அதிமேதாவி அங்குராசு!
வீட்டுக்குள் கண்காணிப்பு!உலகையே கைக்குள் அடக்கும், அலைபேசி கருவி வந்து விட்டாலும், 'டிவி' மீதான மோகம் குறைந்தபாடில்லை. தொழில் நுட்பத்தில், எல்.சி.டி., என்ற திரவ படிக பிம்பம், எல்.இ.டி., என்ற ஒளிக்குமிழ் துவங்கி, இணையதளத்துடன் இணைந்த, 'ஸ்மார்ட் டிவி' என, காலத்திற்கேற்ப வளர்ச்சி கண்டு வருகிறது தொலைக்காட்சி கருவி.அமெரிக்காவில், மாபெரும் தள்ளுபடி விற்பனை நாட்களை, 'பிளாக் ப்ரைடே' மற்றும், 'சைபர் மன்டே' என்பர். இந்த நாட்களில், 'டிவி' விற்பனை அமோகமாக நடக்கும். இந்த விற்பனையை ஒட்டி, அமெரிக்க புலனாய்வு நிறுவனமான, எப்.பி.ஐ., ஓர் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 'தற்போது உற்பத்தியாகும் தொலைக்காட்சி கருவி, இணைய இணைப்பு, 'பேசியல் ரெகெக்னிஷன்' என்ற முக அங்கீகாரம் வரை, உயர் தொழில் நுட்பத் திறன்களை கொண்டுள்ளது. இதனால், இணைய வழியாக, 'ஹேக்கர்' ஊடுருவி தகவல் திருட்டுக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே, வீட்டில் தொலைக்காட்சி பயன்படுத்தும் போது கவனம் தேவை' என கூறப்பட்டுள்ளது.தகவல் திருட்டை தவிர்க்க சில ஆலோசனைகளையும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.அதன் விவரம்: * 'ஸ்மார்ட் டிவி' பற்றிய அடிப்படை தகவல்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்* புதிய, 'டிவி' நெட்வொர்க் கடவுச்சொல்லை அவ்வப்போது மாற்றவேண்டும்* 'டிவி'யில் இணைந்துள்ள கேமரா, மைக்கை கவனமாக பயன்படுத்தவேண்டும். இவை தான், பாதுகாக்கும் எளிய வழிமுறைகள் என, எப்.பி.ஐ., பரிந்துரைத்துள்ளது.இவற்றை செய்ய முடியாவிட்டால், 'டிவி'யில் உள்ள கேமரா மீது, கருப்பு நாடாவை ஒட்டி விடலாம். 'டிவி' தயாரிப்பு நிறுவனங்கள், அவ்வப்போது வெளியிடும் தொழில்நுட்ப மாற்றங்களை, உடனுக்குடன் நிறுவிக் கொள்வது பாதுகாப்பாக அமையும். 'தேவையற்ற நேரங்களில், 'டிவி'யில் உள்ள இணையத் தொடர்பை துண்டித்துக் கொள்வது பாதுகாப்பாக இருக்கும்...' என அறிவுரைக்கிறார், பிரிட்டீஷ் சிக்னல் புலனாய்வு அமைப்பின் முன்னாள் ஆய்வாளர் டைட்.நீங்க, 'டிவி'யை பார்க்க வில்லை என்றாலும், அது உங்களை பார்த்துக்கொண்டேயிருக்கும். கவனத்துடன் இருங்கள்!சதுக்கம்!ஆசிய நாடான சீன தலைநகர் பெய்ஜிங் மத்தியில் அமைந்துள்ளது தியானன்மென் சதுக்கம். சொர்க்கத்தின் நுழைவு வாயில் என்று இதற்கு பொருள். ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் திரளும் வசதி கொண்டது. உலகிலேயே மிகப் பெரிய பொதுச் சதுக்கமாக உள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம்; சீனாவை, மக்கள் குடியரசாக, அதன் புரட்சித்தலைவர் மாசேதுங் பிரகடனப்படுத்தியது இங்கு தான். சீன அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டமும், 1989ல் இங்கு தான் நடந்தது. அந்த போராட்டத்தில் நுாற்றுக்கணக்கான பேர் கொல்லப்பட்டனர்.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.