நான்தான் வீழ்த்தினேன் ! - மினி ஸ்டோரி
மேவார் நாட்டு இளவரசர்களாக ராணா பிரதாப்பும், சக்தி சின்காவும் இருந்தனர். அவர்கள் இருவரும் தங்கள் ஆசிரியருடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றனர். மான் ஒன்று அவர்கள் கண்ணில் பட்டது. இரு இளவரசர்களும் அதற்குக் குறி வைத்து அம்பு எய்தனர். அவர்கள் குறி தப்பவில்லை. இரண்டு அம்புகளும் ஒரே சமயத்தில் பாய்ந்து மான் இறந்து வீழ்ந்தது.''என் அம்பினால்தான் மான் இறந்தது!'' என்று இருவருமே பெருமை பேசினர். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது சண்டையாக மாறியது. கோபம் கொண்ட அவர்கள் இருவரும் வாளை உருவினர். 'உன்னைக் கொல்லாமல்விட மாட்டேன்!' என்று சண்டை போடத் தொடங்கினர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர், ''நீங்கள் இருவரும் அண்ணன் தம்பியர். உங்கள் நாட்டை அழிப்பதற்காகப் பகைவர்கள் காத்திருக்கின்றனர். உங்களுக்குள் சண்டைபோட்டு எதிர்கள் முயற்சியை எளிதாக்கி விடாதீர்கள். கோபத்தை விடுங்கள்; சண்டையை நிறுத்துங்கள்!'' என்று அறிவுரை சொன்னார்.அவர் பேச்சை அவர்கள் இருவரும் கேட்கவில்லை. கடுமையாகச் சண்டை செய்யத் தொடங்கினர். இதனால் உள்ளம் நொந்த அவர், ''நான் சாவதைப் பார்த்தாவது உங்களுக்குள் சண்டையை விடுங்கள். நாட்டைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்குங்கள்!'' என்றார்.வாளால் வயிற்றில் குத்திக் கொண்டு இறந்துபோனார். இதைப்பார்த்த இருவரும் திகைத்தனர். ஆசிரியரின் சாவு அவர்கள் அறிவுக் கண்களைத் திறந்தது. அதன் பிறகு அவர்கள் இருவரும் சண்டை போடாமல் ஒற்றுமையாக இருந்து, நாட்டை நல்லபடி ஆண்டு பேரும், புகழும் வாங்கினர்.