உள்ளூர் செய்திகள்

கதி கலக்கிய அடி!

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார், அரசு மேல்நிலைப்பள்ளியில், 2000ல், 11ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!அன்று பிற்பகல் முதல் பாடவேளையில் வேதியியல் வகுப்பு. ஆசிரியர் விடுப்பு என்பதால், தாமதமாக சென்றேன். பிரதியாக கணித ஆசிரியர் கருணாகரன் முன் கூட்டியே வந்து, பாடம் நடத்தி கொண்டிருந்தார். தயங்கியபடி வெளியே நின்றிருந்தேன். பாடத்தை முடித்து வெளியேறியவர், 'ஏன் வகுப்புக்கு வராமல் நிற்கிறாய்... படிக்கும் எண்ணம் இல்லையா...' என்றபடி, கன்னத்தில் ஒரு அறை விட்டார். கதி கலங்கி விட்டது. அன்று முதல் அவரை பார்ப்பதே கசந்தது. ஆனால், நன்றாக படித்து வாழ்வில் உயர வேண்டும் என்ற வைராக்கியம் வளர்ந்தது. கல்லுாரி படிப்பை முடித்து, வருவாய் துறையில் பணியில் சேர்ந்தேன். நான் படித்த பள்ளியில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கூட கண்காணிப்பாளராக சென்ற போது, என் கணித ஆசிரியரை கண்டேன். அறிமுகப்படுத்தியதுடன், அடி வாங்கிய சம்பவத்தையும் நினைவு கூர்ந்தேன். அடையாளம் கண்டவர், 'பெரிய பதவிக்கு வந்திருக்கிறாய்... மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...' என்று பாராட்டினார். இப்போது என் வயது, 36; அந்த ஆசிரியரை சந்தித்த நிகழ்வு மகிழ்ச்சி தருகிறது.- எம்.சரவணன், திருவண்ணாமலை.தொடர்புக்கு: 97904 34474


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !