உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (197)

அன்புள்ள பிளாரன்ஸ் ஆன்டி...என் வயது, 15; பிரபல தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவன். எங்கள் குடும்ப உறுப்பினர்கள் வகை வகையாய் அசைவம் சாப்பிடுவர். விபரம் தெரிந்த நாளில் இருந்து, நான் முட்டை கூட சாப்பிடுவதில்லை. நான், சைவத்தை முழுமையாக நேசிக்கிறேன்; உலக நாடுகள் அனைத்தும், மக்கள் யாருமே, அசைவம் சாப்பிடக் கூடாது; மீறினால், மரண தண்டனை என, சட்டம் கொண்டு வந்தால் என்ன... கசாப்பிலிருந்து தப்பிக்கும் எல்லா உயிரினங்களும் வாழ்த்துமே... சைவ உணவை முழுமையாக கடைப்பிடிக்கும் வாழ்க்கைக்கான சாத்தியங்களை கூறுங்கள்.இப்படிக்கு,ஆர்.எம்.கலாதர்.அன்பு செல்லம்...உலகில், ஜனத்தொகை, 800 கோடி. மொத்தம், 195 நாடுகள் உள்ளன; உலக மக்களில், அசைவம் சாப்பிடுவோர், 92 சதவீதம்; உலகில், அதிகமாக மாமிசம் சாப்பிடுவோர் சீனர்களே.ஒவ்வொரு வகை உணவும், மனிதரின் நடத்தையை, ஒவ்வொரு விதமாய் பாதிக்கின்றன. இந்தியாவில், சைவ உணவை பின்பற்றும் மாநிலங்களாக, ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் குஜராத் போன்றவற்றை கூறலாம். ஹிந்துக்களில் சில பிரிவினர், புத்த மதத்தினர், ஜைனர்கள் மற்றும் சீக்கியர்கள் சைவ உணவு பழக்கத்தை அதிகம் பின்பற்றுவோராக இருக்கின்றனர்.உணவு பழக்கம், மதம், பண்பாடு, கலாசாரம், புவியியல் இருப்பு, தொழில் மற்றும் பொருளாதாரம் இவற்றை பொறுத்து அமைகிறது. குதிரை, நாய், பூனை மற்றும் பன்றி மாமிசங்களை, பல நாடுகளில் பல கலாசாரங்களுடன் வாழும் மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.சைவ உணவுக்கு மாறினால், கிடைக்கும் நன்மைகள்:* கார்பன் வெளிப்பாடு, 17 சதவீதம் வரை குறையும்* மீத்தேன், 24 சதவீதமும், நைட்ரஸ் ஆக்ஸைடு, 21 சதவீதமும் குறையும்* பூமியும், கடலும் துாய்மையாகும்* மரண விகிதம், 10 சதவீதம் குறையும்* இதயநோய், பக்கவாதம், புற்று நோய் மற்றும் நீரிழிவு பாதிப்புகள் கணிசமாய் குறையும் * மேய்ச்சல் நிலங்கள் காடுகள் ஆகும்* மிருகம், பறவை மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் நிம்மதியாக வாழும்.சைவ உணவுக்கு முற்றாக மாறினால் வரும் தீமைகள்:* குறுகிய காலத்தில், உலகில் சைவ உணவுக்கான பொருள் உற்பத்தியை தேவையான அளவு உயர்த்துவது சாத்தியமில்லாத விஷயம்* வறுமை, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நிலையில் சரிவு மற்றும் கலாசார அடையாள இழப்பு போன்ற பாதிப்புகள் நிகழும்* பிராணிகளின் கழிவில் தயாரிக்கப்படும் மருந்து பொருட்கள் உற்பத்தி நிற்கும்* மனிதர்களின் உயரமும், ஐக்யூவும் குறையும்.இன்ன உணவு தான், சாப்பிட வேண்டும் என, உலக நாடுகள் சேர்ந்து, சட்டம் கொண்டு வர இயலாது. சிவப்பு மாமிசம் சாப்பிடுவதை முடிந்த அளவு குறையுங்கள்!- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !