மருமகள்!
மருதமலை இளவரசன் இளமாறன் அழகும், நற்பண்புகளும் நிறைந்தவ னாக விளங்கினான். அவனுக்குத் திருமணம் செய்ய அரசி நினைத்தாள். பல நாட்டு இளவரசியருள் நான்கு பேரைத் தேர்ந்து எடுத்தாள்.அவர்கள் நால்வரும் மகிழ்ச்சியுடன் மருதமலை வந்து அரண்மனையில் தங்கினர். அவர்களிடம் இளவரசன் நன்றாக பேசினான்.இளமாறனை அழைத்த அரசி, ''மகனே! நான்கு இளவரசிகளில் உனக்கு யாரைப் பிடித்திருக்கிறது என்று சொல். திருமணம் செய்து வைக்கிறேன்,'' என்றாள்.''அவர்கள் நால்வரும் அழகும், நற்பண்பும் உடையவர்களாக விளங்கு கிறார்கள். நீங்கள் யாரைத் தேர்ந்து எடுக்கிறீர்களோ, அவர்களையே திருமணம் செய்து கொள்கிறேன்,'' என்றான்.அவர்களில் யாரைத் தேர்ந்து எடுப்பது என்று குழம்பினாள் அரசி.மருதமலை நாட்டில் கொடிய நோய் பரவுகிறது. அந்த நோய் தாக்கிப் பலர் இறந்து விட்டனர். அந்த நோய் தலைநகரத்திற்குள் பரவ வாய்ப்பு உள்ளது என்ற செய்தி எங்கும் பரவியது.அரண்மனையில் இருந்த இளவரசியரும் இதைக் கேள்விப்பட்டனர்.'இங்கே வந்து சிக்கிக் கொண்டோமே' என்று வருந்தினர்.நான்கு நாட்கள் சென்றன.அழுது புலம்பியபடி நான்கு இளவரசியரிடம் வந்தாள் அரசி.''ஐயோ! என்ன செய்வேன்? அந்தக் கொடிய நோய் இளவரசனையும் தாக்கி விட்டது. கன்னிப் பெண் ஒருத்தி தன் மூச்சுக் காற்றை இளவரசனின் முகத்தில் ஊத வேண்டும். அப்படிச் செய்தால் இளவரசன் உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு. இல்லை யேல் இறந்து விடுவான் என்கின்றனர் மருத்துவர். உங்களில் யார் இளவரசனுக்காக உயிரை விட முன்வருகிறீர்கள்?'' என்று புலம்பினாள் அரசி.''இளவரசனைத் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம் என்று இங்கே வந்தோம். எங்கள் உயிருக்கே உலை வைக்கிறீர்களே. நாங்கள் இப்போதே புறப்படுகிறோம்,'' என்று இளவரசியர் மூவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.ஒருத்தி மட்டும், ''அம்மா! இளவரசர்தான் என் கணவர் என்ற உறுதியுடன் இங்கே வந்தேன். அவர் இல்லாமல் எனக்கு வாழ்வு இல்லை. அவருக்காக உயிரை விட முடிவு செய்து விட்டேன். அவரிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள். இறைவன் அருள் இருந்தால், நாங்கள் இருவரும் உயிர் பிழைப்போம்,'' என்று கண்ணீர் மல்க சொன்னாள்.அவள் கண்ணீரைத் துடைத்த அரசி, ''இந்நாட்டு இளவரசி கண்ணீர் விடக் கூடாது. எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.''இங்கே எந்த நோயும் யாரையும் தாக்க வில்லை. இளவரசன் நல்ல உடல் நலத்தோடு இருக்கிறான். இப்படி ஒரு சூழ்ச்சி செய்ததால், எனக்கு நல்ல மகள் கிடைத்தாள்,'' என்று பூரிப்புடன் சொன்னாள்.ஒரு நல்ல நாளில் இளவரசனுக்கும், இளவரசிக்கும் திருமணம் இனிதே நடந்து முடிந்தது. இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தனர். ***