பொய் சொல்லப்போய்...
கடந்த, 2010ல், 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள், கணக்கு ஆசிரியர், 'க்ராப் நோட்' எடுத்து வர சொல்லியிருந்தார். நானும், சிலரும், மறந்துட்டோம். எடுத்து வராத மாணவர்களை, வகுப்பிற்கு வெளியே செல்லுமாறு கூறினார். நானும், என் தோழியும் வகுப்பிற்கு வெளியே நின்றால், அவமானம் என கருதி, 'முந்தைய தினம், நாங்கள் பள்ளிக்கு வரவில்லை; அதனால், 'க்ராப் நோட்' கொண்டு வரவில்லை' என்று கூறவே, ஆசிரியரும், எங்களை வகுப்பினுள் அமர அனுமதித்தார்.ஆனால், வெளியே நின்ற ஒரு மாணவி, நாங்கள் பொய் சொல்வதை போட்டு கொடுத்து விடவே, தலைமை ஆசிரியையிடம் அழைத்து செல்லப்பட்டு, பொய் சொன்னதற்கு தண்டனையாக, பள்ளி நடுவே முட்டி போட்டோம். 'இந்த தண்டனைக்கு, வகுப்பிற்கு வெளியே நின்றிருக்கலாமே...' என, நாங்கள் இருவரும், நொந்து போய் அழுதோம். என் தந்தை செய்தி அறிந்து, '100 முறை பொய் சொல்ல மாட்டேன் என எழுதி தந்தால்தான், சாப்பாடு...' என கூறி விட்டார். ஏற்கனவே நொந்து போயிருந்த நான், அழுதபடியே, 100 முறை எழுதினேன். இது நடந்து, 8 ஆண்டுகள் ஆகியும், இன்னும் நான் பொய் சொல்ல பயப்படுகிறேன். உண்மையின் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்தின, ஆசிரியருக்கும், தந்தைக்கும் என்றும் கடமைப் பட்டுள்ளேன்; தற்போது என் வயது; 20.- ர.அனுஷா, சென்னை.