அம்பு பாலம்!
ஒருமுறை கண்ணனும், அர்ச்சுனனும் யமுனை ஆற்றங்கரையில் உலாவிக் கொண்டிருந்தனர். அர்ச்சுனனோ நடக்க இருக்கும் குருட்சேத்திரப் போரில் தன் வில் ஆற்றலால், எதிரிகளை வெல்லப்போவதைப் பற்றிக் கற்பனை செய்து கொண்டிருந்தான்.தன்னைப் போன்ற வில் ஆற்றல் யாருக்கும் இல்லை என்ற பெருமை அவனுக்கு இருந்தது. 'கடலைக் கடந்து இலங்கை செல்ல ராமர், அம்புகளினால் பாலம் அமைத்து இருக்கலாமே. நானாக இருந்தால் அப்படித்தான் செய்து இருப்பேன்' என்று நினைத்துச் சிரித்தான்.அர்ச்சுனனின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட கண்ணன், ''எதற்காகச் சிரித்தாய்?'' என்று கேட்டார்.''கடல் கடந்து இலங்கை செல்ல ராமர் குரங்குகளின் உதவியால் பாலம் கட்டினார். ஏன் அவர் அம்புகளாலேயே பாலம் கட்டி இருக்கக் கூடாது. நானாக இருந்தால் அப்படித்தானே செய்திருப்பேன். இவ்வளவு கடும் முயற்சி வேண்டாமே. எவ்வளவு பெரும் படையாக இருந்தாலும் எளிதாகக் கடந்து இருக்குமே. ராமருக்கு இது தெரியாமல் போயிற்றே என்று நினைத்துச் சிரித்தேன்!''அர்ச்சுனனின் ஆணவத்தைப் போக்க நினைத்த கண்ணன், ''அர்ச்சுனா! நீ நினைப்பது தவறு. குரங்குகளின் வலிமையைப் பற்றி உனக்குத் தெரியாது. அவற்றைத் தாங்கக் கூடிய ஆற்றல் எந்த அம்புப் பாலத்திற்கும் கிடையாது. அந்த படையிலிருந்த குரங்கு ஒன்று இன்றும் உள்ளது. நீ வேண்டுமானால் இந்த யமுனை ஆற்றில் அம்புப் பாலம் கட்டு. நான் அந்தக் குரங்கை வரவழைக்கிறேன்!'' என்றார் கண்ணன்.மகிழ்ச்சி அடைந்த அர்ச்சுனன், தன் வில்லில் அம்புகளைப் பூட்டி யமுனை ஆற்றில் அம்புப் பாலம் ஒன்றை அமைத்தான்.''கண்ணா! அந்தக் குரங்கை வரவழை. ஒரு குரங்கு என்ன? கோடிக் கணக்கான குரங்குகளால் கூட வலிமை வாய்ந்த இந்தப் பாலத்தை ஒன்றும் செய்ய முடியாது!'' என்று ஆணவத்துடன் சொன்னான்.''அனுமன்! விரைந்து வா!'' என்று குரல் கொடுத்தார் கண்ணன். கிழக் குரங்கு ஒன்று அங்கே வந்தது.அதைப் பார்த்த அர்ச்சுனன், 'இந்தக் குரங்கால் என்ன செய்ய முடியும்?' என்று நினைத்துச் சிரித்தான்.அந்தக் குரங்கு அம்புப் பாலத்தின் மீது தன் ஒரு காலைத் தயக்கத்துடன் வைத்தது. தன் இன்னொரு காலைத் தூக்கியது. அவ்வளவுதான், அம்புப் பாலம் அந்தக் குரங்கின் எடை தாங்காமல் நொறுங்கி விழுந்தது. இதைப்பார்த்த அர்ச்சுனன் அவமானம் தாங்காமல் தன் கையிலிருந்து வில்லையும், அம்புகளையும் தூக்கி எறிந்தான். கண்ணனின் பாதத்தில் விழுந்து அழுதான்.''அர்ச்சுனா! கலங்காதே. இந்தக் குரங்குகளின் வலிமையைத் தாங்க முடியாது என்பதால்தான் ராமர் அம்புப் பாலம் கட்டவில்லை. அவரால் முடியாததை உன்னால் எப்படிச் செய்ய முடியும்? இனியாவது உன் உள்ளத்தில் ஆணவத்திற்கு இடம் கொடாதே. பெரிய வீரர்கள் வீழ்ச்சி அடைவதற்கு அதுவே காரணம்!'' என்று அறிவுரை சொன்னார்.ஆணவத்தை விட்டொழித்தான் அர்ச்சுனன்.***