கல்வி வள்ளல்!
தர்மபுரி மாவட்டம், மெணசி, அரசு உயர்நிலைப் பள்ளியில், 1978ல், 9ம் வகுப்பில் படித்த போது நடந்த சம்பவம்...அன்று ஆங்கில ஆசிரியர் முத்துசாமி, பாடம் நடத்திக் கொண்டிருந்தார். தலையை இருக்கையில் முட்டுக்கொடுத்தவாறு சற்று ஆசுவாசமாக கவனித்துக் கொண்டிருந்தேன். அது, அவரை அலட்சியப்படுத்தியதாக எண்ணி, சகட்டுமேனிக்கு திட்டினார். அந்த கடின சொற்கள் மனதில் திரும்பத் திரும்ப வந்து அலைக்கழித்தது.ஒழுக்கத்தை பேணி வந்த நான் அதிலிருந்து விடுபட, 'அரசு பொதுத் தேர்வில், முதன்மை மதிப்பெண் பெற்று சாதிக்க வேண்டும்' என உறுதி ஏற்றேன். அதற்கு உறுதுணையாக இருந்தார் அறிவியல் ஆசிரியர் திருமலை. அவரது அறையிலே தங்க அனுமதித்து பாடம் கற்பித்து ஊக்கமளித்தார்.உற்சாகமாக படித்து, 11ம் வகுப்பு பொதுதேர்வில் மாவட்ட அளவில் முதன்மை மதிப்பெண் பெற்று சாதித்தேன். மருத்துவம் படிக்க துாண்டினார் அந்த ஆசிரியர். தன் சொந்த ஊரான திருச்செங்கோடுக்கே அழைத்து சென்று அதற்கு ஏற்பாடு செய்வதாக கூறி, என் தந்தையிடம் அனுமதி கேட்டார். மறுத்ததால் அது கைகூடவில்லை.தயக்கம் காரணமாக தொடர்ந்து அவரை சந்திப்பதை தவிர்த்து வந்தேன். சில ஆண்டுகளுக்கு முன், நான் எழுதிய கவிதை நுாலில், 'இதயம் பற்றி, இதயத்துடன் கற்றுத்தந்த என் அறிவியல் ஆசிரியர் திருமலைக்கு சமர்பணம்' என முதல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். அவரது திருக்கரங்களில் கொடுத்து ஆசி பெறும் துடிப்புடன் தேடி சென்றேன். அவர் உயிருடன் இல்லாததை அறிந்து அதிர்ச்சியுற்றேன்.எனக்கு, 59 வயதாகிறது. அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறேன். அந்த ஆசிரியர் விருப்பத்தை நிறைவேற்ற முடியாவிட்டாலும், என் மகளை மருத்துவம் படிக்க வைத்து ஆறுதல் பெற்றேன். உணர்வுடன் உதவிய, அந்த கல்வி வள்ளலை வணங்குகிறேன்.- க.சேகர், சென்னை.தொடர்புக்கு: 73054 01495