாடி என்ற ஊரில், ஏழை உழவன் கோபி வசித்து வந்தான். அவன் மனைவி மிருதுளா. அந்த ஊர் பெண்கள், நுால் நுாற்கும் வேலை செய்து சம்பாதித்து வந்தனர். ஒருநாள்-''நம் ஊரில் பெண்கள் எல்லாருமே நுால் நுாற்கின்றனர்; நீ மட்டும் சோம்பேறியாக துாங்கி எழுகிறாயே...'' என்று மனைவியிடம் கேட்டான் கோபி.''நான் என்ன செய்ய வேண்டும்...'' ''உனக்கு ராட்டையும், பஞ்சும் வாங்கி தருகிறேன்; நீயும் நுால் நுாற்க வேண்டும்.''அவள் ஒப்புக் கொண்டாள். ஒரு ராட்டையும், பஞ்சும் வாங்கி கொடுத்தான். ஆனால், மிருதுளா அவற்றை மறைத்து வைத்து விட்டு, எப்போதும் போல், சோம்பேறியாக துாங்கி பொழுதை கழித்தாள்.ஓராண்டுக்குப் பின் -''மிருதுளா... இன்று நுால் வியாபாரியை அழைத்து வருகிறேன்; நீ ஓராண்டாக நுாற்ற நுாலை எடுத்து, தயாராக வை...'' என்று சொல்லி, வயற்காட்டிற்கு சென்று விட்டான். நடு நடுங்கிப் போனாள். 'நுாலெல்லாம் எங்கே என்று கேட்டால் என்ன சொல்வது; மாட்டிக் கொள்வேனே' என்று நினைத்து பயந்தாள். அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது.தன் உடல் முழுவதும், கரி பூசிக் கொண்டாள். சிவப்பு நிறத்தில், பெரிய துணியை, நாக்கு போல ஒட்டிக் கொண்டாள். தலையை விரித்துப் போட்டு, சூலாயுதம் ஏந்தி, கணவன் வேலை செய்யும் வயற்காட்டிற்கு சென்றாள்.அவள் தோற்றத்தைக் கண்ட கோபி, வந்திருப்பது காளி என்றே நம்பினான்.''டேய்... நான் காளி என்று தெரிந்தும், அவமதிக்கிறாய்... உன்னை என்ன செய்றேன் பார்...'' என்றாள்.அவள் காலில் விழுந்தான், கோபி.''தாயே... உன்னை அவமதித்தேனா... இல்லவே இல்லை... நான் அறியாமல், ஏதாவது செய்திருந்தால் மன்னித்து விடு...''''டேய்... உன் தவறுக்குப் பரிகாரமாக, உன் ஒரே மகனை எடுத்துக் கொள்ளட்டுமா... இல்லை, உன் வீட்டில் உள்ள நுாலை எடுத்துக் கொள்ளட்டுமா...'' ''தாயே... நுாலை எல்லாம் எடுத்துக் கொள்; என் மகனை விட்டு விடு...'' அங்கிருந்து அகன்றாள், காளி வேடத்தில் இருந்த மிருதுளா.வீட்டிற்கு மாலை திரும்பியவன், மனைவியிடம் நடந்ததை கூறினான். அவளோ, எதுவும் தெரியாதது போல் நடித்து, பெரிதாக அலறினாள்.''ஐயோ... ஓராண்டாக உழைத்து, நெய்த நுாலெல்லாம் பறிபோய் விட்டதா...'' என்றபடி, ராட்டையை துாக்கிப் போட்டு உடைத்தாள். அவளை ஆறுதல் படுத்தினான்.''விடு... நம்ம பிள்ளை தப்பினானே... அதை நினைத்து சந்தோஷப்படு...'' என்றான்.அதன்பின், மிருதுளாவை நுால் நுாற்கச் சொல்லவில்லை. சோம்பேறி மிருதுளா, எந்த பணியும் செய்யாமல், வாழ்க்கையை கடத்தினாள். தினமும் சாப்பிட்டு நன்றாக துாங்கி எழுந்ததால், உடல் குண்டானது; நோய்கள் உடலில் குடியேறின. நோயின் பிடியில் அவதிப்பட்டாள். அவளால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. செய்த தவறுகளை எண்ணி வருந்தினாள். இப்போ, வருந்தி ஒரு பயனும் இல்லை.குட்டீஸ்... ஏதாவது வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான், உடலும் உள்ளமும், சுறுசுறுப்புடன் நலமாக இருக்கும். இல்லாவிட்டால், மிருதுளாவைப் போல் அவதிப்பட வேண்டியது தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !