இளஞ்சேரல்!
சேர மன்னர் இளஞ்சேரல் இரும்பொறை, புலவர்களிடம் பேரன்பு கொண்டவர்; தமிழ்ப்பற்று மிக்கவர்; புலவர்கள் இயற்றும் பாடல்களுக்கு பரிசுகளை வாரி வழங்கி மகிழ்பவர். மகிழ்ச்சியில் எல்லா பணிகளையும் மறந்து போவார்.புலவர் பெருங்குன்றுார்கிழார், கொடிய வறுமையில் வாடினார். அதை அகற்றும் வழியை சிந்தித்தார். வாரி வழங்கும் வள்ளலை நாட எண்ணியவர் மனதில், மன்னர் இரும்பொறை நினைவு வந்தது. சேர நாட்டை நோக்கி நடந்தார். புலவரைக் கண்டதும், மன்னர் முகம் பூரித்தது. அகமும், முகமும் குளிர வரவேற்றார். இன்சொல் பேசி உபசரித்தார்.மன்னரின் உபசரிப்பை கண்டதும், வறுமை நோய் பறந்தோடியதாக நினைத்து, மகிழ்ச்சி வானில் பறந்தார் புலவர். மன்னருடன் மகிழ்ச்சியாக நாட்களை செலவிட்டார். இரும்பொறையின் சிறப்புகளை சுவை மிகுந்த பாக்களால் போற்றினார்.புலவரின் பாடலைக் கேட்டு, தேன் உண்ட வண்டு போல் மகிழ்ந்திருந்தார் மன்னர்.மாதங்கள் பல கடந்தன.புலவருக்கு, மனைவி, மக்களின் நினைவு வாட்டியது. 'பரிசு பெற்று வருவதாகக் கூறி, மாதங்கள் பல கடந்து விட்டனவே. இப்போது எப்படிப்பட்ட நெருக்கடியில் சிக்குண்டு தவியாய் தவிப்பரோ மனைவி' என எண்ணி துடித்தார்.மன்னரிடம் சூழ்நிலையை எடுத்துக் கூறி, இசைவு பெற்றால் தான், நாடு திரும்ப முடியும். எனவே, மன்னரை சந்தித்து, 'மனைவி, மக்களை பிரிந்து வந்து மாதங்கள் பல கடந்து விட்டன; ஊருக்கு போக வேண்டும்...' என்றார் புலவர். 'சரி போகலாம்...' என்று பொதுவாக கூறி, ஆட்சி அலுவலில் கவனம் செலுத்தினார் மன்னர். பலமுறை கேட்டும், அரசு பணியிலே கண்ணும் கருத்துமாய் இருந்தார் மன்னர். மிகவும் சோர்வும், வேதனையும் அடைந்தார் புலவர். சினமும், சீற்றமும் பொங்கியெழ மீண்டும் வலியுறுத்தினார்.'புலவர் பெருமானே... ஊருக்கு செல்ல வேண்டும் என்று, என்னை தொல்லைப் படுத்துவது முறையன்று. எனக்கு எவ்வளவோ பெருங்கவலைகள் உள்ளன. நாட்டை ஆள்வதில் உள்ள பிரச்னையை அறிய மாட்டீரா...' என்று படபடத்தார் மன்னர்.வருத்தமடைந்த புலவர், 'மன்னா... நான் இங்கே வந்து மாதங்கள் பல கடந்து விட்டன; குடும்ப கடமையை செய்ய வேண்டாமா...' என்றார்.'இப்போதே புறப்பட்டுச் செல்லுங்கள்; உங்களை தடுக்க யாருமில்லை...' என்றார் மன்னர்.இதைக் கேட்ட புலவருக்கு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல் இருந்தது. அவையோரெல்லாம் வியப்பு மேலிட நின்றனர்.வழிச்செலவுக்கு கூட பணமின்றி புறப்பட்ட புலவர், ஊரை அடைந்தார். அங்கு, கண்ட காட்சி, வியப்பில் ஆழ்த்தியது. காரணம், அவரது ஊர் முற்றிலும் மாறியிருந்தது. அவரது சிறிய வீடு இருந்த இடத்தில், பெரிய மாளிகை கட்டப்பட்டிருந்தது.அந்த மாளிகை முன் வந்தார் புலவர். காவலர்கள், 'நீங்கள் யார்... என்ன வேண்டும்...' என்று கேள்வியால் துளைத்தனர்.'ஐயா... நானும் இந்த ஊரைச் சேர்ந்தவன் தான். இந்த மாளிகை யாருடையதோ...' என்று கேட்டார்.'இந்த ஊர் என்று சொல்கிறீர்; யார் மாளிகை என்று தெரியவில்லையா...' என்று கேட்டனர்.'ஐயா... நான் பல மாதங்கள் இங்கு இல்லை; வெளியூர் சென்றிருந்தேன்; ஊரில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் பற்றி ஒன்றும் தெரியாது; அதனால் தான் கேட்டேன்...' என்றார்.அப்போது அங்கு வந்த பெரியவர், புலவரை அடையாளம் கண்டு, புலவரின் மனைவி, பிள்ளைகளை அழைத்து வந்தார். அவர்கள் பட்டாடை, பொன் நகையுடன் தோன்றினர். செல்வந்தர் போல் இருந்தனர். புலவரை மாளிகைக்கு அழைத்துச் சென்று, மன்னர் வழங்கிய கொடைகளை தெரிவித்தனர். அளவில்லா மகிழ்ச்சியடைந்து, மன்னருக்கு நன்றி தெரிவித்தார் புலவர்.அன்புள்ளங்களே... தமிழ்மொழிக்கு மதிப்பு கொடுத்த மன்னரைப் பற்றி அறிந்தீர்களா... நீங்களும் தாய்மொழி பற்றுடன் முன்னேற முயலுங்கள்.