உள்ளூர் செய்திகள்

கர்ணம் மல்லேஸ்வரி!

ஒலிம்பிக் பளு துாக்கும் போட்டியில் பதக்கம் வென்ற, முதல் இந்திய பெண், கர்ணம் மல்லேஸ்வரி. ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளத்தில் ஜூன் 1, 1975ல் நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். விளையாட்டு ஆர்வம் மிகுதியால் கடும் பயிற்சிகள் மேற்கொண்டார். அவரது தாய், அதற்கு ஊக்கம் அளித்தார்.சிறுமியாக இருந்த போதே, நீண்ட துாரம் பயணம் செய்து பயிற்சிகள் மேற்கொண்டார். தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், 1992ல் நடந்த, ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்றார்.மத்திய கிழக்கு நாடான துருக்கியில், 1994ல் நடந்த உலக பளு துாக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில், இரண்டு தங்க பதக்கங்களும், ஒரு வெண்கல பதக்கமும் பெற்றார். பளு துாக்குவதில், 113 கிலோ எடை பிரிவில் உலக அளவில் புதிய சாதனையும் படைத்தார். கிழக்காசிய நாடான தென் கொரியாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில், மூன்று தங்க பதக்கங்கள் பெற்றார்; பின், ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதை வென்றார். இந்திய அரசு, 1997ல் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.திருமணத்துக்கு பின், ஹரியானா மாநிலம், யமுனை நகருக்கு குடிபெயர்ந்தவர், குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுவந்தார். பளு துாக்கும் பயிற்சியையும் அவர் கைவிடவில்லை.தாய்லாந்து, பாங்காக் நகரில், 1998ல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்றார். ஆஸ்திரேலியா, சிட்னி நகரில், 2000ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று சாதனை படைத்தார். பளு துாக்கும் போட்டியில் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமை பெற்றார். இந்திய சமூகத்தில் பெண்களுக்கு நிலவும் சம்பிரதாய பழக்க வழக்கங்களை உடைத்தவர் மல்லேஸ்வரி. பத்தாண்டு விளையாட்டு வாழ்க்கையில், 11 தங்கப் பதக்கம், மூன்று வெள்ளி பதக்கம், ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்று சாதித்துள்ளார்.கடின உழைப்பும், விடாமுயற்சியும் புகழ் உச்சியை அடைய உதவும் என்பதை, அவரது வாழ்க்கை நிரூபித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !