உள்ளூர் செய்திகள்

தொடர்கதை - தாரா ஆற்றிய அருஞ்செயல் - பகுதி - (4)

அரண்மனைப் பூங்கா போர்க்களமாகியது. உடைவாள்கள் "டாண் டாண்' என்று ஓசையை எழுப்பின; சூரிய ஒளியில் "பளிச் பளிச்' என்று மின்னின அவை. கணங்கள் ணித்துளிகளாக வளர்ந்து கொண்டிருந்தன. ஒளி வீச்சும் ஒலி வீச்சும் ஓயவில்லை. அரண்மனைப் பூங்காவில் அரண்மனைத் தோழிகளும், பணியாளர்களும் கூடிவிட்டனர். அவர்கள் விளை யாட்டுப் போர் நடத்தவதாக எண்ணி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஜெயமல்லன் தாராவின் வாளைத் தட்டி வீழ்த்திவிட தன் வாளை அவள் வாள் மீது விசையாக வீசினான். தாரா அதைத் தடுத்து விட்டுத் தன் வாளை அதிக விசையோடு அவன் வாள் மீது வீசினாள். "டொங்' என்ற ஓசையோடு தரையில் விழுந்தது ஜெயமல்லன் வாள். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தங்களை மறந்து கை கொட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.தாராவின் சொற்கள் ஜெயமல்லன் உள்ளத்தில் வேலாகப் பாய்ந்து வேதனையைத் தந்தது. அவமானத்தின் மேல் அவமானம் அடைந்த அவன் அரண்மனை வேலைக்காரர்களைப் பார்த்தான். ஒருகணம் வாளை எடுப்போமா வேண்டாமா? என்று சிந்தித்தான். ""வாளை எடுக்காவிட்டால் சரணாகதிதானே? ஒரு பெண்ணிடம் தோற்பதா? அதுவும் என் வீரத்தை நாடியவன் மகளிடமே தோற்பதா? கூடாது கூடாது!'' என்று எண்ணினான். மின்னல் வேகத்தில் பாய்ந்து கீழே கிடந்த வாளை எடுத்து, ""முடிவு தெரிய வேண்டுமா? உனக்கே முடிவு கட்டி விடுகிறேன். இந்த வீச்சுக்கு நீ தப்ப முடியாது!'' என்று கூறிவிட்டு வாளைச் சுழற்றி மோதினான். தாரா அவன் வாள் வீச்சுக்குச் சுழன்று சுழன்று ஈடுகொடுத்துப் போரிட்டாள். ஜெயமல்லன் அவள் வாள் வீச்சைக் கண்டு திகைத்து, இவள் தாராவா இல்லை தாரா வடிவில் வந்திருக்கும் துர்க்கையா?'' என்று திகைத்தான். ஒருவர் வாளை ஒருவர் தட்டி விட வேண்டும் என்று தொடங்கிய போர் ஒருவரை ஒருவர் வீழ்த்தி விடவேண்டும் என்ற உச்சநிலைக்கு போய்விட்டது. சூரசேனன் செய்தியறிந்து ஓடி வந்தான். அவன் அங்கு வருவதற்குள் காரியம் மிஞ்சி விட்டது. ஜெயமல்லனின் தலை தரையில் உருண்டு அவன் கால் மீது மோதி நின்றது. அது தன் செயலுக்கு அவன் தாளை வணங்கி மன்னிப்புக் கேட்பது போலிருந்தது. சூரசேனன் அதைக் கண்டு அச்சமும் பதற்றமும் கொண்டு, ""தாரா! என்ன காரியம் செய்து விட்டாய். உன் எதிர்காலக் கணவனையே கொன்றுவிட்டாயே!'' என்று கலங்கினான். தாரா அலட்சியமாக குருதிக் கறைப் படிந்த தன் உடை வாளை இடையில் தொங்கிக் கொண்டிருந்த உறையில் சொருகிக் கொண்டே, ""அப்பா! நான் தகாத காரியம் எதையும் செய்து விடவில்லையே! இந்தக் கயவனா எதிர்காலக் கணவன்? பெண்ணாசை கொண்டலைந்த பேயன். பெண்ணை பேதை என்று இழிவாக நினைத்து விட்டான். தனித்திருக்கும் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டவனுக்குத் தக்க தண்டனை இதுதான்!'' என்று கூறிவிட்டு அரண்மனை நோக்கி நடந்தாள். தாரா மிடுக்கோடு நடந்து செல்வதைக் கண்டு எல்லாரும் வியப்பால் வாயடைத்துப் போய் அவளையே பார்த்துக் கொண்டு நின்றனர்.பிருதிவிராஜன் இவன் ஜெயமல்லனின் தம்பி! தூதன் ஒருவன் ஜெயமல்லன் கொல்லப்பட்ட செய்தியைச் சொன்னதும் வாளை உருவி, ""என் அண்ணனைக் கொன்றது யாராக இருந்தாலும் அவர்கள் தலையை மண்ணில் உருளச் செய்வேன்!'' என்று சூளுரைத்தான். தூதன் ஜெயமல்லன் மாளும் நிலை ஏற்பட்டதற்குரிய காரணத்தைக் கூறியதும் உருவிய வாளை உறையில் திணித்துக் கொண்டான். ""வீரத்திற்கே முதலிடம் தரும் எங்கள் குடும்பத்தில் தோன்றியவன் பெண்ணாசையால் குடும்பப் பெருமைக்கு மாசு தேடிவிட்டான். காமுகன் என்ற களங்கம் தொடர்ந்து வராமலிருக்க நங்கை ஒருத்தி நையப்புடைத்து விட்டாள் அவனை. மணமாகுமுன் சரசமாட அழைத்தால் எந்தக் கற்புடைய காரிகையும் பொறுக்க மாட்டாள். எங்கள் குடும்பம் பெண்ணாசை பிடித்த குடும்பம் அல்ல என்பதைச் சூரசேனனுக்கும் தாராவுக்கும் மெய்ப்பித்துக் காட்ட வேண்டும்!'' என்று கூறிக் கொண்டான் பிருதிவி.பிருதிவியின் ஓலையைக் கண்ட சூரசேனன் இதில் ஏதேனும் சூதிருக்குமோ என்று குழம்பினான். தாராவைக் கண்டதும், ""மகனே! பார்த்தாயா உன் அவசரச் செயலால் ஏற்பட்ட விபரீதத்ததை!'' என்றான் செய்தியைக் கூறாமல். கையிலிருந்த ஒலையை வாங்கிப் பார்த்துவிட்டு மீண்டும் அவன் கையில் கொடுத்து விட்டு அவன் முன் இரு கைகளையும் மார்பில் கட்டிக் கொண்டு, ""அப்பா! ஓலையில் விபரீதம் ஒன்றும் காணப்படவில்லையே. விவேகம் தானே காணப்படுகிறது!'' என்றாள். ""தாரா! அது விவேகமல்ல, தந்திரம். பிருதிவிராஜன் ஜெயமல்லனின்  உடன் பிறந்த தம்பி. அதை மறந்து விடாதே. அவன் ஆப்கானியர்களிடமுள்ள பகுதிகளை மீட்டுத் தருவானாம். உன்னையும் மணந்து கொள்வானாம். படைகளைத் திரட்டுவதிலும் படைக் கருவிகளை உருவாக்குவதிலும் ஈடுபட்டிருக்கிறானாம். இதை நாம் நம்ப வேண்டுமா? அண்ணனைக் கொன்ற உன்னைப் பழிவாங்கவே இந்தச் சூழ்ச்சி!'' என்றான் சூரசேனன்.""அப்பா! பிருதிவிராஜன் சுத்த வீரர். நேர்மைக்கும், நீதிக்கும் அஞ்சுபவரே தவிர, பகைவர்களின் வீரத்திற்கு அஞ்சாதவர். இதை நான் ஜெயமல்லன் மூலமாகவும், நம் ஒற்றர் மூலமாகவும் முன்பே அறிந்திருக்கிறேன். அவர் உங்கள் ஐயத்திற்கு அப்பாற்பட்டவர்'' என்றாள் தாரா. ""உன்னை விட அறிவாளி வேறு யார் இருக்கின்றனர்? நீயே இப்படிச் சொல்லும் போது நான் என்ன சொல்ல முடியும்!'' என்று கூறினார் சூரசேனன். ""தாரா! டோங்கு பகுதியை மீட்பதுதான் நம் லட்சியம். பிருதிவிராஜனை நீயே நல்லவன், வல்லவன் என்று கூறிவிட்டாய். உன்னை ஏற்றுக் கொள்வதாக பிருதிவியும் உறுதி கூறியிருக்கிறான். முன்போல் போருக்குப் பின் திருமணம் என்றில்லாமல், போருக்கு முன் திருமணம் என்று வைத்துக் கொள்வோமே!'' என்றார். ""தங்கள் விருப்பப்படி செய்யுங்கள்! எப்போதும் அப்பாவை எதிர்க்கும் மகள் என்ற பழியாவது மிஞ்சட்டும் எனக்கு!'' என்று மறைமுகமாகத் தன் இசைவைக் கூறிவிட்டு அங்கிருந்து நழுவினாள் தாரா. ""என் மகள் மகா கெட்டிக்காரி!'' என்று தனக்குள் கூறிச் சிரித்துக் கொண்டார் சூரசேனன்.

(- 4 தொடரும்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !