தலை நிமிர்வு!
சென்னை, மாதவரம், ஸ்ரீ ஐயப்பா மேல்நிலைப் பள்ளியில், 2013ல், 7ம் வகுப்பு படித்தபோது, தமிழாசிரியையாக இருந்தார், உமா மகேஷ்வரி. முதல்நாள் வகுப்பில், 'உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்...' என்று கூறினார். மிகவும் மகிழ்ச்சியாக கடந்தது. காலாண்டு தேர்வு முடிந்தவுடன் மதிப்பெண் விபரத்தை வெளியிட்டார். வகுப்பில், நான் உட்பட, 10 பேர் குறைந்த அளவு மதிப்பெண் பெற்றிருந்தோம். பெற்றோரை அழைத்து வர கோபத்துடன் கூறினார்.எனக்கு தந்தை இல்லை. தாய் வேலைக்கு சென்று விட்டார். எனவே, பாட்டியை அழைத்து சென்றேன். அவர் முன்னிலையில் திட்டி, 'உங்கள் பேத்தி குறைந்த மதிப்பெண் எடுத்திருக்கிறாள். அவளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி, எங்காவது வேலைக்கு சேர்த்து விடுங்கள்... வருமானமாவது கிடைக்கும்...' என்று காரசாரமாக கூறினார்.தலைகுனிந்து நின்றார் பாட்டி. இது, என் மனதை வாட்டியது. முயற்சி எடுத்து படிக்க துவங்கினேன். உடல் நிலை சரி இல்லாததால், சில நாட்களிலே பள்ளிக்கு வருவதை நிறுத்தி விட்டார் அந்த ஆசிரியை. கடும் முயற்சியால், 12ம் வகுப்பு பொது தேர்வில் தமிழ் பாடத்தில் முதன்மை மதிப்பெண் பெற்றிருந்தேன். தேர்வு முடிவு வெளியானதும், என் பாட்டி அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. என்னை கண்டித்த ஆசிரியை, வாழ்த்து தெரிவித்து பேசினார். அது மகிழ்ச்சி தந்தது. பாட்டியை தலை நிமிர வைத்ததால் நிம்மதி அடைந்தேன்.என் வயது, 22; தமிழில், கட்டுரை, கவிதை, கதைகள் எழுதும் ஆற்றலை வளர்த்துள்ளேன். அந்த ஆசிரியை அன்று காட்டிய கண்டிப்பால் தான் இந்த அளவு உயர முடிந்தது. அவரை வணங்குகிறேன். - பி.சஞ்ஜனா, சென்னை.