இலக்கண பாடம்!
மதுரை, பொன்னகரம் நகரசபை உயர்நிலைப் பள்ளியில், 1960ல், 9ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு... தமிழ் ஆசிரியர் செல்வகணபதி புரியும்படி பாடங்கள் நடத்துவார். ஒருநாள் தமிழ் இலக்கண வகுப்பில், 'செய்யுள், கவிதை எழுத என்னென்ன உறுப்புகள் உண்டு. ஒவ்வொருவரும், ஒவ்வொன்றைக் கூறுங்கள்...' என்றார். வரிசைப்படி எழுந்து, 'எழுத்து, அசை, சீர், தளை, அடி...' என கூறினர். அடுத்து என்னை கேட்டபோது, 'ஐயா... மறந்து விட்டது; தெரியவில்லை...' என்றேன். உடனே அருகில் வந்து, என் தொடையை அழுத்தி திருகி, 'இப்போ தெரிகிறதா...' என்றார். வலியுடன், 'ஐயா எரிகிறது...' என்றேன். வகுப்பே சிரித்தது. அடுத்திருந்தவன், 'தொடை...' என சரியாக விடை சொன்னான்.என்னை அன்புடன் அணைத்தபடி, 'அடிக்கு அடுத்தது, தொடை என்பதை மறக்காதே...' என புரிய வைத்தார். தொடர்ந்து, யாப்பிலக்கணத்தில் பயிற்சி பெற்று, சிறு கவிதைகள் எழுதும் அளவில் உயர்ந்தேன். என் வயது, 78; தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். செயல்முறையாக இலக்கணத்தை கற்பித்த அந்த ஆசிரியர் திருக்குறளையும் பரப்பி வந்ததை பின்னர் அறிந்தேன். அவர் மீதான மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது. - கே.ஜெயராமன், மதுரை.தொடர்புக்கு: 94433 53273