ஊரடங்கு நேரத்திலும் சிறுவர்மலர் வாசகி உதவி!
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் படித்தவர் தனலட்சுமி. இவர் பல்வேறு கலைகளில் சாதனைகள் படைத்து வந்தார். இதை பாராட்டி, தினமலர் சிறுவர்மலர் டிசம்பர் 9, 2016 இதழில், 'ஸ்டூடண்ஸ் க்ரவுன்' பகுதியில் செய்தி வெளியிட்டு, உரிய பரிசும் வழங்கப்பட்டது.இதைக் கண்ட, மதுரையைச் சேர்ந்த தினமலர் வாசகி ஜானகி, நேரடியாக தனலட்சுமியை சந்தித்தார். வறுமையில் வாடிய தனலட்சுமி படிப்புக்கு உதவ முன்வந்தார். கல்வியை முடிக்கும் வரை, படிப்புக் கட்டணத்தை ஏற்பதாக உறுதி அளித்தார். அதன்படி, ஆண்டு தோறும் உதவி வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்திலும், மனித நேயத்தோடு உதவியைத் தொடர்கிறார். பள்ளி படிப்பை முடித்த தனலட்சுமி, பட்டப்படிப்புக்காக அரசு பொறியியல் கல்லுாரியில் சேர்ந்துள்ளார். அதற்கு உரிய கட்டணத்தை, தனலட்சுமி வீடு தேடி சென்று வழங்கினார் வாசகி ஜானகி. இந்த உதவியால் மாணவியின் குடும்பம் நெகிழ்ந்துள்ளது. தனலட்சுமி கூறும்போது, 'கொரோனா தொற்று காலத்திலும், என் படிப்பு கட்டணத்தை வழங்கி வருவது மகிழ்ச்சி தருகிறது... 'இதற்கு காரணம், 'சிறுவர்மலர்' இதழ் என் திறமைகள் பற்றி வெளியிட்ட கட்டுரை தான். அதன் தொடர்ச்சியாக கிடைத்த இந்த உதவியை பயன்படுத்தி வாழ்வு லட்சியமான, ஐ.பி.எஸ்., அதிகாரி ஆவேன்...' என நெகிழ்ந்தார்.