இப்போ புரியுதா?
பொள்ளாச்சி என்னும் ஊரில் கார்த்திக் என்பவர் தன் மனைவியுடன் வசித்து வந்தார். அவர்களிடம் நாயும், பூனையும் இருந்தது. அதை மிகவும் அன்போடு வளர்த்து வந்தனர்.ஒருநாள்-கார்த்திக் தன் மோதிரத்தை விற்று விட முடிவு செய்தார். அதை விற்றால்தான் சாப்பாடு என்ற நிலை.ஆற்றைக் கடந்து பக்கத்து ஊருக்குச் சென்று அங்குள்ள செல்வந்தர் ஒருவரிடம் மோதிரத்தை ஒப்படைத்துவிட்டார். நட்சத்திரம் போல் மின்னிய அந்த மோதிரத்தைக் கண்டதும், அந்தச் செல்வந்தரும் மயங்கித்தான் போனார். கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டு, மோதிரத்தை பாதுகாப்பான மர அலமாரியில் வைத்துப் பூட்டினார்.மோதிரத்தை விற்ற இரண்டாவது நாள், கார்த்திக்குக்கு காய்ச்சல் வந்துவிட்டது. அவர் மனைவி, வைத்தியரை அழைத்து வந்து காட்டியும் நிலைமை சரியடையவில்லை. மோதிரம் விற்ற காசு கையில் இருந்ததால், அடுத்த சில மாதங்களுக்குப் பிரச்னை இல்லை. ஆனால், அதற்குப் பிறகு தொல்லைகள் ஆரம்பித்துவிட்டன. கடன்காரர்கள் வீட்டுக்கு வர ஆரம்பித்தனர்.நாட்கள் செல்லச் செல்ல அவர்கள் இருவருக்கும் போதுமான சாப்பாடே கிடைக்காத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் வீட்டில் உள்ள நாய்க்கும், பூனைக்கும் என்ன தர முடியும்?இரவு ஆனதும் தோட்டத்தில் நாயும், பூனையும் சந்தித்துப் பேசிக் கொண்டன.''நம் எஜமானர்கள் எவ்வளவு துயரப்படுகின்றனர் பார்த்தாயா?'' என்றது நாய்.''ஆமாம், அவர்களுக்கே உணவு இல்லை. இதில் நமக்கு எங்கே பாலும், இறைச்சியும் கிடைக்கப் போகிறது?'' என்று வருத்தப்பட்டது பூனை.''நம்மால் எதுவும் செய்ய முடியாதா?'' என்று கேட்டது நாய்.''நாம் என்ன செய்ய முடியும்? நம் எஜமானர் செய்த தவறால் தான் இந்த நிலைமை ஏற்பட்டது!'' என்று கூறியது பூனை.நிமிர்ந்து பார்த்தது நாய்.''என்ன சொல்கிறாய்?'' அவர் என்ன தவறு செய்தார்?''''உனக்குப் புரியவில்லையா? அவர் அந்த மோதிரத்தை விற்றதில் இருந்துதான் இந்த வீட்டில் பிரச்னைகள் ஆரம்பித்திருக்கிறது. அது இவர்களின் பரம்பரை அதிர்ஷ்ட மோதிரம்,'' என்றது பூனை.'இது உண்மையாக இருக்குமோ!' என்று யோசித்தது நாய்.தன்னை விட பூனை கொஞ்சம் புத்திசாலி தான் என்று நாய்க்குத் தெரியும். அதனாலேயே எஜமானரும், அவர் மனைவியும் அந்த பூனை மீது அதிகப் பாசம் வைத்திருந்ததும் அதுக்குத் தெரியும். அந்த விஷயத்தில் பூனை மீது கொஞ்சம் பொறாமையும் இருந்தது.''நீ சொன்னது சரிதான். நாம் நன்றாகச் சாப்பிட்டு பல நாட்கள் ஆகின்றன. எஜமானர் படுத்தப் படுக்கையாக இருக்கிறார். நாம் ஏதாவது செய்ய வேண்டும்,'' என்றது நாய்.அன்று இரவு திட்டம் ஒன்று தயாரானது.எப்படியாவது, அந்த மோதிரத்தை மீண்டும் கொண்டுவந்து விட வேண்டும் என்று நாயும், பூனையும் முடிவு செய்தன. தற்போது மோதிரம் எங்கே இருக்கிறது? என்பதைக் கண்டுபிடிக்க பூனைக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. அந்தக் கிராமத்தில் ஒரே ஒரு செல்வந்தர்தான் இருக்கிறார். எதை விற்கவேண்டுமானாலும் அவரிடம் தான் செல்ல வேண்டும். மேலும், அந்த வீட்டுக்கு ஒருமுறை பூனை ரகசியமாகச் சென்றிருக்கிறது. தன் திட்டத்தை அது நாயிடம் பகிர்ந்து கொண்டது.''கடினமான ஒரு மரப்பெட்டியில்தான் அவர் நகைகளையும், பணத்தையும் சேர்த்து வைப்பார். அந்தப் பெட்டி எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியும். ஆனால், என்னால் ஆற்றைக் கடக்க முடியாது. சென்ற முறை எஜமானருடன் ஒட்டிக் கொண்டு போனேன், இனி எப்படி செல்வது?'' என்றது பூனை.''நீ என் முதுகில் அமர்ந்து கொள். நான் நீந்தி உன்னைக் கரை சேர்க்கிறேன்,'' என்றது நாய்.''சரி, மரப்பெட்டியை நீயும், நானும் சேர்ந்து திறக்க முடியாதே!'' என்றது பூனை.சிறிது நேர யோசனைக்குப் பிறகு இன்னொரு கூட்டாளியையும் சேர்த்துக் கொள்ள முடிவு செய்தன. வீட்டுத் தோட்டத்தில் உலவிக்கொண்டிருந்த எலியை அழைத்து வந்தது நாய்.எலி எக்கச்சக்கமாக முரண்டு பிடித்தது. நாயும், பூனையும் மாறி, மாறிப் பேசித்தான் எலியின் மனதை மாற்றின. ஆளுக்கு ஒரு வேலை என்று பிரித்தன. பூனை வீட்டையும், பெட்டியையும் அடையாளம் காட்டும். நாய் பூனையைச் சுமந்து செல்லும். பூனை எலியைச் சுமந்து செல்லும். எலி, பெட்டியைக் குடைந்து மோதிரத்தை வெளியில் எடுக்க வேண்டும்.மறுநாள்-நள்ளிரவு மூன்றும் கிளம்பின. எலியை வாயில் கவ்வியபடி பூனை நாயின் முதுகில் தாவி ஏறியது. நாய் ஆற்றில் இறங்கியது. அழகாக நீந்தவும் ஆரம்பித்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீந்திய பிறகு அவை கரையை அடைந்தன.''அப்பா, என்னை இப்படியா கடித்து வைப்பாய்?'' என்று சிணுங்கியபடியே பூனையின் வாயில் இருந்து 'பொளக்'கென்று வெளியில் வந்து விழுந்தது சுண்டெலி.மூன்றும் அடிமேல் அடி எடுத்து வைத்து பங்களாவை நெருங்கின. வாசல் வரை வந்ததும் நாய் நின்று விட்டது. காவல் காக்க வேண்டும் என்பதால், பூனை மெல்ல, மெல்ல உள்ளே நுழைந்தது. அதோ அந்தப் பெட்டிதான் என்று கைகாட்டியதும் எலி தன் வேலையை ஆரம்பித்தது. கூரான அதன் பற்கள் பதினைந்து நிமிடங்களில் பெட்டியைத் துளைத்து எடுத்து விட்டன. இதோ இதுதானே என்று மோதிரத்தை எடுத்துக் காட்டி சிரித்தது.மீண்டும் ஆற்றைக் கடந்து மூன்றும் கரையை அடைந்தன. நாய், பூனையை இறக்கிவிட்டது. பூனை, எலியை இறக்கி விட்டது. மோதிரம் பூனையின் வாயில் பத்திரமாக இருந்தது. உதட்டுக்குக் கீழே மெல்லிதாகக் கடித்தபடி மோதிரத்தைப் பத்திரப்படுத்தியிருந்தது பூனை.நாய் வாள், வாள் என்று கத்தியபடி உற்சாகத்துடன் துள்ளிக் குதித்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்குச் சென்றுவிடுவோம். மோதிரத்தைக் கொடுத்து விடுவோம்.நாயும், பூனையும் ஓட ஆரம்பித்தன. பூனை ஓடும் போதே ஒரு முடிவுக்கும் வந்திருந்தது. மோதிரம்தான் பிரச்னைக்கான தீர்வு என்று கண்டுபிடித்தது நான். அதைக் கொண்டுவர திட்டமிட்டவன் நான். ஆகவே, மோதிரத்தை எஜமானருக்கு அளிக்க வேண்டியவன் நானே. என்னைச் சுமந்து சென்றதைத் தவிர வேறு எதுவும் நாய் செய்யவில்லை என்னும் போது எதற்காக நான் அதோடு ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும்?நாயை விட பூனை வேகமாக ஓடியது. ஒரு கட்டத்துக்கு மேல் நாயால் பூனையைப் பார்க்கவே முடியவில்லை. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டோம் என்று அதற்குப் புரிந்தது. எவ்வளவு வஞ்சகமாக அந்தப் பூனை என்னை பயன்படுத்தி, மோதிரத்தையும் கவர்ந்தபடி ஓடியே போய்விட்டது?நாய் வீட்டைச் சென்றடைந்தது. திறந்திருந்த கதவு வழியே உள்ளே சென்றது. நம்பவே முடியவில்லை!எஜமானர் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்திருந்தார். அவர் முகத்திலும், அவரின் மனைவியின் முகத்திலும் புன்னகை. நாய் உற்றுப் பார்த்தது.எஜமானரின் மடிமீது ஒய்யாரமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டிருந்தது பூனை. அதோடு, நாயை இளக்காரமாக ஒரு பார்வை பார்த்தது பாருங்கள். அதில்தான் நாய் உடைந்தே விட்டது.அதற்குப் பிறகு நடந்ததை இங்கே விவரிக்க வேண்டிய அவசியமே இல்லை. மோதிரம் திரும்பக் கிடைத்த பிறகு படிப்படியாக அந்த வீட்டில் செல்வமும், செழிப்பும் சேரத் தொடங்கியது.நாய்க்கும், பூனைக்கும் இறைச்சியும், பாலும் நிறையவே கிடைத்தன. ஆனால், அதற்குப் பிறகு பூனையும், நாயும் பேசிக் கொள்ளவேயில்லை. பார்க்கும் ஒவ்வொரு முறையும் மோதிரம் நினைவுக்கு வர, நாய் உர்ரென்று குரல் கொடுக்கும். பூனையும் தன் மீசை துடிக்க, 'மிய்ய்ய்ய்யாவ்' என்று திரும்பக் கத்தும்.நாளடைவில் இந்தப் பகை மேலும், வளர பூனையைத் துரத்த ஆரம்பித்தது நாய். பூனைக்கு நாய் நிரந்தர விரோதியாக மாறிப்போனது. எஜமானருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஒரு காலத்தில் ஒன்றாகத் தோட்டத்தில் தோள் மேல், தோள் போட்டு கதை பேசித்திரிந்த இந்த இரண்டுக்கும் என்ன ஆனது?அன்று தொடங்கி இன்றுவரை நாயும், பூனையும் விரோதிகளாக இருப்பதற்கு இதுதான் காரணம். மேலும், தன்னைப் பல் இடுக்கில் கவ்விக்கொண்டு வந்து, வேலை ஆனதும் தூக்கிப் போட்டுவிட்டு ஓடிய பூனையைக் காணும்போதெல்லாம் சுண்டெலி ஏன் ஓடுகிறது என்பதும் இப்போது புரியுதா குட்டீஸ்...