வாழ்க்கை பாடம்!
பள்ளியில் படிக்கும் மகனுடன் வசித்து வந்தார் தந்தை. தாய் இல்லாததால் மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்தார். படிப்பில் சிறப்பு கவனம் செலுத்தியவன் வகுப்பில் முதல் மாணவனாக திகழ்ந்தான். ஒரு நாள் காலை -இரண்டு தட்டில் இட்லி எடுத்து சாப்பாட்டு மேஜையில் வைத்தார். சிறிய தட்டில் நல்லெண்ணெய் கலந்த மிளகாய் பொடி இருந்தது. மற்றொன்றில் எதுவும் வைக்கவில்லை.''மகனே... வேண்டியதை எடுத்துக் கொள்...'' என்றார் தந்தை.மிளகாய் பொடி இருந்த இட்லி தட்டை எடுத்தான் மகன். தன் புத்திசாலித்தனமான முடிவை எண்ணி மனதிற்குள் பாராட்டி கொண்டான். மற்றொரு தட்டில் இருந்ததை சாப்பிட ஆரம்பித்தார் தந்தை. மகனுக்கு ஒரே ஆச்சரியம். அந்த தட்டில் இட்லிக்கு அடியில், தொட்டுக்கொள்ள குட்டி கிண்ணங்களில், சாம்பார், சட்னி, மிளகாய் பொடி இருந்தன. அவசரப்பட்டு எடுத்த முடிவுக்காக வருந்தினான் மகன்.மென்மையாக சிரித்தபடி, ''ஒன்றை நினைவில் கொள். கண்கள் பார்ப்பது எல்லாம் உண்மை இல்லாமல் போகலாம்...'' என்றார் தந்தை.மறுநாள் -இரண்டு தட்டில் இட்லியை சாப்பாட்டு மேஜையில் வைத்தார். சின்ன தட்டில், நல்லெண்ணெயுடன் கலந்த மிளகாய் பொடி இருந்தது. மற்றொரு தட்டில் எதுவும் இல்லை. ''தேவையானதை தேர்ந்தெடுத்துக் கொள்...''எதுவும் இல்லாத தட்டை தேர்ந்தெடுத்தான் மகன்.அன்று அவன் தேர்வு செய்த தட்டில் எதுவும் இல்லை.''அனுபவ அடிப்படையில், எதையும் நம்பக் கூடாது; ஏனென்றால், சில நேரங்களில், வாழ்க்கையில் சில நிகழ்வுகள் ஏமாற்றக்கூடும்; இதை பாடமாக எடுத்துக் கொள்...'' என கற்பித்தார் தந்தை.மூன்றாவது நாள் -காலை, இரு தட்டில் இட்லிகளை மேஜையில் வைத்தார்; வழக்கம் போல், ஒரு கிண்ணத்தில் மிளகாய் பொடி, நல்லெண்ணெய் கலந்து இருந்தது. மற்றொன்றில் எதுவும் இல்லை.''நீயே தட்டை தேர்ந்தெடுத்துக் கொள்...'' அன்பாக உரைத்த தந்தையை பொறுமையாக பார்த்தான் மகன்.''அப்பா... நீங்கள் தான் குடும்பத்தின் தலைவர்; குடும்ப நலன் கருதி உழைக்கிறீங்க; எனவே, முதலில் தட்டை நீங்க எடுத்துக் கொள்ளுங்கள்; மற்றதை நான் எடுத்து கொள்கிறேன்...'' என்றான் மகன்.மிளகாய் பொடி இருந்த தட்டை எடுத்தார் தந்தை.வெறும் இட்லி இருந்த தட்டை அருகில் இழுத்தவனுக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. இட்லிகளின் அடியில், குட்டி கிண்ணங்களில், சாம்பார், சட்னி, மிளகாய் பொடி என்று அனைத்தும் போதுமான அளவு தொட்டுக்கொள்ள இருந்தன.''மற்றவர்களுக்கு நல்லது நினைக்கும் போதெல்லாம் உனக்கும் நல்லதே நடக்கும்...'' அறிவுரைத்தார் தந்தை.குழந்தைகளே... நல்லதே நினையுங்கள்... நன்மையே விளையும்! - வி.ஜி.ஜெயஸ்ரீ