உள்ளூர் செய்திகள்

எலிகளின் ஆசை!

அன்று இரவு, மிங்கு எலிக்கு மிகவும் பசித்தது. துாங்கிக்கொண்டிருந்த டிங்குவை எழுப்பி, 'வா உணவு தேடி செல்வோம்...' என்றது. இரண்டும் ஒவ்வொரு வீடாக சென்றன.வீடுகளில் உள் தாழ்ப்பாள் போட்டு கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன.'அங்கே பாரு...' சுட்டிக்காட்டியது மிங்கு. அந்த வீடு பூட்டியிருந்தது. இரண்டும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தன.'டிங்கு... நீ தான் குட்டியாக இருக்கிறாய்... கதவின் அடியில் உள்ள இடைவெளியில் நுழைந்து உள்ளே போக வழி இருக்கிறதா என பார்த்து கூறு...' என்றது மிங்கு.'என்ன பொருட்களை, எங்கு வைத்துள்ளனர் என்பது உனக்கு தானே அத்துபடி... நீயே பாரு...' என்றது டிங்கு.'நடிக்காதே... வயலில் நுழைந்தால், தானியங்களை கொறிச்சு தள்ளிடுறே... உனக்கா ஒன்றும் தெரியாது...' என இரண்டும் வாக்குவாதம் செய்தபடி, தண்ணீர் குழாயில் நுழைந்து சமையலறையை அடைந்தன.'குளிர்சாதன பெட்டியில் இருக்கும் உணவை ருசிப்போமா...' என்றது டிங்கு.'ஐயோ... பழைய கறி, பிரியாணியை மூட்டைக்கட்டி வெச்சு இருப்பாங்க...' என்றது மிங்கு.முழு பலத்தை பிரயோகித்து பிரீசரை திறந்தன. அங்கு விதவிதமான அசைவ உணவு பொருட்கள் நிறைந்து வழிந்தன.'எப்போ வாங்கியதோ... ச்சே... ஒரே நாற்றம்...' மூக்கை பிடித்தபடி பேசியது டிங்கு.'மக்கள் ரொம்ப சோம்பேறியாகி விட்டனர். அதனால, புதுசு புதுசாக நோய் எல்லாம் வருது...' அனுதாபத்துடன் கூறியது மிங்கு.'சரி... எப்போதும் போல், தேங்காய் சாப்பிடலாம்; கூடவே, தக்காளி இருக்கு... வெளியே எடுத்து செல்லலாம்; இந்த துர்நாற்றத்துல சாப்பிட்டா, வாந்தி வந்துடும்; அப்புறம் எந்த மருத்துவமனைக்கு போறது; அங்கே இடம் இல்லாம தவிக்குறாங்க...'கூறியது டிங்கு.தேங்காய், தக்காளிகளை எடுத்தபடி வந்த வழியே திரும்பின எலிகள்!பட்டு குட்டீஸ்... நம்ம டிங்கு, மிங்குவைப் பார்த்தீர்களா... அவர்களைப் போல் நீங்களும் கெட்டுப் போகாத, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். சரியா?ஞானகுரு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !