அதிமேதாவி அங்குராசு!
அனைவருக்கும் எனது அன்பு.கூர்மை செய்வோம்!மரக்கடை முதலாளிடம் ஓர் ஆள் வேலை கேட்டு வந்தான். 'கடுமையாக உழைப்பேன்' என்று அவன் கூறியதால், அவனுக்கு அங்கே வேலை கிடைத்தது.முதல் நாள், காலை முதல் மாலை வரை மரங்களை வெட்டினான். மொத்தம் ஏழு மரங்களை வெட்டினான். அடுத்த நாள் ஏனோ அவனால் ஆறு மரங்களை வெட்ட முடிந்தது. அதற்கு அடுத்த நாள், அவன் அதிக நேரம் சாப்பிட கூட போகாமல் தொடர்ந்து வெட்டியும் கூட அவனால் நான்கு மரங்களைத்தான் வெட்ட முடிந்தது.அச்சப்பட்ட அவன், முதலாளியிடம், 'அய்யா நான் வஞ்சகம் செய்யவில்லை. கடுமையாகத்தான் உழைக்கிறேன். ஏன் என்னால் சரியாக வெட்ட முடியவில்லை என்று தெரியவில்லை?' என்று கூறினான்.இதை கேட்ட முதலாளி, 'சரி தம்பி நீ உன் கோடரியை கடைசியாக கூர்மை செய்தது எப்போது?' என்று கேட்டார்.ஆக... வாழ்க்கையில் வெற்றி பெற உழைப்பு மட்டும் போதாது, புத்திசாலித்தனமும் வேண்டும்.ஒரு நாள் வாங்கினால்!பூ என்பது பெண்களுக்கு பிடித்த ஒன்று. இன்று உள்ள அதிகமான விலைவாசியில் ஒரு ரோஜா 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை விற்கப்படுகின்றது. இந்த நிலையில் இதோ, ஒரு சந்தோஷமான செய்தி.ஒரு மாத காலம் வரை வாடாமல் இருக்கும் ரோஜாப்பூ உருவாக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வாடாத ரோஜாவை உருவாக்கி இருக்கிறார்கள். மரபு ரீதியாக மாற்றம் செய்யப்பட்ட இந்த ரோஜாப்பூக்கள் செடியில் இருந்து பறிக்கப்பட்டு ஒரு மாதம் வரை வாடாமல் இருக்கும்.அய்யோ பாவம்!நம் நாடு ஒரு அமைதி பூங்கா. போர் மேகம் சூழ்ந்த நாட்டினில் வாழ்வது என்பது நிம்மதியற்ற நிலை. ஆப்கானிஸ்தானில் நடக்கும் போரில் தினம் ஒரு சிறுவர் பலியாகி வருவதாக ஐ.நா.,சபை அறிக்கை மூலம் தெரிய வந்து உள்ளது.தலீபான்கள் மட்டும் அல்லாமல் ஆப்கானிஸ்தான் ராணுவமும் சிறுவர்களை பயன்படுத்தி வருவதாகவும் ஐ.நா.,சபை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. தீவிரவாதிகள், சிறுவர்களை தற்கொலை தாக்குதல் நடத்தவும், வெடிகுண்டுகளை வைக்கவும் பயன்படுத்தி வருகிறார்கள்.ஆப்கானிஸ்தான் ராணுவமும் 12 வயது சிறுவர்களை ராணுவப்பணிக்கு சேர்த்து வருகிறது. இதனால் சிறுவர்கள் தினம் தினம் பலியாகி வருகிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் 176 சிறுவர்கள் பலியாகி உள்ளனர். 389 சிறுவர்கள் காயம் அடைந்தனர். இது கடந்த ஆண்டை விட இரு மடங்காக அதிகரித்து உள்ளது.இப்போது இந்த எண்ணிக்கை அதிகரித்து கிட்டத்தட்ட தினம் ஒரு சிறுவர் பலியாகி வருகிறார்கள் என்றும் ஐ.நா., சபை தெரிவித்து உள்ளது. அமைதியும், நிம்மதியும் இல்லாத நாட்டில் சிறுவர்களும் நிம்மதியாக வாழ முடியாது. போரினால், ஒரு நாட்டின் எதிர்காலமான சிறுவர்களின் வாழ்க்கை எவ்வளவு மோசமாகி இருக்கிறது.கண்ணின் நிறம் குணம் சொல்லுமா!ஒருவரது கண் விழியின் நிறத்தை வைத்து அவரது குணங்களை கணிக்க முடியுமா?!கண்களின் நிறமானது இனத்திற்கு குணம் மாறுபடலாமே தவிர குணத்திற்கு குணம் மாறிவிடும் என்பதெல்லாம் உண்மையல்ல. ஒருவரது உணர்வுகள் முகத்தில் வெளிப்படும் பொழுது கண்களின் நிறங்கள் அதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாமே தவிர ஒருவரது குணங்களை தீர்மானிப்பதல்ல அதன் நிறம்.நம் உடம்பில் உள்ள மெலனின் பிக்மெண்ட்டுகள், அதாவது நம் உடல் உறுப்புகளுக்கு நிறத்தை தீர்மானிக்கும் நிறமிகள்தான் கண்களின் நிறத்தையும் தீர்மானிக்கின்றன.வெள்ளைக்காரர்களுக்கு பொதுவாகவே நிறமிகள் தன்மை உடலில் மென்மையானதாக இருப்பதால் கண்களும் இளம் பச்சை, வெளீர், நீலம் போன்ற மிருதுவான நிறத்தில் இருக்கும்.வெப்ப பிரதேசத்தில் உள்ள நம் போன்றவர்களுக்கு உடலில் உள்ள நிறமிகள் கடுமையானதாக இருப்பதால் நம் தோலை போலவே கண்களும், கருநீலம், பிளாக் பிரவுன் என்று அழுத்தமான நிறத்தில் இருக்கும்.இதுதான் உண்மையான காரணம். மற்றபடி ஹீரோ கண்கள் சாந்தமாகவும், வில்லன்களின் கண்கள் கொடூரமாக இருப்பதெல்லாம் சினிமாவில் மட்டும்தான்!அதனால் கண்களின் நிறத்திற்கும் குணத்திற்கும் சம்பந்தமில்லை என்பதே உண்மை!அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!இது 'அவியல் சூப்' செய்முறை நேரம்.தேவையானவை: காய்கறிகள் - கலவையாக 1 கப், மைதா அல்லது சோளமாவு- 1 தேக்கரண்டி, பொரித்த பிரெட் - டேஸ்ட்டுக்காக. வெண்ணெய்-சிறிது. மிளகுத்தூள் சிறிது. உப்பு-தேவையான அளவு. செய்முறை: வீட்டில் மீதமாக இருக்கும் ஒன்றிரண்டு காய்கறிகளை பொடியாக நறுக்கி 2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ளுங்கள். காய்கறி வேக வைத்த தண்ணீரை தனியாக எடுத்து அதில் மைதா அல்லது சோளமாவை கரைத்து கொள்ளவும். இதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறங்குங்கள்.இதன்மேல் வெண்ணெய், பொரித்த பிரேட் போட்டு தேவையான அளவு மிளகு சேர்த்தால் 'அவியல் சூப்' தயார்.காய், கீரை - மாத்திரை!சில சிறுவர்கள் காய், கீரை என்றால் சாப்பிட மாட்டார்கள். கீரையில் உள்ள சத்து, காய்கறிகளில் உள்ள சத்து என்று மல்டி விட்டமின் மாத்திரைகள் கொடுத்தால் போதும், சாப்பிடுகிறேன் என்று அடம்பிடிக்கும் சாமர்த்தியசாலிகளும் உண்டு. ஆனால், மாத்திரைகள் காய், கீரைகள் சாப்பிட்டதற்கு ஈடாகுமா? கண்டிப்பாக ஈடாகாது. மாத்திரை என்பது வெறும் 10 பர்சன்ட் ரெமிடிதான்! அதுவும் கூட வளரும் பருவத்தில் மாத்திரை எடுத்து கொள்வது தவறு. வயதானவர்களுக்கு உணவின் மூலம் கிடைக்காத சத்துக்கள் மாத்திரை மூலமாக கிடைக்கட்டும் என்று, டாக்டர்கள் விட்டமின் மாத்திரைகளை பரிந்துரைக்கிறர்கள்.வளரும் பருவத்திலேயே சத்து மாத்திரைகள் சாப்பிட பழக்கி உணவின் மூலம் உடலுக்கு தேவையான அடிப்படை சத்துக்களை சேர விடாமல் செய்வது நல்லதல்ல. காய், கீரைகள் எப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுகிறர்கள் என்பதை கண்டுபிடித்து அப்படி சமைத்து கொடுக்க வேண்டும். ஆரோக்கியம் மிகவும் முக்கியம் நண்பர்களே.ஆஸ்பத்திரிக்கே போக கூடாது என, முடிவு எடுங்கள். தட்டில் அம்மா அன்புடன் வைக்கும் உணவை மிளகாயை தவிர கறிவேப்பிலை, கொத்துமல்லி, தக்காளி, வெங்காயம், உள்ளிட்ட எதனையும் ஒதுக்காமல் ரசித்து உண்ணுங்கள்.இதனால் உங்கள் 'மம்மி' ஆனந்தப்படுவதுடன் உங்கள் 'வயிறு' ஆனந்தப்படும். உங்கள் 'எதிர்காலம்' ஆனந்தமாகும். ஒவ்வொரு காய்கறியிலும் ஒவ்வொரு சத்து. அதை ஒதுக்குபவன் வெத்து; ஒன்றையும் ஒதுக்காமல் வணங்கி ஆனந்தமாய் உண்பவனே கெத்து!என்றென்றும் அன்புடன்,அங்குராசு.