உள்ளூர் செய்திகள்

சொர்க்கலோகம்!

உப்பத்தூர் என்ற ஊரில் மச்சேந்திரா என்றொரு பணக்கார கருமி இருந்தான். இவன் மற்ற கருமிகளைப் போல் இல்லை. பிறருக்கு எதுவும் கொடுக்காவிட்டாலும் கூட, வேறு எங்காவது கைகாட்டி விடுவான். இதனால் மக்கள் அவனை,'கைகாட்டிமரம்' என்று கூட வேடிக்கையாகக் குறிப்பிடுவர்.எவராவது சாப்பாட்டு நேரத்திற்கு வந்து சாப்பாடு கேட்டால் இல்லையென்று சொல்ல மாட்டான். சற்று தூரத்திலுள்ள ஓர் அன்ன சத்திரத்திற்குப் போகும் வழியைக் காட்டி, 'அங்கு போனால் சாப்பாடு கிடைக்கும்,'' என்று சொல்லி விடுவான்.திடீரென்று ஒருநாள் மச்சேந்திரா இறந்துவிட்டான். அவனை எம தூதர்கள் எமனின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினர்.எமன் சித்திர குப்தனைப் பார்த்து, 'இவனுடைய வரலாற்றைப் பார். இவன் வாழ்க்கையில் ஏதாவது நல்ல காரியம் செய்திருக்கிறானா?'' என்று கேட்டான்.சித்திரகுப்தன் மச்சேந்திராவின் வரலாற்றை முழுவதும் ஆராய்ந்து பார்த்துவிட்டு, 'இவன் வாழ்க்கையில் தான தர்மம் முதலிய எந்த நல்ல காரியங்களையும் செய்ததில்லை. ஆனால், ஒரே ஒரு காரியம் மட்டும் செய்திருக்கிறான். பசி வேளைக்குச் சாப்பாடு கேட்டு வந்தவர்களுக்கு அன்ன சத்திரத்திற்குப் போகும் வழியைத் தன் சுட்டுவிரலால் காட்டியிருக்கிறான்,'' என்றான்.'அப்படியா? அப்படியானால் அவனுடைய சுட்டு விரல் மட்டும் ஒரு நல்ல காரியத்துக்குப் பயன்பட்டு இருக்கிறது. எனவே, இவனுடைய சுட்டுவிரல் மட்டும் தேவலோகத்தைத் தொடும்படியாகச் செய்து விட்டு, மீண்டும் இவனை இங்கேயே கொண்டுவந்து விடுங்கள்,'' என்றான் எமதர்மராஜா.எமதர்மனின் உத்தரவுப்படி எம தூதர்கள் மச்சேந்திராவின் சுட்டு விரலை மட்டும் தேவலோகத்தைத் தொடும் படி செய்து விட்டு மீண்டும் அவனை எமலோகத்துக்கே அழைத்து வந்தனர்.அச்சமயத்தில் சித்திரகுப்தன், 'பிரபோ, என்னை மன்னிக்க வேண்டும். இவனுடைய ஊரிலுள்ள மச்சேந்திரா என்ற பெயருடைய வேறு ஒருவனைக் கொண்டு வருவதற்குப் பதில், நம்முடைய தூதர்கள் தவறுதலாக இவனை இங்கே கொண்டு வந்து விட்டனர்,'' என்றான்.'அப்படியா! முதலில் இவனைப் பூலோகத்தில் சேர்ப்பித்துவிட்டு அந்த மச்சேந்திராவை அழைத்து வரச் சொல்லுங்கள்,'' என்று எமதர்மன் உத்தரவிட்டான்.எமதூதர்களும் மச்சேந்திரா உயிரைப் பழையபடி கொண்டு வந்து விட்டு விட்டனர்.நல்லவேளை! அந்த இடைவெளியில் மச்சேந்திராவின் குடும்பத்தினர் அவன் உடலை தகனம் செய்து விடவில்லை. யாரோ ஓர் உறவினர் ஊரிலிருந்து வரவேண்டும் என்பதற்காக தகனம் செய்யாமல் இருந்தனர்.எமதூதர்கள் அவன் உயிரைக் கொண்டு வந்து விட்டதும் தூங்கி எழுந்தவன் போல் மச்சேந்திரா எழுந்து கொண்டான். அவனது குடும்பத்தினர் மகிழ்ந்தனர்.சில நாட்கள் சென்றன-செத்துப் பிழைத்த மச்சேந்திரா பழையபடி திண்ணையில் உட்கார்ந்திருக்கும்போது யாராவது சாப்பாடு கேட்டால், எழுந்து நின்று முழு உடம்பையும் அன்னசத்திரத்தின் பக்கம் ஆட்டிக் காட்டி அன்ன சத்திரத்திற்கு வழி சொல்ல ஆரம்பித்தான்.முன்னர் சுட்டுவிரலால் அன்ன சத்திரத்துக்கு வழி காட்டியவர், இப்போது முழு உடலாலும் வழிகாட்டுவதைக் கண்டு ஊரார் வியப்படைந்தனர்.அதற்குரிய காரணம் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அப்படித்தானே குட்டீஸ்!***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !