உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

வெள்ளை வானவில்!மழைபெய்யும் முன், பின் காலையோ, மாலையோ சூரியன் இருக்கும் நேரத்தில் வானவில்லைப் பார்க்கலாம். இரவு நேரத்தில், நிலா ஒளியிலும் வானவில் தோன்றும். அதை வெள்ளை வானவில் அல்லது சந்திர வானவில் என்பர். பொதுவாக, பகல் நேரத்தில் காற்றில் மழைத்துளி அல்லது பனித்துளி இருக்கும் போது, சூரிய ஒளி, ஏழு வண்ணங்களாகப் பிரிந்து வானவில்லாக தோன்றும். சந்திர வானவில் தோன்றுவது எப்படித்தெரியுமா...இரவில் விழும் மழைத்துளி அல்லது பனித்திவலை, நிலா ஒளியில் வண்ணங்களாக பிரிந்து, நிலாவின் எதிர் திசையில் வானவில்லாக தோன்றும். இது, பிரகாசமாக இருப்பதில்லை. நிலாவின் மேற்பரப்பில் பிரதிபலிக்கும் ஒளி அளவு குறைவாக இருப்பதே இதற்கு காரணம்.சந்திர வானவில் நிறங்களை பெரும்பாலும் மனிதக் கண்களால் பிரித்தறிய முடியாது. எனவே, வெள்ளை நிறமாகவே தோன்றும். இதனால்தான், 'வெள்ளை வானவில்!' என்றே குறிப்பிடப்படுகிறது. ஆங்கிலத்தில், 'மூன்போ' என்று அழைக்கின்றனர்.சந்திர வானவில் எப்போது தெரியும் என பார்ப்போம்...பெரும்பாலும், முழுநிலா நாளான பவுர்ணமியன்று தான் சந்திர வானவில் தோன்றும்.அன்று வானில் மிகக்குறைந்த உயரத்தில் நிலவு இருக்க வேண்டும். நிலவிற்கும், அடிவானத்திற்கும் இடைப்பட்ட கோண அளவு, 42 டிகிரிக்கு மிகாமல் இருக்க வேண்டும். நிலா இருக்கும் திசையின் எதிர் திசையில், காற்றில் நீர்த்துளிகள் இருக்க வேண்டும். வானம், அடர் கருமை நிறத்தில் இருந்தால் தான் சந்திர வானவில் தெரிய வாய்ப்பு உண்டு. அமெரிக்காவில், கலிபோர்னியா, பசிபிக் கடலில் உள்ள ஹவாய் தீவு, ஆப்பிரிக்க நாடுகளான ஜாம்பியா, ஜிம்பாவே இடையே அமைந்துள்ள விக்டோரியா நீர்வீழ்ச்சி, உட்பட உலகின் சில இடங்களில் மட்டுமே சந்திர வானவில்லைக் காணமுடியும்.யானைக்குட்டியின் கதை!அமெரிக்க அதிபராக, 1857 முதல் 1861 வரை பதவி வகித்தவர், ஜேம்ஸ் புக்கன். அவருக்கு ஒரு கடிதம் வந்தது; சில பரிசுப்பொருட்களும் அதில் இருந்தன. அந்த பரிசுகள், யானை தந்தத்தில் அழகுற செதுக்கப்பட்டிருந்தன. சயாமில் இருந்து அந்த கடிதம் வந்திருந்தது. ஆசிய நாடான தாய்லாந்தின் பழைய பெயர்தான் சயாம்.அந்த கடிதத்தில்... 'அமெரிக்காவுக்கு சில யானைக்குட்டிகளை அன்பளிப்பாக தர விரும்புகிறோம். அவற்றை சிறப்பாக வளர்த்து, முறையாக பராமரித்தால், சில வருடங்களில் குட்டிகள் போட்டு பெருகும். அவற்றை கொண்டு, அதிக எடையுள்ள பொருட்களைத் துாக்கலாம். கனமான சுமைகளை ஏற்றி செல்ல பயன்படுத்தலாம்...' இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.கடிதத்துக்கு, ஜேம்ஸ் புக்கான் பதில் ஏதும் தரவில்லை. அவருக்கு பின், அமெரிக்க அதிபராக பதவி ஏற்றார், ஆபிரகாம் லிங்கன். அந்த கடிதத்துக்கு அவர்தான் பதில் அனுப்பினார். தாய்லாந்து நாடு அனுப்பியிருந்த பரிசுகளுக்கு நன்றி தெரிவித்ததுடன், 'எங்கள் நாட்டுக்கு யானை குட்டிகள் எதுவும் அனுப்ப வேண்டாம்; வலுவான பொருட்களை சுமக்கவும், துாக்கவும், ஆவியில் இயங்கும், ஆட்டோ மொபைல் இயந்திரங்களை, எங்கள் தொழில்நுட்ப வல்லுனர்கள் துணையால் கண்டுபிடித்துள்ளோம். அவை, கனமான பொருட்களை சுலபமாக சுமக்கும்; எளிதாக துாக்கும். எனவே, யானைகள் தேவையில்லை...' என குறிப்பிட்டிருந்தார். இந்த பதிலால், தாய்லாந்து யானைக் குட்டிகள், அமெரிக்கா போகும் பாக்கியத்தை இழந்தன.- என்றென்றும் அன்புடன், அங்குராசு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !