உள்ளூர் செய்திகள்

வீட்டுப்பாடம்!

சிவகங்கை மாவட்டம், சவேரியார் பட்டினம், கொம்புக்காரனேந்தல் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1999ல், 9ம் வகுப்பு படித்தேன்.அன்று அறிவியல் ஆசிரியர் பிரபாகரன் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்; திடீரென வகுப்பறைக்குள் நுழைந்த தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன், முதல் வரிசையில் அமர்ந்து இருந்தவனிடம், 'எது சம்மந்தமாக பாடம் நடத்துகிறார்...' என கேட்டார்.உடனே, 'நியூட்டனின் மூன்றாம் விதி பற்றி...' என்றான். மறுநாளும் அதேபோல் வந்த தலைமை ஆசிரியர், 'நேற்று நடத்திய நியூட்டனின் மூன்றாம் விதி பற்றி கூறு...' என கடைசி வரிசையில் அமர்ந்திருந்தவனிடம் கேட்டார். அவன், 'நேற்று வீட்டுப்பாடம் படிக்க வில்லை; அதனால் விடை கூற இயலாது; நாளை படித்து வருகிறேன்...' என்றான்.உடனே, வகுப்பு ஆசிரியரிடம், 'எந்த ஒரு பாடத்தையும் நடத்தி விட்டோம் என்று இருக்காமல், அன்றைய வீட்டுப் பாடத்தை அன்றே படித்து வர கட்டளையிடுங்கள். நாளை என்று ஒத்தி வைக்க வேண்டாம்...' என்றபடி கரும்பலகையில், 'நாளை என்பது நமக்கில்லை' என தெளிவாக எழுதினார். அன்று கூறியதை, என் குழந்தைகளுக்கு உணர்த்தி படிக்க வைக்கிறேன்.தற்போது, என் வயது, 36; என் பிள்ளைகள் வீட்டுப்பாடம் படிக்கும் போது, அந்த தலைமை ஆசிரியர் நினைவு வந்து விடுகிறது. அவரை பணிந்து வணங்குகிறேன். - ரா.சசிகலா, சிவகங்கை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !