உள்ளூர் செய்திகள்

அர்ப்பணிப்பு!

ஸ்ரீவில்லிபுத்துார், சி.எம்.எஸ்.உயர்நிலைப் பள்ளியில், 1953ல் 11ம் வகுப்பில் படித்தபோது, தலைமை ஆசிரியராக இருந்தார் ஜி.ஐ.மாணிக்கவாசகம். கோட், சூட், டை அணிந்து ஹிட்லர் மீசையுடன் திரைப்பட நடிகர் போல் இருப்பார்.அவரை, 'ஐயா' என்று தான் அழைக்க வேண்டும்; ஆங்கிலத்தில், 'சார்' என சொல்லக்கூடாது.அன்பு, நேர்மை, நேரம் தவறாமையின் மறு உருவமாக இருந்தார். ஜாதி, சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர். படிப்பு மற்றும் விளையாட்டில் சிறந்தவர்களை ஊக்குவித்து பாராட்டுவார்; ஒழுக்கம் தவறினால் தண்டிப்பார். தினமும் காலை இறை வழிபாட்டுக் கூட்டத்தில் இவற்றை நிறைவேற்றுவார். பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு விடுதி கட்டணம், 11 ரூபாய் தான். சலவைக் கூலி, முடி வெட்டும் கூலி, வாரம் தவறாமல் எண்ணெய் தேய்த்தல் போன்ற செலவுகளும் இதில் அடங்கும். தகுதியானவர்களுக்கு, ஊக்க தொகை பெற்று கொடுப்பார். இவரது உதவி மற்றும் கண்டிப்பால் உயர்ந்தவர்கள் பலர். தமிழக சபாநாயகராக இருந்த காளிமுத்து, மதுரை மேயராக இருந்த பெ.சீனிவாசன் ஆகியோர் இவரது மாணவர்கள். இவரது வழிகாட்டுதலால் படித்து, அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். என் வயது, 85; அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அந்த தலைமை ஆசிரியர் நினைவை போற்றுகிறேன்.- கு.மகாலிங்கம், விருதுநகர்.தொடர்புக்கு: 97906 25406


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !