கனிவும் கண்டிப்பும்!
சேலம் மாவட்டம், செவ்வாய் பேட்டை நகராட்சி ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1967ல், 8ம் வகுப்பில் சேர்ந்திருந்தேன். தலைமை ஆசிரியராக இருந்த தீனதயாளன், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்; கண்டிப்பானவர். மிகக் கனிவாகவும் இருப்பார். மாணவர்கள் சட்டையை, 'டக் - இன்' செய்து வர வேண்டும் என கண்டிப்பான உத்தரவிட்டிருந்தார். என் வகுப்பில், மூன்று பிரிவுகள் இருந்தன. உடன் படித்த நண்பர்கள் வேறு பிரிவில் படித்தனர். அவர்களை பிரிந்த வேதனையில் திடீரென ஒரு யோசனை தோன்றியது. அன்று மாலை, தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றேன். தைரியத்தை வரவழைத்தபடி, 'ஐயா... உள்ளே வரலாமா...' என்று கேட்டேன். அதிகாரம் நிறைந்த தோரணையில் அனுமதித்தார். பதற்றத்துடன் சென்ற என்னை, அருகில் அழைத்தார். அரைகுறையாக, 'டக் - இன்' செய்திருந்த என் சட்டையை, கால் சட்டைக்குள் செருகி விட்டபடி, 'என்ன...' என்று விசாரித்தார்.பிரிவு மாற்றித்தரும் கோரிக்கையை சொன்னதும் உரிய காரணத்தை கேட்டார். நடுங்கியபடி, 'ஆங்கிலத்தில் மிகவும் பலவீனமாக இருக்கிறேன்; அந்த பிரிவு ஆசிரியர் ஆங்கிலம் சிறப்பாக சொல்லி தருவார்... அதனால் தான்...' என்றேன். ஒருமுறை மேலும், கீழும் பார்த்தவர், வருகைப் பதிவேட்டில் சிவப்பு மையால், பிரிவை மாற்றியபடி, 'நாளை முதல் அங்கு அமர்ந்து பாடங்களை கேள்; நல்லா படிக்கணும்...' என அறிவுரைத்து அனுப்பினார்.என் வயது, 68; கோரிக்கைக்கு செவி சாய்த்து பரிவுடன் உதவிய அந்த தலைமை ஆசிரியரை இன்றும் மனதில் கொண்டுள்ளேன். - ஜி.ஜெயராமன், சேலம்.