உயர்த்திய அறிவுரை!
சிவகாசி, மம்சாபுரம், அரசு உயர்நிலைப் பள்ளியில், 1965ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்தேன். அப்போது, ஹிந்தி மொழிக்கு எதிராக போராட்டம் நடந்து கொண்டிருந்தது.பள்ளி மாணவர் தலைவனாக இருந்த எனக்கு, தபாலில் ஒரு பார்சல் வந்தது; அதில், சில வளையல் துண்டுகளும், சேலையும், ஒரு கடிதமும் இருந்தன. கடிதத்தில், 'ஹிந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்காத உங்களுக்கு பரிசு!' என எழுதப்பட்டிருந்தது. அதை கண்டதும், பள்ளி மைதானத்தில் போராட முடிவு செய்தோம்; தரையில் அமர்ந்து முழங்கினோம். ஒரு மாணவி மட்டும், இதில் கலந்து கொள்ளாமல் வகுப்பறைக்கு சென்றாள்; அவள் கையைப் பிடித்து நிறுத்த முயன்றேன். அது, தலைமை ஆசிரியரின் மகள்; அதிர்ந்து திரும்பினேன்.அனைவரும் கலைந்ததும், என்னுடன் சிலரை அலுவலகம் வர அழைத்தார், தலைமை ஆசிரியர் ராமநாதன். சிறிது நேரம் அறிவுரை வழங்கி, உடன் வந்தவர்களை அனுப்பிய பின், 'பள்ளியை விட்டு உன்னை நீக்கினால், எதிர்காலம் பாழாகி விடும்; அதை செய்ய விரும்பவில்லை... போராட்டங்களை தவிர்த்து, நன்றாக படித்து முன்னேற முயற்சி செய்...' என்றார். அந்த அறிவுரையை மனதில் கொண்டு திரும்பினேன். அவரது ஆசியால், கல்லுாரி படிப்பை முடித்து, கப்பல்படையில் சேர்ந்தேன். அதிகாரியாக உயர்ந்து ஓய்வு பெற்றேன். இப்போது என் வயது, 74; வாழ்வு செழிக்க உதவிய, அந்த தலைமை ஆசிரியரை மனதில் ஏந்தியுள்ளேன். - ஜி.முத்துவேலு, ராஜபாளையம்.தொடர்புக்கு: 94866 67757