உள்ளூர் செய்திகள்

தங்க அழகி!

நீண்ட காலத்திற்கு முன்பு பெர்சியாவில் உள்ள நஸ்ரா என்ற பகுதியை முஸ்தபா என்ற சுல்தான் ஆண்டு வந்தான். அவன் தன் மனைவியிடம் பேரன்பு கொண்டிருந்தான்.அவன் மிகச் சிறந்த அறிவாளியாகவும், நல்ல நிர்வாகியாகவும் இருந்தான். அவனுடைய ஆட்சியின் கீழ் மக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தனர்.இப்படியே சில ஆண்டுகள் சென்றன.அவன் மனைவிக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு 'ஜாகிர்' என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.சில ஆண்டுகள் சென்றன.ஜாகிர் அழகு மிகுந்த வாலிபனானான். அவன் பரந்த மனப்பான்மை கொண்டவனாக இருந்தான். முஸ்தபாவின் இதயம் இன்பத்தால் நிரம்பியது. தனக்குப் பின் தன் நாட்டை அவன் நல்ல முறையில் ஆட்சி செய்வான் எனக் கருதினான்.ஒருநாள் முஸ்தபா உடல் நலமின்றி இறந்து விட்டான். ஜாகிர் தன் தந்தையின் உடலை ராஜ மரியாதையோடு அடக்கம் செய்து விட்டு நஸ்ரா பகுதிக்கு அரசனானான். அவன் தன் தந்தையைப் போன்றே நாட்டை நல்லமுறையில் ஆண்டு வந்தான்.ஒருநாள் இரவு ஜாகிர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது ஓர் கனவு கண்டான். கனவில் அவனுடைய தந்தையார் தோன்றி, ''மகனே என்னுடைய சமாதியைத் தோண்டு, அங்கே நீ ஆச்சரியப்படும்படி ஒரு பொருளைக் காண்பாய்,'' என்று கூறிவிட்டு மறைந்து விட்டார்.ஜாகிர் மறுநாள் காலையில் கண் விழித்து எழுந்தான். தான் கண்ட கனவைக் குறித்து சிந்தித்தான். தன் தந்தையார் தன்னுடைய கனவில் என்ன கூறினார் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.உடனே அவன் தன் தாயாரைப் பார்த்து, ''தாயே நேற்று இரவு நான் ஓர் கனவு கண்டேன். கனவில் தந்தையார் வந்து தன் சமாதியைத் தோண்டும்படிக் கூறினார். அங்கே எனக்கு ஒரு முக்கியமான பொருள் கிடைக்கும் என்று கூறினார் அது என்ன?'' என்று கேட்டான்.இதைக் கேட்டதும் தாயாரும் குழம்பினார். ஆனால், சமாதியைத் தோண்டுவது நாட்டுக்கு நல்லதல்ல என்று கூறினார்.ஆனால், ஜாகிர் தன் தந்தையின் சமாதியைத் தோண்டி அங்கே என்ன கிடைக்கும்? என்று பார்க்கலாம் என முடிவெடுத்தான். எனவே, அவன் தன் தந்தையாரின் சமாதியைத் தோண்டினான். அங்கே ஓர் ஏணிப்படி கீழ் நோக்கி அமைக்கப் பட்டிருப்பதைக் கண்டு வியந்தான். அவன் அந்த ஏணிப்படிகளில் கீழ் நோக்கி இறங்கினான். இறுதியில் அது ஓர் இருட்டுப் பகுதியில் அவனைக் கொண்டு போய்ச் சேர்த்தது.ஜாகிர் அந்த இருளில் தட்டுத் தடுமாறி நடந்தான். ஒரு மிகப் பெரிய வளாகத்திற்கு வந்து சேர்ந்தான். அந்த அறை முழுவதும் விளக்குளால், பிரகாசித்துக் கொண்டிருந்தது.அங்கே எண்ணற்ற வைரங்களும், வைடூரியங்களும், மாணிக்கங்களும் எங்குப் பார்த்தாலும் குவியல் குவியலாய்க் கொட்டிக் கிடந்தன. அதனால் அந்த அறை 'தகதக' என பிரகாசித்துக் கொண்டிருந்தது. ஆனால், தன் தந்தையார் இவற்றைப் பற்றிக் கூறவில்லை. அவர் கூறியது வேறு ஒன்று. அது என்ன என்று அவன் தேடத் தொடங்கினான்.அவன் அந்த அறை முழுவதும் தேடிய போது, அங்கே ஓரிடத்தில் எட்டு பெண்களின் சிலைகளைக் கண்டான்.அந்த எட்டு பெண்களின் சிலைகளும் தூய தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன. அவை ஒரே அச்சால் செய்யப்பட்டிருந்தமையால், அந்த எட்டு பெண்களின் சிலைகளும் ஒரே விதமான தோற்றம் கொண்டவைகளாக இருந்தன.அந்த எட்டு பெண்களின் சிலைகள் மீதும் விலை உயர்ந்த ஆடை போர்த்தப்பட்டிருந்தது. அந்த ஆடைகளில் விலை உயர்ந்த மாணிக்கங் கள் பொருத்தப்பட்டிருந்தன.வைரங்கள் பதிக்கப்பட்ட கிரீடங்கள் அந்த எட்டுப் பெண்களின் சிலைகளின் தலைகளிலும் அணிவிக்கப் பட்டிருந்தன.இது போன்ற கண்ணைக் கவரும் அழகுச் சிலைகளை ஜாகிர் இதற்கு முன் பார்த்ததில்லை. எட்டாவது பெண் சிலையின் கையில் ஒரு ஓலைச்சுருள் இருந்ததை ஜாகிர் பார்த்தான். அதை உருவினான்.அதில் ஒரு செய்தி எழுதப்பட்டிருந்தது. இந்த எட்டு சிலைகளைப் போன்றே ஒன்பதாவதாக ஒரு சிலையும் இருக்கிறது. அது இந்த எட்டுச் சிலைகளை விட மிகவும் அழகானதாகவும், விலை உயர்ந்ததும் ஆகும் என்பதே, அந்த ஓலைச் சுருளில் இருந்த செய்தியாகும்.அந்த ஓலைச் சுருளில் குறிப்பிடப்பட்டிருந்த ஒன்பதாவது சிலையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆவல் அவனுக்கு எழுந்தது. இது தனக்கு ஒரு முக்கியமான செய்தியாகும் எனக் கருதிய ஜாகிர் தன்னுடைய தந்தையாரின் சமாதியை விட்டு வெளியே வந்தான்.சிறிது தூரம் கடந்ததும், அங்கே ஒரு வயதான மனிதர் நின்று கொண்டிருப்பதை கண்டான். அந்த வயதான மனிதர் தன்னை சந்திக்க வேண்டும் என்றுதான் காத்திருக்கிறார் என்று ஜாகிர் நினைத்தான்.அவன் நினைத்தது போலவே, அந்த வயதான மனிதரும், 'ஜாகிர் நீ உன் தந்தையார் கனவில் கூறியதைச் செயல்படுத்தத் தயாராகி விட்டாய் என்பதை அறிந்து, நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்,'' என்று கூறினார்.அந்த வயதான மனிதர் என்ன சொல்கிறார் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.அந்த வயதான மனிதர் திடீரென ஒரு கண்ணாடியை அவனிடம் கொடுத்து, ''ஜாகிர் இது சாதாரண கண்ணாடியல்ல... அனைத்துப் பெண்களிலும் யார் சிறந்த அழகியோ அவள் முகம் மட்டுமே இந்தக் கண்ணாடியில் தெரியும். அதுமட்டுமல்ல.. இந்த கண்ணாடியில் எந்தப் பெண்ணுடைய முகம் தெரிகிறதோ அவள்தான் உனக்கு மனைவியாவாள்,'' என்று அவர் கூறினார்.ஜாகிர் அந்தக் கண்ணாடியை அந்த வயதான முதியவரிடமிருந்து பெற்றுக் கொண்டு, ''அது சரி. நான் ஒன்பதாவது சிலையை எப்படி கண்டுபிடிப்பது? என்று கேட்டான்.உடனே அந்தப் பெரியவர், ''உனக்கு ஒரு பெண் உதவுவாள்,'' என்று கூறி விட்டு உடனே மறைந்து விட்டார்.ஜாகிர் உடனே செயல்படத் தொடங்கினான். நாடு முழுவதும் அந்த ஒன்பதாவது சிலையைத் தேடி அலைந்தான். ஆனால், அவனுடைய முயற்சிகள் யாவும் தோல்வியிலேயே முடிந்தன.அவன் பல பெண்களைச் சந்தித்தான். ஆனால், ஒரு பெண்ணுடைய முகத்தையும் அந்தக் கண்ணாடி காட்டவில்லை. ஜாகிர் பொறுமை இழந்தான்.ஒருநாள் அவன் ஒரு தெரு வழியே நடந்து சென்று கொண்டிருக்கும் போது, ஒரு வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் குரலைக் கேட்டான்.அவன் தன் வாழ்நாளிலேயே அப்படி ஒரு தேன்போன்ற இனிய குரலைக் கேட்டதில்லை. எந்த ஒரு அனுமதியும் இன்றி அவன் திடீரென்று அந்த வீட்டில் நுழைந்தான்.அங்கே ஓர் அழகான பெண்ணை அவன் கண்டான். அவளுடைய கூந்தல் பொன் நிறமாக இருந்தது. அவள் தன் பொற் கூந்தலை பொன்னால் ஆன சீப்பால் வாரிக் கொண்டிருந்தாள்.உடனே அவன் தன் அரண்மனைக்குத் திரும்பினான். அவன் தன் பணியாளனை அழைத்து, அந்தப் பெண்ணைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் திரட்டுமாறு ஆணையிட்டான்.அந்தப் பணியாளனும் அவ்வாறே செய்தான். அந்தப் பெண் அந்த நாட்டிலேயே பெரும் பணக்காரன் ஒருவனுடைய ஒரே மகள் என்பதை ஜாகிர் தெரிந்து கொண்டான்.உடனே, ஜாகிர் அந்தப் பணக்காரனுடைய வீட்டிற்குச் சென்று அவனுடைய மகளைச் சந்திக்க அனுமதி கேட்டான்.இந்த நாட்டின் அரசனே தன் மகளைச் சந்திக்க தன்னிடம் அனுமதி கேட்பதை எண்ணி, அந்தப் பணக்காரன் ஆச்சரியப்பட்டான். அனுமதி வழங்கினான்.பிறகு ஜாகிர் அந்தப் பெண்ணுடைய அறைக்குள் நுழைந்து அவளிடம் பேசினான். அவளிடம் பேசியபோது அவள் அழகி மட்டுமல்ல, சிறந்த அறிவாளியும் கூட என்பதை ஜாகிர் தெரிந்து கொண்டான்.அந்தப் பெண்ணுக்கு முன்னால் ஜாகிர் கண்ணாடியை உயர்த்தினான். அவள் முகம் அதில் தெரிந்தது. இவள்தான் தனக்கு மனைவியாகத் தகுதியுடையவள் என்பதை ஜாகிர் உணர்ந்து கொண்டான்.இவள்தான் ஒன்பதாவது பொற்சிலை என்பதை அறிந்து ஜாகிர் பெரிதும் மகிழ்ந்தான்.பிறகு ஜாகிர் அந்த அழகான பெண்ணைத் தன் தாயிடம் அழைத்துச் சென்று, ''தாயே இந்தப் பெண்ணைத்தான் நான் மணந்து கொள்வேன். இவளைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்,'' என்று திட்டவட்டமாகக் கூறினான்.அவனுடைய தாயும், அந்தப் பெண்ணையே திருமணம் செய்துகொள் என்று கூறினாள். ஜாகிர் அந்தப் பெண்ணையே திருமணம் செய்து கொண்டு வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ்ந்தான்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !