இளஸ் மனஸ்! (209)
அன்பு பிளாரன்ஸ் ஆன்டி...என் வயது, 18; மின் பொறியியல் பட்டய படிப்பு படிக்கும் மாணவன். எங்கள் தெருவில், மிதிவண்டி, மடிகணினி மற்றும் கணிப்பொறி திருடியதாக, 16 வயது சிறுவனை, போலீஸ் பிடித்து சென்றது. இப்போது, சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் இருப்பதாக அறிந்தேன். அந்த இல்லம் பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். முழுமையாக அது பற்றிய தகவல்களை கூறுங்கள்...இப்படிக்கு, ஆர்.பத்மகுமார்.அன்புள்ள மகனுக்கு...சிறுவர் செய்யும் குற்றங்களை, 'ஜூவனைல் டெலிக்குவன்சி' என்பர். நம் நாட்டில், 18 வயதுக்கு உட்பட்ட பல கோடி சிறுவர், சிறுமியர் உள்ளனர். சிறுவர் செய்யும் குற்றங்களுக்கான தண்டனையை, சிறார் நீதி சட்டம் - 2000 மற்றும் சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் - 2015 தீர்மானிக்கிறது. சிறுவர் செய்யும் குற்றங்களுக்கு, சிறுவர் நீதிமன்றம், மறுசீரமைப்பு நீதியையும், குற்றவியல் நீதியையும், ஒரு சேர வழங்குகிறது. சிறுவர் கூர்நோக்கு இல்லங்கள், தமிழகத்தில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒன்று வீதம் அமைக்கப்பட்டுள்ளன. குற்றம் செய்ததாக வழக்குப் பதியப்படும் சிறுவர்கள் இங்கு தங்க வைக்கப்படுவர். அவர்களுக்கு, உணவு, உடை, கல்வி, ஒழுக்க பயிற்சிகள் முறைப்படி தரப்படுகிறது.மத்திய, மாநில அரசுகளின் நிதி, மாநில சமூக பாதுகாப்பு துறை, மாவட்ட குழந்தைகள் நலக்குழு, இளைஞர் நீதி குழுமம் அனைத்தும் இணைந்து தான், இது போன்ற சிறுவர் கூர் நோக்கு இல்லங்களை நடத்துகின்றன.சிறுவர் இல்லத்துக்கு, 16 வயதில் வரும் இளம் குற்றவாளியின் தண்டனைக்காலம், 18 வயது நிறைவில் முடியாமல் இருந்தால், அவர் பொது சிறைக்கு மாற்றப்படுவார்.கொடிய குற்றங்களில் ஈடுபடும், 16 முதல், 18 வயதுடையோரை, இளைஞர்களாக கருதி, கடும் தண்டனை வழங்க, மத்திய அரசு, ஒரு சட்டதிருத்த மசோதாவை நிர்பயா மரணத்துக்கு பின், பார்லிமென்டில் நிறைவேற்றியது.சிறுவர் இல்லங்களில் அடைக்கப்படும் சிறுவர்களில் பலர் திருந்துவதில்லை என கூறப்படுகிறது. மற்ற குற்றவாளிகள் சகவாசத்தில், பெரும் குற்றவாளிகளாக வடிவெடுக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.சிறுவர் இல்லத்தை, சீர்த்திருத்த, கீழ்க்கண்ட விஷயங்களை செய்யலாம்...* சிறுவர் இல்லங்களில், 20 இளம் குற்றவாளிகளுக்கு ஒரு மனநல ஆலோசகரை நியமித்து, ஆலோசனைகள் வழங்கலாம்* விசாரணை மன்றத்தில், கணினி, சுருக்கெழுத்தர் மற்றும் பல நவீன வசதிகள் இணைக்கப்பட வேண்டும். கோப்புகளும், வழக்கு ஆவணங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்* சிறுவர் கூர்நோக்கு இல்லங்களை கண்காணிக்க, வீடியோ இணைப்பு தேவை* சிறுவர் இல்லங்களில், நன்னடத்தை அதிகாரியாக பெண்களை நியமிப்பது நலம்* வயது வித்தியாசம் உள்ள இளம் குற்றவாளிகளை, ஒரே இடத்தில் தங்க வைக்கக் கூடாது* நீதிமன்றம் வசூலிக்கும் அபராதத்தில், 25 சதவீதம், சிறார் இல்லங்களுக்கு செலவிட வேண்டும்* உலகமயமாக்கல், அளவு கடந்த நுகர்வு வெறி மற்றும் தனியார் கல்வி முறையை கட்டுப்படுத்தினால், சிறுவர் குற்றங்கள் வெகுவாக குறைய வாய்ப்பு ஏற்படும்.- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.