உள்ளூர் செய்திகள்

தேவதை தந்த வரம்! (1)

போளூர் கிராமத்தில் ஒரு ஏழை வசித்து வந்தான். அவனது வீடு சிறிய ஓலை குடிசை. வருண பகவான் வாய் திறந்தால் வெள்ளத்தில் மூழ்கி விடும்; சூரிய பகவான் சுட்டெரித்தால், பொசுங்கிவிடும்.அவனுக்கு ஒரே மகன் சுப்பன்; வயல் வேலைக்குச் செல்வான். குடும்ப நிலையறிந்து, கடுமையாக உழைத்தான். வேலை முடிந்து, காட்டுப்பாதையில் வந்த சுப்பன், பசி மயக்கத்தில் ஒரு கோவில் வாசலில் படுத்தான்.அந்த வழியாக வந்த வனதேவதை, அவனை எழுப்பி, 'ஓடியாடி வேலை செய்ய வேண்டிய வயதில் உறங்கலாமா...' என்று கேட்டாள்.குடும்ப கஷ்டத்தை கூறினான் சுப்பன். மனமிரங்கிய வனதேவதை, 'வாழ்வில் மேன்மை பெற ஒரு வரம் தருகிறேன். அதை முறையாக பயன்படுத்திக் கொள். வரத்தை வெளியே சொன்னால் மரணம் நேரிடும்...' என்றாள். 'உங்கள் ஆணைப்படியே நடந்து கொள்கிறேன்...' என்றான் சுப்பன்.'பறவைகளும், மிருகங்களும் பேசும் மொழியை அறியக் கடவாய்...' என்று கூறி மறைந்தாள் வனதேவதை.சுப்பனுக்கு களைப்பெல்லாம் நீங்கியது. 'பறவைகளும், விலங்குகளும் பேசும் மொழியை அறிந்து, என்ன செய்யப் போகிறேன்' என்று யோசித்தபடியே, வீடு வந்து சேர்ந்தான். மறு நாள் காலை வேலைக்குப் புறப்பட்டான். வழியில், வறண்ட ஆறு தென்பட்டது. ஆற்றின் மையப்பகுதியில், இரண்டு பேர் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் வந்த குதிரை ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்தது. அங்கு அமர்ந்தான் சுப்பன். ஜோடியாக மரத்தில் வந்தமர்ந்த கிளிகள், சற்று நேரத்தில் பேச துவங்கின.'அதோ... ஆற்றின் நடுவில், நம் நாட்டு அரச குமாரனும், அவன் நண்பனும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிறிது நேரத்தில், காட்டு வெள்ளம் பாய்ந்து அவர்கள் உயிரைப் பறிக்கப் போகிறது; அந்தோ பரிதாபம்...' என்று கூறியது ஆண் கிளி.'ஐயோ... அவர்கள் தப்ப வழி இல்லையா...' என்று அதிர்ந்தது பெண் கிளி.இந்த உரையாடலைக் கேட்ட சுப்பன், பதறியபடி ஆற்றுக்குள் ஓடினான்.அவனைக் கண்ட அரச குமாரன், 'ஏன் இப்படி பதறியடித்து ஓடி வருகிறாய்... ஏதாவது ஆபத்தா...' என்றான்.'இளவரசே... ஆபத்து எனக்கு இல்லை; உங்களுக்கு தான். உடனடியாக இங்கிருந்து வெளியேறுங்கள்...' என்று அவசரப்படுத்தினான்.'என்ன உளறுகிறாய்... எங்களை எதிர்க்கத் துணிந்தோர், இந்த உலகத்தில் உண்டா... என் வாள் வீச்சை எதிர்கொள்ளும் திறன் இங்கு யாருக்கு உண்டு... அப்படியிருக்க, எனக்கு ஆபத்து என்கிறாயே, உனக்குப் புத்தி பிசகி விட்டதா...' என்று, கிண்டலாக கேட்டான்.அந்த கிண்டலைப் பொருட்படுத்தாத சுப்பன், 'இளவரசே... காட்டு வெள்ளத்தால், பெரும் ஆபத்து வரப்போகிறது; தயவுசெய்து சென்று விடுங்கள்...' என்றான். 'கொளுத்தும் வெயிலில் காட்டு வெள்ளமா... இவனுக்குப் பைத்தியம் முற்றி விட்டது போலும்...' என்றபடி அரசகுமாரனும், அவன் நண்பனும் எழுந்தனர்.அவர்கள் வெளியேறியதும், ஆற்றில் காட்டு வெள்ளம் பெருக்கெடுத்தது.அரசகுமாரன் திகிலடைந்தான். தக்க சமயத்தில் காப்பாற்றிய சுப்பனை பாராட்டி, மகாராஜாவிடம் அறிமுகப்படுத்தினான். மகிழ்ச்சி அடைந்த மகாராஜா, 'காட்டு வெள்ளம் வரப்போவதை எப்படி அறிந்தாய்...' என்று கேட்டார்.சுப்பனின் உள்ளத்தில், வரம் கொடுத்த தேவதையின் எச்சரிக்கை ஒலிக்கவே, 'அது தெய்வச் செயல்; அவ்வளவு தான்...' என்றான். தேவதை தந்த வரம் சுப்பன் வாழ்வை உயர்த்தியது; அவனை அரசவை ஆலோசகராக நியமித்தார் மகாராஜா.- தொடரும்...- ஸ்ரீ செண்பகா பதிப்பகம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !