நட்பு!
மன்னன் கோப்பெருஞ் சோழன், உறையூரை தலைநகரமாகக் கொண்டு, சோழ நாட்டை ஆட்சி செய்தான். சிறந்த புலமை படைத்தவன். ஒழுக்கத்தை, உயிராக போற்றியவன். புலவர்களிடமும், அறிஞர்களிடமும் மதிப்பும், அன்பும் கொண்டவன். வேண்டிய, பொன்னும், பொருளும் கொடுத்து பாதுகாத்து வந்தான்.பாண்டிய நாட்டில், பிசிர் என்ற ஊரில், ஆந்தையார் என்ற புலவர் வாழ்ந்து வந்தார். பிறந்த ஊரையும் பெயருடன் சேர்த்து, 'பிசிராந்தையார்' என அன்புடன் அழைத்தனர் மக்கள்.வயது முதிர்ந்தவர். ஆனால் தலையில், நரையே இருக்காது; இளைஞர் போல் தோன்றுவார். 'புலவர் பெருமானே... தங்களுக்கு நரைமுடி தோன்றவில்லையே... இதற்கான காரணம் என்ன...' என்று கேட்டனர் மக்கள்.'என் மனைவி, மாண்புமிக்கவள்; பிள்ளைகள், அறிவு நிரம்பியவர்கள்; வேலையாட்கள் உள்ளம் அறிந்து செயல்படுபவர்கள்; எம்மை ஆட்சி செய்யும் பாண்டிய மன்னன், அன்பும், அருளும், அறப்பண்பும் கொண்டவன். இவற்றுக்கெல்லாம் மேலாக, நான் வாழும் இவ்வூர், சான்றோர் பெருமக்களால் நிறைந்தது. அதனால் தான், என் தலையில் நரை தோன்றவில்லை...' என்று கூறி மகிழ்வார்.பிசிராந்தையாரும், கோப்பெருஞ்சோழனும் நெஞ்சத்தால் நெருங்கிய நண்பர்கள். ஆனால், ஒருமுறையேனும், நேரில் பார்த்து பழகியவர்கள் அல்லர். இயல்பாகவே அன்பு ஏற்பட்டிருந்தது. அது, நட்பாகி வளர்பிறை போல் உள்ளத்தில் வளர்ந்தது. கோப்பெருஞ் சோழனுக்கு, இரு மைந்தர்கள். தந்தையிடம், பாசமோ, பற்றுதலோ இல்லாதவர்கள். புலவர்களுக்கும், இரவலர்களுக்கும் பொன்னும், பொருளும் வாரிக் கொடுத்து போற்றும் தந்தையின் செயலால், 'வறியவராகிவிடுமோ' என பயந்தனர். தந்தை மீது வெறுப்பும், பகையும் நாளுக்கு நாள் வளர்ந்தது; தந்தையை எதிர்த்து, போர் செய்யும் அளவுக்கு, துணிவு கொண்டனர்.மைந்தர்களின் மனப்போக்கை அறிந்த சோழன், உள்ளம் உடைந்தான். வளர்த்த கிடா, மார்பில் பாய்ந்து குத்துவதைப் போல், பிள்ளைகளே எதிராக போரிட துணிவது கண்டு நடுங்கினான். எதிர்த்து போர் புரிய துணிந்தான்.இச்செயலைக் கண்ட புலவர்களும், அறிஞர்களும், 'பெற்ற மக்களுக்கு எதிராக தந்தையே போர் செய்தால் அதை உலகம் பழிக்கும்...' என்று கூறி, மன்னன் உள்ளத்தில் பொங்கிய சினத்தீயை தணித்தனர்.போர் செய்யும் எண்ணத்தை அகற்றிய மன்னன், அன்று முதல் மகன்களைப் பார்ப்பதை வெறுத்தான். அவர்களின் பேராசை, ஒழுக்கமில்லா செயல் கண்டு, தன் உயிரையே மாய்க்கும் முடிவுக்கு வந்தான். உறையூரில் வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தான்.அப்போது, 'அன்பர்களே... என் மகிழ்ச்சிக் காலத்தில், என்னை காண வாய்ப்பு இல்லாத என் நண்பர் பிசிராந்தையார், இத்துன்ப காலத்தில், என்னோடு இணைய நிச்சயம் வருவார்... அன்பு, அவரை இங்கு கொண்டு வந்து சேர்க்கும். அவருக்கும், என் பக்கத்தில் ஓரிடத்தை ஒதுக்கி வையுங்கள்...' என, கூறினான்.மன்னர் உத்தரவுப்படி, அதற்கான ஏற்பாடு நடந்தது.இதை, புலவர் பிசிராந்தையார் அறிந்தார். நண்பர் வடக்கிருக்கத் துணிந்தபின், உலக வாழ்வில் நாட்டம் ஏற்படவில்லை. தானும், மன்னன் அருகே வடக்கிருந்து, உயிர்விட உறுதி பூண்டார். அதற்காக, உறையூர் நகர் நோக்கி விரைந்தார். கோப்பெருஞ்சோழனை கண்டு மகிழ்ந்தார். இருவரும் கட்டி தழுவி உள்ளம் கலந்து, உரையாடி மகிழ்ந்தனர்.கோப்பெருஞ்சோழன் அருகே அமர்ந்தார் பிசிராந்தையார். நல்லுணர்வோடு, இறைவனை நினைத்து உயிரை விட்டனர். இந்த நட்பு, வரலாற்றில் ஒளி வீசித் திகழ்கிறது.குழந்தைகளே... நட்பு மிகவும் உன்னதமானது. மனம் கனிந்து ஏற்படும் நட்பு வாழ்வில் நன்மைகளையே தரும்.