உள்ளூர் செய்திகள்

கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க!

ஒரு ஊரில் ஒரு பணக்கார வணிகன் வசித்து வந்தான். அவன் தனக்கு சொந்தமாக ஒரு குதிரையையும், ஒரு கழுதையையும் வளர்த்து வந்தான். குதிரைக்கு மட்டும் நல்ல உணவு கொடுத்தான். கழுதையை கவனிக்காமல், அதன் போக்கிலேயே விட்டு விட்டான். அவனுக்கு குதிரையை விட கழுதையால்தான் லாபம் அதிகம். அவன் சந்தைக்கு போகும்போது, குதிரை அவனை மட்டும் தான் சுமந்து செல்லும். ஆனால், கழுதையோ அவன் சந்தைக்கு செல்லும் போது, சந்தையில் விற்க தேவையான பொருட்களை சுமக்க முடியாமல் சுமந்து செல்லும். அது போல, சந்தையில் இருந்து திரும்பி வரும் போது, சந்தையில் வாங்கிய பொருட்களை சுமந்து வரும். குதிரை எப்போதும் கழுதையை ஒரு ஏளன பார்வையால் பார்த்து சிரிக்கும். கழுதை தன் விதியை நினைத்து நொந்து கொள்ளும்.ஒரு தடவை பக்கத்து ஊரில் ஒரு திருவிழா நடக்க இருந்தது. அந்த திருவிழாவிற்கு சுற்றுபக்க ஊர்களில் இருந்தும், கிராமங் களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் குடும்பத்தோடு வருவர் என்று வணிகன் நினைத்து, அந்த திருவிழா நடக்கும் ஊரில் தன்னிடம் உள்ள பொருட்களை விற்க, ஒரு பெரிய கடையை வாடகைக்கு ஏற்பாடு செய்தான்.பெரிய கடை என்றால் நிறைய பொருட்களை கொண்டு செல்ல வேண்டும். அதனால் வணிகன் தன்னிடம் இருந்த பொருட்கள் மட்டுமின்றி, வேறு சிலரிடமும் இருந்து பொருட்களை வாங்கி அவைகளை தன் கழுதை மேல் ஏற்றி, தான் தன் குதிரைமேல் ஏறியபடி, கழுதையை குதிரைக்கு பக்கத்தில் வரும்படி திருவிழா நடக்கும் ஊருக்கு புறப்பட்டான்.கழுதை மேல் ஏற்றப்பட்ட பாரம் அதனால் சுமக்க முடியாமல் இருந்தது. அதனால் நடக்கக் கூட முடியவில்லை. கால்கள் பின்ன, தள்ளாடியபடி நடந்து மெதுவாக சென்றது. அப்போது கழுதை, குதிரையிடம், ''குதிரை அண்ணா! என் முதுகின் மேல் உள்ள பொருள்களின் பாரம் நான் சுமக்க முடியாமல் உள்ளது. என்னுடைய பாரத்தில் சிறிதளவு நீங்கள் வாங்கி சுமந்து வந்தால், உங்களுக்கு சமமாக என்னால் நடக்க முடியும். தயவு செய்து என் பாரத்தில், சற்று நீங்களும் சுமந்து வாருங்கள்,'' என்று கெஞ்சும் குரலில் கூறியது.குதிரை அலட்சியமாக கழுதையை பார்த்து, ''என்னால் அதெல்லாம் முடியாது. உன்விதி உன் பாரத்தை நீயே சுமக்க வேண்டும்,'' என்று கூறி விட்டது.கழுதையும் தன் விதியை நினைத்து வேதனை அடைந்து கால்கள் பின்னியபடி நடந்து, ஒரு கட்டத்தில் நடக்க முடியாமல் களைப்படைந்து மூச்சு விட முடியாமல் கீழே படுத்து விட்டது. கழுதைக்கு அருகில் குதிரையில் வந்துக் கொண்டிருந்த வணிகன் கழுதை படுத்து விட்டதை பார்த்து, அதை எழுப்பி பார்த்தான். அவனால் முடியவில்லை. அவன் திருவிழா நடக்கும் ஊருக்கு சீக்கிரமாக சென்றால் தான் கொண்டு செல்லும் பொருட் களை அதிக விலைக்கு விற்க முடியும். ஒரு நிமிடம் யோசித்த வணிகன், சற்றும் தாமதிக்காமல், கழுதை மேல் இருந்த பொருட்களை குதிரை மேல் ஏற்றி, தன் பயணத்தை தொடர்ந்தான்.கழுதை மேல் இருந்த பொருட்களை குதிரை மேல் ஏறிய உடன், குதிரை கழுதையின் சுமையை சுமக்க ஆரம்பித்தது. அப்போது தான் குதிரைக்கு புரிந்தது. கழுதை தன் மேல் எவ்வளவு பாரத்தை சுமந்தது என்று. கழுதையின் சுமையையும், தன் எஜமானனின் பாரத்தையும் சுமக்க முடியாமல், குதிரை திணறியது. கழுதை மேல் இருந்த சுமை இறங்கியதும், கழுதை மெதுவாக எழுந்து நடக்க ஆரம்பித்தது. குதிரைக்கு அருகில் நடந்து வந்துக் கொண்டிருந்தது. கழுதை குதிரையை பார்த்து, ''குதிரை அண்ணா! உங்கள் மேல் உள்ள சுமையில் சிறிது என்மேல் போடுங்கள் என்று கேட்டது. குதிரை பதில் ஏதும் சொல்லாமல், தன் மேல் இருந்த பாரத்தோடு எஜமானனின் பாரத்தோடு நடந்தது.குதிரை சற்று நேரத்துக்கு பிறகு கழுதையை பார்த்து, ''தம்பி! நீ முதலில் கூறியபடி நீ சுமந்து வந்த சுமையில் சிறிது சுமையை நான் சுமந்து வர சம்மதித்து இருந்தால், இப்போது நான் கஷ்டப்பட மாட்டேன். ஒருவர் கஷ்டத்தில் இருக்கும் போது அவர் படும் கஷ்டத்தில், சிறிதளவு கஷ்டத்தை பகிர்ந்து கொண்டால் கஷ்டப்படுபவரும் மகிழ்ச்சி அடைவார். கஷ்டத்தை பகிர்ந்து கொண்டவரும் தன்னால் ஒருவருக்கு அவர் படும் கஷ்டத்தில் இருந்து விடுதலை கிடைத்ததே என்று நிம்மதி அடைவார்,'' என்பதை புரிந்து கொண்டேன் என்றது.குதிரை தன்னால் சுமக்க முடியாத அளவுக்கு தன் மேல் இருந்த பாரத்தை சுமந்தபடி திருவிழா நடக்கும் ஊருக்கு சென்றது. அங்கே தன் எஜமானன் தன் மேல் இருந்த சுமையை இறக்கியதும், களைப்பால் படுத்துவிட்டது.கழுதை குதிரைக்கு அருகில் வந்து, ''குதிரை அண்ணா! எந்த ஒரு வேலையையும் பங்கிட்டு அதாவது கூடி நின்று செய்தால் வேலையும் சுலபமாக விரைவில் முடிந்து விடும்,'' என்று கூறியது.பாரத்தை சுமக்க முடியாமல் சுமந்து வந்த களைப்பால் படுத்திருந்த குதிரையும், ''கழுதை தம்பி! நீ கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. இனி நாம் இருவரும் இணைபிரியா சகோதரர்களாக இருப்போம்,'' என்று கூறியது.குதிரை மேலும் தொடர்ந்து, ''நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களும் ஒருவரோடு ஒருவர் தங்கள் துக்கங்களையும், துயரங்களையும் சரி சமமாக பகிர்ந்து கொண்டால் இந்த உலகத்தில் சண்டை சச்சரவுகளே இருக்காது,'' என்று கூறியது.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !