உள்ளூர் செய்திகள்

இளஸ்.. மனஸ்..! (101)

நல் அறிவுரைகள் சொல்லும் அன்பு மிக்க பிளாரன்ஸ்...என் வயது, 35; இல்லத்தரசியாக இருக்கிறேன். மகள், 7ம் வகுப்பு படிக்கிறாள்; தொலைக்காட்சியில், எம்.ஜி.ஆர்., நடித்த படங்களை பார்க்கும் போது, 'ஏன் இந்த ஐப்ரோ மீசை வரைந்த பெரியவர், கீ கொடுத்த பொம்மை மாதிரி ஆடுராரு... ஓடுராரு...' என்கிறாள்.சிவாஜி நடித்த படங்களை பார்த்தால், 'தங்க குட்டி அதிகமாக நடிக்குது...' என்றும், கமல்ஹாசன் படங்களை பார்த்ததும், 'நல்லா நடிக்கிறேனான்னு பாருங்கன்னு நடிக்கிறார்...' என்றும், ரஜினி படங்களைப் பார்த்து, 'இந்தாளுக்கு நல்ல தமிழ் வாத்தியார் அமையல...' என்றும், கவுண்டமணி நகைச்சுவையைப் பார்த்து, 'காட்டுகத்தல்...' என்றும் கிண்டல் செய்கிறாள். நடிகர் விஜயை, 'சும்மா கழுத்துல நெட்டி முறிக்கிறாரு...' என்றும் விமர்சிக்கிறாள். ஏ.ஆர்.ரகுமான் இசையை, 'டமாடுமால்' என்கிறாள். நடிகர் ஆரி, நடிகர் யோகிபாபு, இசையமைப்பாளர் இமான், நடிகை ரம்யா பாண்டியன் போன்றோரையே அவளுக்கு பிடிக்கிறது. இது இன்றைய நிலை; நாளை எப்படியோ... என் மகள் ஏன் ரசனை குறைவாக நடந்து கொள்கிறாள். அவளை திருத்த என்ன செய்யலாம் சகோதரி.அன்புள்ள அம்மா,பத்து ஆண்டிற்கு ஒருமுறை, ஓவியம், நாடகம், சினிமா, இசை, நடனம், நகைச்சுவை என எல்லாவற்றிலும், ரசனை மாற்றம் ஏற்படுகிறது. இது இயற்கை செய்த ஏற்பாடு; பழையன கழிதலும், புதியன புகுதலும் இயல்பான ஒன்று தான். உலகில் எல்லா நடிகர்களும், ஒருநாள், உப்புச் சப்பற்றவர்களாக போய் விடுகின்றனர். பிரபஞ்சத்தின் எல்லாமுமே ஒன்றிலிருந்து, இன்னொன்றுக்கு தொடர்ச்சியாக நகர்ந்து கொண்டிருக்கின்றன; 10 நாட்கள் விடாமல் வயிறு நிறைய பிரியாணி சாப்பிட்டால், 11ம் நாள், பழைய கஞ்சிக்கு ஏங்குகிறது நாக்கு.தெருக்கூத்து, 50 ஆண்டுகளுக்கு முன் இருந்தது. 30 ஆண்டுகளுக்கு முன், மேடை நாடகங்கள் இருந்தன. 20 ஆண்டுகளுக்கு முன், சினிமா இருந்தது; 10 ஆண்டுகளுக்கு முன், 'டிவி' தொடர்கள் இருந்தன. இப்போது ஆயிரம், 'டிவி' சேனல்களும், நெட் பிளிக்ஸ், ஹூலு, பீகாக், பிரைம் டைம் போன்ற, ஒ.டி.டி., தளங்களும் வந்து விட்டன. சிறுவர்களுக்கு, நுாற்றுக்கணக்கான கார்ட்டூன் சானல்களும், வீடியோ கேம்களும் தாராளமாக இருக்கின்றன.நடிப்பு, நகைச்சுவை, இசை இவற்றிற்கான இலக்கணம் மாறிக்கொண்டே இருக்கிறது; ஒரு ருசியை நாக்கில் தடவி, பலமணி நேரம் ரசித்த காலம் மலையேறி விட்டது. இப்போது, நுாற்றுக்கணக்கான ருசிகளை, நொடிக்கொரு முறை நாக்கில் தடவியபடியே இருக்கின்றனர். ஒரு ருசியை பற்றி அபிப்ராயம் கூறுவதற்குள், 10 ருசிகள் முந்தி வந்து, வரிசையில் நிற்கின்றன.அதனால்தான், 80 வயதுள்ளவருக்கு, தியாகராஜ பாகவதர் பிடிக்கும்; 60 வயதுள்ளவருக்கு, எம்.ஜி.ஆர்., பிடிக்கும்; 50 வயதுள்ளவருக்கு, ரஜினி படம் பிடிக்கும். 30 வயது இளைஞருக்கு, அஜித் மற்றும் விஜய் நடித்த படம் பிடிக்கும்; 20 வயது விடலைக்கு, சிவகார்த்திகேயன் பிடிக்கும்; 10 வயது சிறுவருக்கு, ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு நடிகர் பிடிக்கிறது. ஒரு, 30 வயதுள்ளவர், பிடித்த நடிகரை சொல்லும் போது, பிடிக்காத நடிகர்களை விமர்சிக்காமல் மழுப்பி விடுகிறார். ஆனால், சிறுவர், சிறுமியரிடம் பாசாங்கு இல்லை; சிவாஜியை பிடிக்கவில்லை என கூறினால், அவரது ரசிகர்கள் ஏதாவது செய்து விடுவர் என்ற பயம் இல்லை.உங்கள் மகளை, ரசனை குறைவானவள் என, குறைவாக மதிப்பிட வேண்டாம்; சிறுவர், சிறுமியரின் உலகம் தனியானது. ஒவ்வொரு சிறுவனும், சிறுமியும் தனித்தனி தீவுகள். நடிகர்களுக்கு அடிமையாக இருப்பதை விட, ஒவ்வொரு குழந்தைகளும் நடிகர், நடிகர்களாக திகழட்டுமே...மகளின் கவனம் சினிமா, 'டிவி' தொடர், ஒ.டி.டி., சினிமாக்களில் மட்டும் இருக்காமல், படிப்பின் பக்கமும் இருக்கும் வண்ணம் பார்த்து கொள்ளவும். மகளுக்கு, 'ரசனை சூறாவளி' என்ற பட்டத்தைச் சூட்டுகிறேன்; ரசனை சூறாவளிக்கு ஜே!- அன்புடன், பிளாரன்ஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !