இளஸ் மனஸ்! (224)
அன்பு பிளாரன்ஸ் ஆன்டி...என் வயது 21; தனியார் கல்லுாரியில் படித்து வரும் மாணவி. உலகம் முழுக்க உள்ள பெட்ரோல் கி.பி., 2100ல் தீர்ந்து போனால் என்ன ஆகும். உலகம் தொடர்ந்து இயங்குமா அல்லது முழுக்க ஸ்தம்பித்து போகுமா... பெட்ரோல் தீர்ந்து போகும் வாய்ப்பு இருக்கிறது தானே... மீண்டும் மிதிவண்டி, மாட்டு வண்டி, குதிரை வண்டி, ஒட்டகங்கள், ரிக் ஷா புழக்கத்தில் வந்து விடும் அல்லவா... மொத்தத்தையும் அவதானித்து பதில் கூறுங்கள்.இப்படிக்கு,எல்.கயல்விழி மித்ரன்.அன்பு மகளுக்கு...ஒரு நாளைக்கு, உலக அளவில், கச்சா எண்ணெய் உற்பத்தி தோராயமாக, 80 கோடி பீப்பாய்கள். ஒரு பீப்பாயின் கொள்ளளவு, 159 லிட்டர். கச்சா எண்ணெயில் இருந்து தான் பெட்ரோலை பிரித்து எடுக்கின்றனர்.உலகின், 97 நாடுகளில், கச்சா எண்ணெய் எடுக்கப்படுகிறது. அமெரிக்கா, ஆசிய ஐரோப்பிய கண்டங்களில் உள்ள நாடான ரஷ்யா, மேற்காசிய நாடான சவுதி அரேபியா ஆகியவை தான் கச்சா எண்ணெய் உற்பத்தியில் பிரதான இடம் வகிக்கின்றன.கச்சா எண்ணெய் முழுதும் தீர இன்னும், 77 ஆண்டுகள் காத்திருக்க தேவையில்லை. 47 ஆண்டுகளில் தீர்ந்து விடும் என, ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. தவிர ஹைட்ரஜன், இயற்கை வாயு, புரபேன், எத்தனால், மெத்தனால், புட்டனால், காய்கறி கழிவுகளில் எடுக்கப்படும் எண்ணெயிலும் வாகனங்கள் ஓடுகின்றன.கச்சா எண்ணெய் தீர்ந்தால், அதன் உபபொருட்களான கெரசின், ஆஸ்பால்ட், கேசோலின், பென்சீன், நாப்தலின், நாப்தாவும் காணாமல் போய் விடும். கச்சா எண்ணெயை துாய்மைப்படுத்தினால், பெட்ரோல், டீசல், ஏவியேஷன் பெட்ரோல், பாரபின் மெழுகு, மசகு எண்ணெய் கிடைக்கிறது. இவையும் காணாமல் போய் விடும்.கச்சா எண்ணெய் உற்பத்தி இல்லாமல் போனால் என்ன நடக்கும்...எண்ணெய் வளநாடுகளின் பொருளாதாரம் தலைகீழாக பல்டி அடிக்கும். எண்ணெய் வளநாடுகளில் பணிபுரிந்தோர் தத்தம் நாடுகளுக்கு திரும்புவர். பெட்ரோல், டீசலால் ஓடிய இரண்டு சக்கர, நான்கு சக்கர, கனரக வாகனங்கள், காயலான் கடைக்கு போகும்.இந்த எரிபொருள் இல்லாமல் போனால் அதற்கான மாற்றை இயற்கை ஒளித்து வைத்திருக்கிறது. அடுத்த இரு தசாப்தங்களுக்குள் இயற்கை ஒரு புதிய கண்டுபிடிப்பை மனித குலத்துக்கு பரிசளிக்கும். இப்போதே மின்சக்தியில் இயங்கும் வாகனங்கள் வந்து விட்டன.உலகம் முழுவதும் கிடைக்கக்கூடிய மாற்று எரிபொருள் வெகுசீக்கிரம் வந்தே தீரும். அந்த மாற்று எரிபொருள் மின்னேற்றம் செய்யப்பட்ட கடல் நீராகக் கூட இருக்கலாம்; அல்லது மூலிகை சாறாய் இருக்கலாம். ஒவ்வொரு, 10 ஆண்டுகளுக்கும், புதியதொரு விஞ்ஞான சட்டை போட்டுக் கொள்கிறது பூமி. இப்போது, முடிந்தவரை எரிபொருளை மிச்சப்படுத்துவோம். குறைந்த பயண துாரத்தை கடக்க இரண்டு சக்கர வாகனத்தை தவிர்த்து நடந்தே போகலாம். 10, 20 கி.மீ., துாரத்தை பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் மூலம் கடக்கலாம். 50 அல்லது 100 கி.மீ., துாரத்தை அரசு போக்குவரத்து பேருந்துகளில் அடையலாம். எங்கும் ஸ்போர்ட்ஸ் மிதிவண்டியில் போ செல்லக்குட்டி!- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.