இளஸ் மனஸ்! (75)
அன்புக்குரிய பிளாரன்ஸ் அம்மாவுக்கு...நான், 6ம் வகுப்பு படிக்கும் மாணவி; பெற்றோருக்கு ஒரே மகள்; எப்போதும், சுறு சுறுப்பாக இருப்பேன். நான்றாக படிப்பேன்; உற்சாகமாக விளையாடுவேன்; எல்லா விஷயத்திலும் ஆர்வமுடன் செயல்படுவேன். பகலில் சரியாக சாப்பிட மாட்டேன். ஆனால், இரவில் நன்றாக சாப்பிடுவேன். துாக்கமின்மை தான் என் பிரச்னை. எப்போதும், இரவு, 9:00 மணிக்கு படுக்கைக்கு போனாலும், நள்ளிரவு, 1:00 மணிக்கு மேல் தான் துாக்கம் வரும்; இது பெற்றோருக்கு மிகவும் தொல்லையாக உள்ளது. சரி செய்ய வழி சொல்லுங்க அம்மா...அன்பு மகளே...உடல் மற்றும் மன பாதிப்பு காரணமாகவோ, எடுத்துக்கொண்ட மருந்துகளின் பக்கவிளைவாலோ, துாக்கமின்மை என்ற பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். துாக்கம் வர மறுக்கிறதே என வேதனைப்படுவதாலும், ஒருவருக்கு துாக்கமின்மை பாதிப்பு தொடர வாய்ப்பு உண்டு. அப்படி எல்லாம் உன் மனதில் எண்ணமிருந்தால், அவற்றை உடனே அகற்றி விடவும்.துாக்கம் தொடர்பாக பல ஆய்வுகள் நடந்துள்ளன. அவற்றின் படி...* ஐந்து வயது வரையுள்ள குழந்தை, தினமும், 10 முதல், 13 மணிநேரம் துாங்க வேண்டும்* ஆறு முதல், 13 வயதுள்ள சிறுவர், சிறுமியர் தினமும், 11 மணி நேரம் துாங்க வேண்டும் * அடுத்து, 'டீனேஜ்' வயதுள்ளவர், 10 மணி நேரம் வரை துாங்கலாம். இதையே, தேசிய துாக்க நிறுவனமும் அறிவுறுத்தியுள்ளது.பொதுவாக, உடல் வளர்ச்சியடையும் போது, ஆண்டிற்கு, 15 நிமிடம் என்ற விகிதத்தில் துாக்கம் குறையும். பருவ வயது பெண்களுக்கு, இரண்டு மணி நேரம் துாக்கமின்மை உள்ளதாக கண்டறிந்துள்ளனர்.துாக்கமின்மை பல விளைவுகள் ஏற்படுத்தும். உடல், மனநலம், படிப்பு போன்றவற்றை வெகுவாக பாதிக்கும்.துாக்கமின்மையை விரட்ட சில ஆலோசனைகள் தருகிறேன் குட்டிம்மா... இவற்றை அன்றாடம் பயிற்சி செய்யவும். * தினமும் காலையில், 10 நிமிடம் சூரிய வெளிச்சத்தில் நிற்கவும்* இரவில் துாங்க செல்வதற்கு முன், வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்* துாங்கும் அறையில், மங்கலான வெளிச்சமும், சுத்தமான காற்றோட்டமும் இருக்கட்டும்* துாங்க செல்வதற்கு முன் விரும்பிய கதைகளைப் படிக்கலாம் * இனிமை நிறைந்த இசையும் கேட்கலாம்* அலைபேசி பயன்பாட்டை மாலை முதலே தவிர்த்து விடவும்* துாக்கத்தை பாதிக்கும் விஷயங்களாக நீ எண்ணுவதை அன்றாடம் எழுதி பட்டியலிடவும்* இரவில் படு பயங்கரமாக யோசிக்கும் பழக்கத்தை கைவிடு* தீர்வு காண முடியாத விஷயங்களில் மனதைக் குழப்பிக் கொள்ளாதே* இரவில் தயிர் சாதம், பழங்கள் போன்ற எளிய உணவுகளை சாப்பிடவும்.துாக்கம் வரவழைக்க சில எளிய பயிற்சிகள் உள்ளன. அவற்றை அன்றாடம் செய்யலாம்.உதட்டை மெல்ல திறந்து, 'உஷ்...' என சத்தம் எழுப்பவும்; உதட்டை மூடி, காற்றை உள்ளிழுத்தபடி நான்கு வரை எண்ணவும். மூச்சை, ஏழு நொடிகள் உள் நிறுத்தவும். எட்டு நொடிகள், 'உஷ்...' என்ற சத்தத்துடன், மூச்சை வெளியிடவும். பின் இயல்பு நிலைக்கு வரவும். நான்கு முறை காற்றை நன்றாக உள்ளிழுத்து ஆழ்ந்த சுவாசம் செய்யவும். இந்த பயிற்சி நல்ல துாக்கத்தை கொண்டு வரும்.உறங்க போகும் முன் உடலை தளர்த்தும் பயற்சிகளும் நல்ல பலனைத் தரும். புருவத்தை ஐந்து நொடிகள் மேலேற்றவும்; நெற்றி தசைகள் இறுக்கமாகும். பின் தசைகளை தளர்த்தி, 10 நொடி காத்திருக்கவும். மனதை திறந்து சிரிக்கவும். தலையை பின் சாய்த்து, மேல் நோக்கி பார்க்கவும்; கழுத்து தசைகளை தளர்த்தவும். தொடர்ந்து படிப்படியாக உடல் முழுவதும் தசைகளை தளர்த்தி காலில் முடிக்கவும்; துாக்கம் ஓடோடி வந்து விடும்.துாங்கும் அறை வெப்ப நிலை, 16 முதல் 20 டிகிரிக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். இச்சூழல், 'மெலோடோனின்' என்ற, துாக்க ஹார்மோனை அதிகம் சுரக்க வழி செய்யும்.இந்த பயிற்சிகளை முறையாக செய்தால், துாக்க பிரச்னையை எளிதாக வென்று விடலாம் மகளே! நம்பிக்கையுடன் முயற்சி செய். எள்ளளவும் பயம் கொள்ளாதே... துாக்கம் உன் கண்களை தழுவட்டும். வாழ்வில் என்றும் அமைதி நிலவட்டும்.- மனம் நிறைந்த அன்புடன், பிளாரன்ஸ்.