தான தர்மம்!
விருதூரில் விக்னேஷ் என்ற செல்வம் மிகுந்த வணிகன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி மங்கை நற்பண்பு நிறைந்தவளாக விளங்கினாள்.கணவனிடம் அவள், ''நாள்தோறும் ஏழை எளிய மக்களுக்கு நம்மாலான உதவியைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் அந்த நல்வினை பயனாக நமக்குச் சொர்க்கம் கிடைக்கும்,'' என்றாள்.''இப்போது என்ன அவசரம்? நாம் இன்றைக்கேவா இறந்துவிடப் போகிறோம்? நான்கைந்து ஆண்டுகள் செல்லட்டும். உன் விருப்பம் போலப் பிறருக்கு உதவி செய்யலாம்,'' என்பான் விக்னேஷ்.அவளும் அவ்வப்போது, இப்படிக் கேட்டுக் கொண்டிருந்தாள்.அவனும் அதே பதிலைச் சொல்லிக் கொண்டிருந்தான்.கணவனை எப்படி நல் வழிக்குக் கொண்டு வருவது என்று அவளுக்குத் தெரியவில்லை.ஒருநாள் திடீரென்று விக்னேஷ் நோயில் படுத்தான்.அவனைச் சோதித்த மருத்துவர் அவளிடம் மருந்தைத் தந்தார்.''உங்கள் கணவருக்கு வேளை தவறாமல் இந்த மருந்தைத் தாருங்கள். விரைவில் நலம் பெறுவார்,'' என்று சொல்லிவிட்டு சென்றார்.அந்த மருந்தை அவள் கணவனுக்குத் தரவில்லை. அலமாரிக்குள் வைத்துப் பூட்டினாள்.இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவன், ''மருந்தை ஏன் அல மாரிக்குள் வைத்துப் பூட்டுகிறாய்?'' என்று கேட்டான்.''இப்போது என்ன அவசரம்? நான்கைந்து நாட்கள் போகட்டும். மருந்து கொடுக்கிறேன்,'' என்றாள் மங்கை.''நான் இறந்த பிறகா மருந்து தரப் போகிறாய்?'' என்று எரிந்து விழுந்தான்.''யார் எப்போது இறப்பார் என்பது யாருக்கும் தெரியாது. இறப்பதற்கு முன் மருந்து சாப்பிட வேண்டும். அதே போல இறப்பதற்கு முன் தான தருமங்களையும் செய்ய வேண்டும். அதைத் தள்ளிப் போடக் கூடாது,'' என்றாள்.இதைக் கேட்டதும், அவன் ஒரு உண்மையை உணர்ந்தான். இறப்பு என்பது எப்போது வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. நாம் இருக்கும் போது, மற்றவர் களுக்கு நம்மால் ஆன உதவியை செய்ய செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தான்.தன் மனைவியிடம், ''நீ என் அறிவுக் கண்ணை திறந்து விட்டாய். இனிமேல் நல்லது செய்வதற்குத் தாமதம் செய்ய மாட்டேன். இன்றே தான தருமம் செய்யத் தொடங்குகிறேன்,'' என்றான் விக்னேஷ்.இதைக் கேட்ட மங்கை மகிழ்ந்தாள்.***