காளை மனிதன் கட்டுக்கதையா...
காளை முகமும், மனித உடலும் கொண்ட ஒருவரைப் பற்றி, கிரேக்க புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இக்காளை மனிதனுக்கு, 'மினோடார்' என்று பெயர். இவன் ஒரு அரக்கன்; கொடியவன். ஏழு இளைஞர்களையும், ஏழு இளம்பெண்களையும் ஒவ்வொரு ஆண்டும், உணவாக உண்டு வந்தான். இவன், 'லாபிரிந்த்' எனப்படும் மர்ம மாளிகையில் வசித்தான். இவன் வசித்த சுரங்கம் போன்ற கட்டடத்திற்குள் சென்றவர்கள், திரும்பி வர வழி தெரியாது, அதற்குள்ளேயே சுற்றி சுற்றி திண்டாடுவர். அப்போது, காளை அரக்கன் அவர்களை கபளீகரம் செய்து விடுவானாம். இது, கிரேக்க புராணக் கதை காட்சி...பீதியூட்டும் இந்த கதையில் வரும் மினோடார், நிஜமாகவே வாழ்ந்தாக நம்புவோரும் உண்டு; கற்பனை என்று வாதாடுவோரும் உண்டு.மத்தியக்கரை கடல் பகுதியில், கிரீட் என்று ஒரு தீவு. இங்கு, மினோயன் என்ற இனத்தவர், 4000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தனர். கிரேக்க ரோமானிய நாகரிகங்கள், மத்திய தரைக் கடல் பிரதேசத்தில் தான் உருவாகி வளர்ந்தது. இந்த கிரீட் தீவை, மினாஸ் என்ற மன்னன் ஆட்சி செய்த போது தான், மினோடார் என்ற காளை மனிதன் வாழ்ந்ததாக புராணக் கதை உள்ளது. மினோயன்களின் தலைநகரான, நாசாஸின் அரண்மனையில், மர்மங்கள் நிறைந்த, பாதாள அறைகளை கொண்ட லாபிரிந்த் என்ற, சுழல் வழிகளைக் கொண்ட சுரங்க மாளிகை இருந்தது.கிரேக்க புராணத் தகவல் படி, கிரீட் மன்னன் மினாசின் மனைவியும், ராணியுமான பாசிபேயின் மகன் தான், இந்த காளை அரக்கன் மினோடார். கடல்களின் கடவுள் பொசடியன். இவன் ஒரு வெள்ளைக் காளையை, கிரீட் தீவுக்கு அனுப்பினான். அதன் விளைவாக, காளைத்தலையும், மனித உடலும் கொண்ட அரக்கன் பிறக்கிறான். மிகவும் பலங்கொண்டவன். இக்கொடியவனை, பூமியின் கீழே சிறை வைக்க முயன்றான் மன்னன். அதற்காக, மர்மப் பாதைகள் கொண்ட, லாபிரிந்த் என்னும் மாளிகையை உருவாக்க, டாலஸ் என்ற சிற்பியைக் கேட்டான். டாலஸ் உருவாக்கிக் கொடுத்த லாபிரிந்தில், மினோடார் சிறை வைக்கப்பட்டான். அவன் பசிக்கு, ஏழு இளைஞர்களையும், ஏழு இளம் பெண்களையும், ஒவ்வொரு ஆண்டும் அனுப்பி வைத்தான் மன்னன் மினாஸ். அவர்களை பிடித்து, காளை மனிதன் தின்றான். மன்னன் மினாஸ், ஏதென்ஸ் நகரை வெற்றி கொண்டான். அப்போது, மினோடார்க்குப் பலியாக, ஏதென்ஸ் நகர இளைஞர்களை அனுப்பினான். அவர்களில், தீசியஸ் என்பவன், காளை மனிதனுக்கு முடிவு கட்டினான். இதுதான், கிரேக்க புராணக்கதை.பிரிட்டிஷ் புதை பொருள் ஆராய்ச்சியாளர், சர் ஆர்தர் இவான்ஸ், மினோயன்களின் தலைநகர் நாசாஸை, 20ம் நுாற்றாண்டின் ஆரம்பத்தில், தோண்டி ஆராய்ந்தார். அப்போது, வியப்பூட்டும் தகவல்கள் கிடைத்தன. மன்னரின் அரண்மனை, பூமிக்கடியில் கட்டப்பட்ட லாபிரிந்த், அங்கிருந்த ஓவியங்கள், மண்பாண்டங்கள், ஆபரணங்கள், வெண்கலக் கோடாரிகள், இசைக்கருவிகள் என, பல புராதனப் பொருட்கள் கிடைத்தன.இவருக்கு முன்னதாக, ஹென்றிக் சில்மான் என்னும் ஜெர்மானிய புதை பொருள் ஆய்வாளர், டிராய் நகரில் ஆகழ்வாராய்ச்சி செய்து, ஹோமரின் கதைகளில் கூறப்பட்டுள்ள கிரேக்க, டிராஜன் வீரர்களைப் பற்றிய தகவல்களுக்கான ஆதாரங்களைக் கண்டு பிடித்தார்.கிரீட் தீவில் கட்டியிருந்த அரண்மனையும், அரசு விடுதிகளும், கோவில்களும், சிறைக் கூடங்களும், பிரமிப்பூட்டும் வகையில் உள்ளன. இவை, கிரேக்க நாகரிகத்துக்கும் முற்பட்டது. ஆனால், மினோடார் பற்றிய கதையை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் கிடைக்கவில்லை. லாபிரிந்த் இருந்தது, காளைகளை மையமாக வைத்த ஓவியங்கள் இருந்தன. இளைஞர்களும், இளம்பெண்களும், முரட்டுக் காளை மீது, குட்டிக் காரணம் போடுவது போன்ற விளையாட்டுகள், ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன. காளைகளின் நிஜக்கொம்புகள், கோவிலின் பலி பீடத்தின் அருகே கிடைத்தன. மினோடார் கதைக்களத்தின், எல்லா விவரங்களும் அங்கு கிடைத்துள்ளன.கிரீட் தீவில் வசித்தவர்கள் கடைசி காலத்தில் கிரேக்க மொழி பேசியதாக தெரிகிறது. கிரீட் அரண்மனை, தீயால் கருகி அழிந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன. தோண்டி எடுக்கப்பட்ட அரண்மனை கவர்களில், கரி படிந்துள்ள அடையாளம் உள்ளது.புராணக்கதையில் கூறப்பட்டுள்ள, மினோடார் என்ற காளை மனித உருவகம் உண்மையல்ல. பிரிட்டஷ்காரர்களைக் குறிக்கச் சிங்கத்தையும், ரஷியரைக் குறிக்க கரடியையும் உருவகப்படுத்தியுள்ளனர். அதுபோல, கிரீட்வாசிகளைக் குறிக்க, மினோடார் பயன்பட்டு இருக்கலாம். காளை வழிபாடு, பண்டைக்காலத்தில் உலகம் முழுவதிலும் இருந்துள்ளது. மினாஸ் மன்னன், காளையை வழிபடுபவனாக இருந்திருக்கலாம். மினோடார் வசித்த லாபிரிந்த், ஒரு அரண்மனையே அல்ல; அது கல்லறை. அது, இறந்தவர் உடல்களை புதைக்குமிடம் என்ற கருத்தும் உள்ளது. இது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.