உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

கரியமிலமும், கால்நடையும்!பருவநிலை மாற்றத்தால், பூமியின் பல பகுதிகள், மனிதன் வாழத் தகுதியற்றதாக மாறிவிட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளனர் சுற்றுச்சூழலை ஆராயும் விஞ்ஞானிகள்.இது தொடர்பாக, 40 ஆண்டு கால புள்ளிவிவரத்தை தொகுத்து, ஓர் ஆய்வு ஆஸ்திரேலிய பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில், உலகெங்கும் அரசுகள், பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினையை சரியாக செயல்பட தவறிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.உலகில், மாறிவரும் பருவநிலையை ஆண்டு தோறும் பதிவு செய்துள்ள அறிஞர்கள், மனிதன் மற்றும் மிருகங்களின் பெருக்கம், புதைபடிவ எரிபொருள் நுகர்வு ஆகியவற்றை சுட்டிக்காட்டி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கியவர் ஆஸ்திரேலியா, சிட்னி பல்கலைக்கழக பேராசிரியர் தாமஸ் நியூசம். அவர், 'கட்டுப்பாடற்ற கரியமில வாயு என்ற கார்பன் வெளியேற்றம், இறைச்சிக்காக கால்நடை வளர்ப்பு, காடுகள் அழிப்பு போன்ற செயல்களை குறைக்காவிட்டால் நிலைமை படுமோசமாகும்...' என தெரிவித்துள்ளார்.இன்னும் சிறிது காலத்தில் பூமியின் பல பகுதிகள், மக்கள் வாழத் தகுதியற்றதாகிவிடும் என்பதே ஆய்வு முடிவு தரும் எச்சரிக்கை. விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது!கள்ளிச்செடி பூங்கா!வறண்ட பகுதிகளில் செழித்து வளரும் தாவரம் கள்ளிச்செடி. அலங்காரத்துக்காக வீடுகளில் வளர்க்கப்படுகிறது. கள்ளிச்செடிகளுக்கான தேசிய தாவரவியல் பூங்கா, ஹரியானா மாநிலம், பஞ்ச்குலாவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 3,500 இன கள்ளிச்செடிகள் நேர்த்தியாக பராமரிக்கப்படுகின்றன. ஆசியாவிலேயே மிகப் பெரிய கள்ளிச்செடி பூங்கா இது. உலகின் பல இடங்களிலும் உள்ள அழகுமிகு கள்ளிச்செடிகள் வளர்த்து பராமரிக்கப்படுகிறது. இங்கு போட்டோ எடுக்கலாம். வீடியோ பதிவு செய்யலாம். அலங்கார கள்ளிச் செடிகளை வாங்கி வளர்க்கலாம். பல காலநிலையிலும் வளரும் கள்ளிச்செடிகளுக்காக, மூன்று பசுமைக்குடில்கள் உள்ளன. இது, 1987ல் துவங்கப்பட்டது. பூங்காவை சுற்றிப் பார்க்க, இரண்டு மணி நேரம் வரை ஆகும். காலை 7:00 மணி முதல் மாலை 6:00 வரை திறந்திருக்கும். சிறுவர், சிறுமியருக்கு கட்டணம் இல்லை. முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. தாவரவியல் நிபுணரும், சிற்பியுமான டாக்டர் ஜெ.எஸ்.சர்காரியா பராமரித்து வந்த போன்சாய் மற்றும் கள்ளிச்செடிகளை, இந்த பூங்காவுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். சுற்றலா சென்றால் இந்த பூங்காவை ரசிக்க தவறாதீங்க...மாடல் நாய் போதி!மனிதர் அணியும் ஆடைகளுக்கு, 'மாடல்' என்ற வடிவமைப்பு முன்மாதிரி உலகில், முன்னணி வகிக்கிறது, போதி என்ற பெயருள்ள நாய்.டேவிட் பங் - யெனா கிம் தம்பதிக்கு சொந்தமானது. 'ஸ்பிட்ஸ்' இனத்தை சேர்ந்தது. இந்த நாய் ஆடை மாடல் உலகில் புகுந்தது மிகவும் சுவாரசியமான கதை.ஒருநாள் ஆண்களுக்கான ஆடை ஒன்றை, போதி நாய்க்கு அணிவித்து புகைப்படம் எடுத்த தம்பதி, அதை, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினர். அது பரபரப்பானது; இதையடுத்து நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் பிரபலமாகி விட்டது நாய்.அந்த நாயை, வடிவமைப்பு மாடலாக பயன்படுத்த முன்னணி ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் முன்வந்தன. வாய்ப்புகள் படையெடுக்க, வேலையைத் துறந்து, நாய்க்கு நிர்வாக பணி செய்ய துவங்கியுள்ளனர் தம்பதி.பிரபல நிறுவனம் ஒன்றில் வரைகலை நிபுணராக இருந்தார் டேவிட்; ஆடை வடிவமைக்கும் பணியை செய்து வந்தார் யெனா. அதனால் தான், பொருத்தமான ஆடையை தேர்வு செய்து, நாய் போதிக்கு அணிவிக்க முடிகிறது.தற்போது, முழுநேர மாடல் ஆகிவிட்டது நாய் போதி. அதன் பெயரில், புத்தகம் ஒன்றும் வெளிவந்துள்ளது. எப்படி யெல்லாம் ஆடை அணிந்தால் ஆண்கள் அட்டகாசமாகத் தோன்றுவர் என்பது தான் ஆலோசனை புத்தகத்தின் உள்ளடக்கம். அதை எழுதியது போதி அல்ல; அதை வளர்க்கும் தம்பதியர் தான்! - என்றென்றும் அன்புடன், அங்குராசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !