சாணக்கியரின் சீடன்!
பாரத தேசத்தின் பொற்காலம் என்று புகழப்படும் ஒரு சகாப்தத்தை உருவாக்கிய ஒரு மன்னன், இளமையில் அநாதையாக ஆதரிப்பாரின்றிப் பசியும், பட்டினியுமாகச் சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவித்தார். தாயின் வயிற்றிலிருக்கும் போதே, தந்தையை இழந்த துர்ப்பாக்கியசாலி; அவர் தந்தை எப்படிப்பட்டவர்? புத்த பகவானின் சாக்கிய வம்சத்து க்ஷத்திரியர் களின் ஒரு கிளையில் வந்தவர். இப்படிப் பிறக்கும்போதே தந்தையை இழந்த ஒரு குழந்தை தான் பிற்காலத்தில் பாரத சாம்ராஜ்யத்துக்கு அடிகோலிய புகழ் பெற்ற சக்கரவர்த்தியாக விளங்கியது. அவர் யார் என்று இன்னும் புரியவில்லை யல்லவா?சந்திர குப்த மவுரியர்தான் இந்த ஒப்பற்ற அரசர். 'மோரி' என்ற க்ஷத்திரிய வம்சத்தைச் சேர்ந்தவராதலால் இவருக்கு, 'மவுரியர்' என்ற பட்டப் பெயர் வந்தது.அநாதையாகிவிட்ட சந்திர குப்தரின் தாயை அவரது மாமா பாடலிபுரத்துக்கு அழைத்து வந்தார். அங்கு வந்த பிறகுதான் சந்திரகுப்தர் பிறந்தார். தான் வாழவே முடியாத நிலையில் குழந்தையை வளர்க்க முடியாமல் தவித்தாள் தாய்.இதைக் கண்ட அவர் சகோதரர், ''சகோதரி, உன் குழந்தையை வசதியாக வாழும் ஒரு தனவந்தரின் வீட்டில் கொண்டு போய் அவர் களுக்குத் தெரியாமல் வைத்து விட்டு வந்து விடு. இந்த அழகிய குழந்தையை யாரும் வளர்க்கத் தயக்க மாட்டர். இதனால் குழந்தையும் நல்ல இடத்தில் பசியின்றி வளரும், உன் பாரமும் குறையும்,'' என்று யோசனை கூறினார்.சகோதரரின் யோசனைப்படியே, சந்திர குப்தரின் அன்னை, தன் குழந்தையை ஒரு பசுமாட்டுக் கொட்டிலில் விட்டு வந்தாள். பசுக்களின் சொந்தக்காரன் நல்லவன். தன் கொட்டியிலில் கிடக்கும் குழந்தையை மகிழ்ச்சி யோடு வீட்டுக்குக் கொண்டு போய் வளர்க்க லானான். இப்படி வளர்ந்து சற்றுப் பெரியவ னானதும் அந்த இடையன், குழந்தை சந்திர குப்தனை ஒரு வேடனுக்கு விற்றுவிட்டான். அந்த வேடனோ-தன் கால்நடைகளை மேய்த்து வரும்படி சிறுவன் சந்திர குப்தனை நியமித்தான்.எங்கிருந்தால் என்ன? மாணிக்கம், மாணிக்கம் தானே? கால்நடைகளை மேய்க்கும் தொழிலானாலும் அதிலும் அவன் தலைமை தாங்கி தனித் தன்மையோடு விளங்கினான். ஊருக்கு வெளியே மற்ற பையன்களுடன் விளையாடும்போது இவன் மன்னனாகவும், மற்ற பையன்களைக் குடிபடைகளாகவும், பாவித்துக் கொண்டு விளையாடுவான். ராஜ விளையாட்டுக்காக, அரச வேஷம் ஏற்று, அரியணை என்று மண் மேட்டைச் சிங்காதனமாக எண்ணி அமர்ந்து சபை கூட்டி,குறை கேட்டு, நியாயம் வழங்கிய மாடு மேய்த்த சிறுவன், உண்மையிலேயே இந்தியாவை ஒரு குடைக் கீழ் ஆளும் சக்கரவர்த்தியாக விளங்கப் போகிறான் என்பதை அவன் தோழர்கள் அறிந்திருக்க வில்லை. ஆனால், அதிர்ஷ்ட தேவதையின் முடிவு அதுவாகத்தான் இருந்தது.ஒருநாள் இவர்கள் இப்படி மன்னன் குடிபடைகள் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக ஓர் அந்தணர் வந்தார்.தட்சசீலத்தைச் சேர்ந்த வேதியரான அவர் சகல கலைகளிலும் விற்பன்னர். விஷ்ணு குப்தர் என்றும் இவருக்கு ஒரு பெயர் உண்டு. குழந்தைகளின் விளையாட்டைக் கண்டார். அவரது கூரிய பார்வை, மன்னனாக அமர்ந்து நீதி வழங்கும் சிறுவன் மீது பதிந்தது. அவனிடம் ஒளிந்துள்ள தகுதிகளையும், மேதைமையையும் உணர்ந்துக் கொண்டார். இந்தச் சிறுவனால் இந்த நாடு மகோன்னதமான நிலையை அடையப் போகிறது என்று தீர்க்க தரிசியான அவர், ஒரு தீர்மானத்துக்கு வந்தார். விளையாட்டு முடிந்ததும் சிறுவனை அழைத்து விசாரித்தார்.பிறகு அவனுடன் வேடனிடம் சென்றார். அவனுக்கு அந்தக் காலத்து நாணயமான, 'கார்ஷா'வில் ஆயிரம் கார்ஷாக்களை எண்ணிக் கொடுத்து, சந்திர குப்தனை விடுதலை விலைக்கிக் கொண்டு சென்று தம்முடன் தட்சசீலத்துக்கு அழைத்துப் போனார்.மாடு மேய்த்துக் கொண்டிருந்த பையனுக்குச் சாணக்கியர் கல்வி கற்பித்தார். போர் முறைகளைச் சொல்லிக் கொடுத்தார். ஏழு எட்டு ஆண்டுகள் வரை இப்படிக் குருகுல வாசம் செய்து வந்தான் சந்திர குப்தன். இந்தச் சமயத்தில் பாரத நாடு எத்தகைய நிலையி லிருந்தது என்பதைத் தெரிந்து கொண்டால் தான், சந்திர குப்த மவுரியரின் பெயர், சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படுவதற்கு எப்படித் தகுதி பெற்றது என்பது விளங்கும்.கிரேக்க மாவீரன் அலெக்ஸாண்டர் பாரதத்தின் மீது படையெடுத்து வந்திருந்தான். வடமேற்குப் பகுதி சிறு சிறு ராஜ்யங்களாகச் சிதறுண்டு கிடந்தது. இந்திய அரசர்களுக் குள்ளே ஒற்றுமை இல்லை. பிளவு, பலவீனம் இரண்டும் கிரேக்க மன்னன் அலெக்ஸாண்டருக்கு சாதகமாக ஆயின.மகத சாம்ராஜ்யத்தை அப்போது ஆண்டவன் மகா பத்மநந்தன். தந்தையைக் கொன்று சிங்காதனமேறியவன். பெரிய வீரன்; ஆனால், தனது தீய செயல்களினால் மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருந்தான். இவனது புதல்வர்களோ எட்டுப் பேர். இவர்களையும் சேர்த்து நவநந்தர்கள் என்று அழைத்தனர் மக்கள். நவநந்தர்களின் கொடுங்கோல் ஆட்சியினால் குமுறிக்கொண்டு இருந்தனர் குடிமக்கள்.அலெக்ஸாண்டருடன் இந்திய மன்னர்கள் அடைந்த தோல்வியைக் கண்டு, சந்திர குப்தனின் நெஞ்சம் குமைந்தது. அதனால் வீரமும், துணிவும் கொண்ட அவர், 'அந்நியர் களை இந்த மண்ணிலிருந்து விரட்டியே தீருவேன்' என்று சபதமெடுத்துக் கொண்டார். மாற்றானின் போர் முறைகளில் உள்ள சிறப்பியல்புகளை உன்னிப்பாகக் கவனித்தார். தம்மிடையே உள்ள குறைபாடுகளையும் உணர்ந்தார். ஆசிரியர் சாணக்கியரும், மாணவன் சந்திர குப்தனும் அறிவும் ஆற்றலுமாகச் செயல்பட்டனர்.பாஞ்சால மக்களின் மனதில் சுதந்திர எழுச்சியை உருவாக்குவதற்காக சாணக்கியரும், சந்திர குப்தரும் நாடு முழுவதும் சுற்றுப் பயணத்தை மேற் கொண்டனர். பாஞ்சால மக்கள் வீரத்துக்குப் புகழ் பெற்றவர்கள். தக்க தலைவன் இல்லாமையால் உற்சாகம் குன்றி இருந்தனர். இப்போது வழிகாட்டியாக, அறிவாளி சாணக்கியரும், படைத்தலைவனாக வீரன் சந்திர குப்தனும் கிடைக்கவே, பொங்கி எழுந்தனர்.சந்திர குப்தன் தன் படையில் சேர்ந்த ஏராளமான வீரர்களுக்குப் புதிய முறையில் போர்க் கலையைப் பழக்கி வைத்தான். இதற்குள் அலெக்ஸாண்டர் மேற்கொண்டு தம் படையெடுப்பைத் தொடராமல் திரும்பி விட்டார். ஆனால், அவர் வென்ற பகுதிகளில் கிரேக்கப் பிரதிநிதிகள் ஆட்சி புரிந்து வந்தனர். அவர்களையெல்லாம் போரில் வென்று, மூன்றே ஆண்டுகளில் பாரத மண்ணில் யவனப்பூண்டே இல்லாமல் செய்து விட்டார் சந்திர குப்தர்.இப்படியே பாரதத்தின் மேற்குப் பகுதியை மீட்ட பின், உள் நாட்டிலே தம் கவனத்தைத் திருப்பினார். அவரது குறிக்கோள் மகத தேசம். நவநந்தர்களின் கொடுங்கோலாட்சியில் மக்கள் படும் துயரம் பற்றி அவருக்கு முன்பே தெரியும். பெரும் படை பலம்கொண்டவன் நந்த மன்னன். அவனை எதிர்ப்பதற்குப் போது மான படை வலிமை பெற்றிருக்கவில்லை சந்திரகுப்தர். ஆனால், சாணக்கியரின் ராஜ தந்திரமும், இவருடைய மனோ வலிமையுமே நவநந்தர்களை எதிர்க்கும் துணிவைக் கொடுத்தன. எல்லாவற்றுக்கும் மேலாக மகத மன்னன் குடிமக்களின் வெறுப்பைப் பெற்றிருந்தான். சாணக்கியரின் ராஜ தந்திரம், நந்த மன்னரின் பெரிய அதிகாரிகளைச் சந்திர குப்தர் பக்கம் வரும்படி செய்தது. எண்ணி மாளாத படைகொண்ட நவநந்தர்களைப் போரில் விரட்டியடித்து வெற்றி வாகை சூடினார். பாஞ்சால அதிபதியாக இருந்தவர், மகத சாம்ராஜ்யாதிபதியானார். இந்த இரு வெற்றிகளை அடுத்து, அவர் மற்ற பகுதிகளை யும் தம் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற் காகப் பெரும் படை ஒன்றை திரட்டினார். வெறும் மண்ணாசையில் மட்டும் இவர் இப்படிப் படையெடுக்க முடிவு செய்ய வில்லை. சிறுசிறு ராஜ்யங்களாக இருப்பதனால், மன்னர்கள் தங்களுக்குள் சண்டையும் பூசலுமிட்டுக் கொண்டு, அந்நிய நாட்டான் உள்ளே வருவதற்கு வாய்ப்பு அளித்து விடுகின்றனர். எல்லா அரசர்களையும் ஒரு குடைக் கீழ் கொண்டு வந்தால், போர் என்று வரும்போது, எல்லாரும் ஒருங்கிணைந்து எதிர்க்கலாம் என்பதே சாணக்கிய தந்திரம். அதையே செயல் படுத்தினார் சந்திரகுப்தர். மவுரியப் படைகளை எதிர்த்த மன்னர்கள் எல்லாரும் படுதோல்வி கண்டனர்.இப்படியாக, சந்திர குப்தரின் சாம்ராஜ்யம் கிழக்கே வங்கத்திலிருந்து, மேற்கே இந்துகுஷ் மலை வரையிலும், வடக்கே இமயத்திலிருந்து, தெற்கே நர்மதை நதி வரையிலும், விரிந்து பரந்து கிடந்தது. இத்தனை பெரிய பகுதியை மிக்க திறமையோடு ஆட்சி புரிந்தார் என்பதனால்தான் சந்திரகுப்தரின் பெயரைச் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறித்திருக்கின்றனர்.பெரிய அதிகாரங்கள் மன்னரின் நேரடி மேற்பார்வையில் இருந்தது. ஆட்சியைக் கவனிக்க அமைச்சர் குழு இருந்தன. மத்திய ஆட்சி பதினெட்டு இலாக்காக்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. சாம்ராஜ்யம் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ராஜப் பிரதிநிதிகள் அப்பகுதிகளை ஆட்சி புரிந்தனர். கிராமங்களை நிர்வகிக்கக் குழுக்கள் இருந்தன. அரசியல் சாஸ்திரம் எழுதிய சாணக்கியரின் சீடரான சந்திர குப்தரின் ஆட்சி, எல்லா வகை யிலும் மேம்பட்டிருந்தது. இருபத்துநான்கு ஆண்டுகள் மிகத் திறமையுடன் ஆட்சி புரிந்தார். மாடு மேய்ப்பவராக வாழ்க்கையைத் தொடங்கிய சந்திரகுப்தர் என்றால் அவர் பெயரைப் பொன்னால் பொறிக்கலாம் அல்லவா?***