உள்ளூர் செய்திகள்

இளஸ்.. மனஸ்... (100)

அன்பு மிக்க பிளாரன்ஸ்...நான், 40 வயது இல்லத்தரசி; மகன், 10ம் வகுப்பு படிக்கிறான்; மகா சேட்டைக்காரன்.என்னை பயமுறுத்துவதே அவன் பொழுது போக்கு; ரப்பர் பாம்பு, பல்லி பொம்மைகளை என் மீது ஒட்டி அலற வைப்பான். திடீர் என, 'பேய் மேக்கப்' போட்டு படுக்கையறையில் இருந்து வெளிப்பட்டு பதறடிப்பான். தொலைபேசியில் குரலை மாற்றி பேசி, ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருப்பதாக ஏமாற்றுவான்.'இப்படி எல்லாம் செய்யாதடா... நான் ஒரு பிபி பேஷன்ட்... இதயம் வெடித்து செத்து விட போகிறேன்...' என்றால், 'அதெல்லாம் உனக்கு ஒண்ணும் ஆகாது; நான் செய்வதெல்லாம், ஜஸ்ட் பன்... என்ஜாய்...' என்கிறான். அவனை திருத்த என்ன செய்யலாம்!அன்புள்ள அம்மா...உங்கள் மகன் செய்யும் செயல்களை ஆங்கிலத்தில், 'பிராங்கிங்' என்பர்; பிறரின் பலவீனங்களையும், விருப்பு வெறுப்புகளையும் வைத்து விளையாடுவது என்பதே இதன் பொருள்.பிராங்கிங்கில், நகைச்சுவை இழையோடும்; பொதுவாக பிராங்கிங் ஆபத்தில்லாதது; அமெரிக்காவில், அக்., 31, 'ஹாலோவீன் நாள்' வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.இந்த நாளில், ஆயிரக்கணக்கானோர் பேய் வேடமிட்டு பிராங்கிங் செய்வர்; இதை, தமிழில் கறுப்பு குறும்பு விளையாட்டு எனலாம். இது, ஒரு கட்டத்தில், விபரீத விளையாட்டாகி விடுகிறது. விமான நிலையத்தில், வெடிகுண்டு வைத்திருப்பதாக, பொய் மிரட்டலை ஒரு சிறுவன் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு விட்டால் என்னவாகும்.ஆயிரக்கணக்கான போலீசார் விமான நிலையத்தில் கூடி வெடிகுண்டை தேடி ஏமாறுவர்.போன் எங்கிருந்து வந்தது என ஆராய்ந்து சிறுவன் கைது செய்யப்படுவான்; அவன் மீது சட்ட நடவடிக்கை பாயும்; அவன் எதிர்காலம் நாசமாகும்.சிறுசிறு கறுப்பு குறும்புகள் செய்து, குரூர சந்தோஷம் அடையும் நபர்கள், நாளடைவில் விபரீத குறும்புகளை செய்ய ஆரம்பித்து விடுகின்றனர்.இது, வெளிநாட்டு கலாசார பாதிப்பு.உங்கள் மகன் விஷயத்தில் இரண்டு அணுகுமுறைகளை கையாள்வது நல்லது.* மகனை நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று, கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்யவும். மருத்துவர், கறுப்பு குறும்புகளில் ஒளிந்திருக்கும் ஆபத்துகளை, மகனின் மனதை தைக்கும் அளவுக்கு விளக்கி சொல்வார். ஒரே அமர்வில் ஆலோசனை பெற்றுவிட முடியாது; நான்கைந்து அமர்வுகளில், மகனை கறுப்பு குறும்புகளிலிருந்து நிரந்தரமாய் பிரித்து விடுவார் மருத்துவர்* மகனுடன் தனியாக அமர்ந்து பேசவும்; அவனது கறுப்பு குறும்புகள், எந்தெந்த விதங்களில் இழிவுப்படுத்துகின்றன; காயப்படுத்துகின்றன என கூறவும். ரத்த அழுத்தம் அதிகம் உடையவர்கள், எதிர்பாராத திகிலால் மாரடைப்பு ஏற்பட்டு இறக்க, 100 சதவீதம் வாய்ப்பிருப்பதை விளக்கவும்.கறுப்பு குறும்பு பூதாகரமானால், உறவினர்களை மட்டுமல்ல; உன்னையும் விழுங்கி ஏப்பமிடும் என எச்சரிக்கை செய்யவும். ஆபத்தில்லாத நகைச்சுவை தேவை என்றால், கீழ்கண்ட விஷயங்களில் கவனம் செலுத்த அறிவுரைக்கவும்.* பிரபல நடிகர் சார்லி சாப்ளின் படங்களை பார்க்கலாம்* 'ஸ்டான்ட் அப்' காமெடி ஷோ பார்த்து சிரிக்கவும்* தேவன், பாக்கியம் ராமசாமி கதை புத்தகங்களை படிக்கவும்* காத்தாடி ராமமூர்த்தி, கிரேசி மோகன் நாடக காணொலிகளைப் பார்க்கவும்* சர்க்கஸ்களுக்கு போய் பபூன்களின் கூத்துகளை பார்த்து பேருவகை அடையவும்.கறுப்பு குறும்புகளில் ஈடுபட்டால், படிப்பு கெடும்.நகைச்சுவை உணர்வு வாழ்க்கைக்கு தேவை தான்; ஆனால், நகைச்சுவையே வாழ்க்கை அல்ல. கறுப்பு குறும்புகளில் ஈடுபடும் நண்பர்களிடமிருந்து மகனை விலகியிருக்க அறிவுரைக்கவும். கல்லுாரி படிப்புக்குள் பிரவேசிக்கும் போது, மகன் அதிக மனபக்குவம் அடைந்தவனாக மாறி விடுவான். ஒன்றும் கவலைப்பட வேண்டாம்.- அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !