உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

ஈசலும் ஆயுளும்!கரையான் குடும்ப உறுப்பினர் ஈசல். புற்றில் இருந்து வெளிப்படுவதைக் காணலாம். ஆறு கால்களைக் கொண்டது கரையான். கூட்டமாக வாழும். சமுதாய பூச்சி இனம். ஒரே புற்றில், ஆயிரம் முதல், பல லட்சம் வரை இருக்கும்.புற்றில், தேன் கூட்டில் உள்ளது போலவே, ராணி, ராஜா, சிப்பாய், வேலைக்காரர் என, நான்கு வகை உறுப்பினர்கள் உண்டு. ஒரு நாளைக்கு, 2 ஆயிரம் முட்டைகள் வரை இடும் திறன் பெற்றது ராணி. எல்லாவற்றுக்கும் இதுவே தாய். எதிரிகளிடம் இருந்து புற்றை சிறப்பாக பாதுகாக்கும் பணியை செய்யும் சிப்பாய் கரையான். உணவு சேகரிப்பு, புற்றுக் கட்டுதல் போன்ற பணிகளை, வேலைக்கார கரையான் செய்யும். புற்றில், கட்டுக்கடங்காமல் கரையான் பெருகினால் இடநெருக்கடி ஏற்படும். அருகே மற்றொரு புற்று உருவாக்கினால், உணவு பற்றாக்குறை ஏற்படும். இதை தவிர்க்க, சிறப்பு முட்டைகளை இடும் ராணி. அதில் வருவது தான் ஈசல். இலவ மரமும், எருக்கஞ் செடியும், பஞ்சுடன் விதையை பறக்கவிட்டு காற்று மூலம் விதையை பரவ வைக்கும் செயலுக்கு ஈடானது தான், ஈசல் உருவாக்கம்.முட்டையில் இருந்து வெளியே வரும் ஈசல், வெள்ளை நிறத்தில், நான்கு இறக்கைகளுடன் காணப்படும். வேலைக்கார கரையான் உணவு கொடுத்து அவற்றை பராமரிக்கும். இவை, மழைக் காலத்தில், போட்டி போட்டு வெளியேறும். ஈசல்களுக்கு, இறக்கைகள் இருந்தாலும், காற்றை எதிர்த்து பறக்க முடியாது. எனவே, காற்று அதிகம் வீசாத நேரத்தை தேர்ந்தெடுத்தே வெளியேறுகின்றன.புற்றில் இருந்து வெளியேறும் ஈசல்களில், 80 சதவீதம் வரை பறவை, தவளை, பல்லி, ஓணான், உடும்பு போன்றவற்றுக்கு இரையாகின்றன. எஞ்சியவை, இறகுகள் உதிர்ந்து விழும். அவற்றைக் கண்டதும், அற்ப ஆயுசு உயிரினம் என்ற எண்ணமே ஏற்படும்.இவ்வாறு விழும் ஈசல்கள், மண்ணில் புகுந்து, புதிய புற்றை உருவாக்குகின்றன. கரையான்களில், நான்கு வகை உறுப்பினர்களுக்கும் வெவ்வேறு ஆயுள்காலம் உண்டு. அதன்படி, ஈசலின் ஆயுள், 12 முதல், 20 ஆண்டுகள் வரை இருக்கும். வேலைக்கார கரையான்கள் தான் குறைந்த ஆயுள் கொண்டவை. அவை, அதிகபட்சமாக, ஐந்து ஆண்டுகள் வரை வாழும். இனி, ஈசலின் ஆயுள் பற்றி தவறாக பேசுவோரிடம், இந்த உண்மையைச் சொல்லுங்கள்.தங்க சந்தை!தங்கத்தின் மீதான மரியாதை அதிகரித்து வருகிறது. குடும்பம், கோவில்களில் மட்டுமல்லாது, நாட்டின் செல்வ வளமும், தங்கத்தால் கணிக்கப்படுகிறது. இந்தியாவில் தங்கம் இருப்பு வைத்துள்ள கோவில்கள் பல உள்ளன. கேரள மாநிலம், திருவனந்தபுரம், அனந்த பத்மநாபசாமி கோவில் அதிக செல்வம் கொண்டது. இங்கு, 1.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் இருப்பில் உள்ளது. ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுமலையான் கோவிலில், 9 ஆயிரம் கிலோ தங்கம் உள்ளதாக, திருமலை தேவஸ்தான நிர்வாகம் கூறியுள்ளது.மும்பை, சித்தி விநாயகர் கோவிலில், 160 கிலோ தங்கமும், நாசிக் அருகே சாய்பாபா கோவிலில், 376 கிலோ தங்கமும் உள்ளது.உலகெங்கும், 88 ஆயிரம் டன் வெட்டியெடுக்கப் பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள மொத்த தங்கத்தில், 75 சதவீதம், 1910-க்கு பின் வெட்டியெடுக்கப்பட்டது. ஆண்டு தோறும் தங்கம் வாங்கும் அளவும் அதிகரித்துள்ளது. தங்க சந்தை செழித்து வளர்ந்துள்ளது. உலக உற்பத்தியில், 50 சதவீதத்தை இந்தியாவும், சீனாவும் வாங்குகின்றன. இந்தியாவில் நவரத்தினம் மற்றும் நகை சந்தை, 7,500 கோடி டாலர் என கணிக்கப்பட்டுள்ளது. இது, 2025ல், 10 ஆயிரம் கோடி டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஒரு டாலர், ௭௪ ரூபாயாக உள்ளது. மதிப்பை கூட்டி, பெருக்கி கணக்கிட்டு கொள்ளுங்கள்.வெட்டி எடுக்கப்படும் தங்கத்தில், 50 சதவீதம் நகைகள் செய்ய பயன்படுகிறது. எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் பல் மருத்துவம், கதிர்வீச்சு தடுப்பு போன்ற மருத்துவ துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது தங்கம். இந்தியர்கள் வசம், 24, ஆயிரம் டன் தங்கம் உள்ளது. உலகில் அதிகமாக தங்கம் வைத்துள்ள குடும்பங்கள் இந்தியாவில் உள்ளதாக, உலக தங்கக் கழகம் கணித்துள்ளது.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !