அதிமேதாவி அங்குராசு!
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!சக்தி இதில்தான்!கோடை காலம் வந்தாலே வித, விதமான குளிர்பான விளம்பரங்கள் களை கட்டும். இதில் உண்மையான இயற்கை குளிர்பானங்களை நாம் மறந்து விடுகிறோம்.ஏழைகளின் சக்தி என்று கருதப்படும் நீர் ஆகாரமாக இன்றுவரை திகழ்வது பழைய சோற்றில் தண்ணீரை ஊற்றி வைத்து அதை மறுநாள் தயிருடன் சேர்த்து சாப்பிடுவது தான். அதில் உள்ள சத்துக்களை எந்த நவீன மருத்துவமும் தர முடியாது. இதே போன்று இன்னொரு சத்து பானம் தான் மோர்.பாலில் <உறை ஊற்றி கிடைப்பது தயிர். அந்த தயிரை மத்து கொண்டு கடைந்து வெண்ணெய் சத்தை பிரித்து எடுத்து விட வேண்டும். கட்டிகள் இல்லாமல் தயிர் நன்றாக கரைந்த பின் மோர் கிடைக்கும். இதனுடன் கறிவேப்பிலை, மல்லித்தழை பொடிப் பொடியாக நறுக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்க வேண்டும். இப்போது சுவையான நீர் மோர் தயார்.மோரில் பொட்டாசியம், வைட்டமின் பி-12, கால்சியம், ரிபோபுளாவின், பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ளன. புளிப்பு, உப்பு, காரம், உவர்ப்பு என 4 சுவைகளையும் மோர் தரக்கூடியது. நீர் மோர் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், ஜீரண சக்தியை அதிகரிக்கவல்லது. பசியின்றி வயிறு திம்மென்று இருக்கும் போது இஞ்சி கலந்த இந்த நீர் மோர் ஒரு டம்ளர் பருக, அரைமணி நேரத்தில் நல்ல பசி எடுப்பதை உணர முடியும். திருவிழாக் காலங்களில் அமைக்கப்படும் தண்ணீர் பந்தலில் பொதுவாக நீர் மோரும், பானகமும் வழங்குவர். பானகத்தில் இனிப்பும், லேசான கசப்பும் இருக்கும். இதையும், நீர் மோரையும் தண்ணீர் பந்தல்களில் வழங்கும்போது அறுசுவை பானங்களையும் வழங்குவது போலாகிறது. அறுசுவை உணவு நமது உடலில் சேரும் போது உடல் கொண்ட மொத்த களைப்பும் நீங்கி தனி புத்துணர்ச்சி கிடைத்துவிடும்.கொளுத்தும் வெயிலில் சுற்றி வந்த பின் உடலில் உள்ள நீர்ச்சத்து முழுமையும் ஆவியாகிவிடும். அப்போது ஒரு டம்ளர் மோர் குடித்துப் பாருங்கள். உடலில் புத்துணர்ச்சி ஏற்படுவதை நன்றாக உணர முடியும். இது எந்த குளிர்பானத்திலும் கிடைக்காத ஒன்று.வெயில் காலத்தில் மோர் நிறைய தயாரித்து பிரிட்ஜில் வைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு தண்ணீருக்குப் பதிலாக மோர் கொடுக்கலாம். உடல் சூட்டை தணிக்கும்.கோடை காலத்தில் பிரிட்ஜில் வைத்தாலும் மோர் புளித்து விடும். அதற்கு தயிரில் இருந்து எடுத்த வெண்ணெயை அந்த மோர் தீரும் வரை மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசி வரைக்கும் புளிக்காமல் இருக்கும். குழந்தைகளுக்கு வெளிநாட்டு குளிர்பானங்கள் வாங்கிக் கொடுத்து, அவர்கள் உடல் நலத்தை கெடுப்பதை விட, இயற்கையாய் கிடைக்கும் மோர் கொடுத்து அவர்களின் ஆரோக்கியத்தை காத்திடுங்கள்.என்றென்றும் அன்புடன்,அங்குராசு