உள்ளூர் செய்திகள்

முலாம்பழ விதை!

முன்னொரு காலத்தில், ஏழை உழைப்பாளி ஒருவன் இருந்தான்; அவனுக்குக் கொஞ்சம் நிலம் இருந்தது.'உணவா, உழைப்பா' என்ற கேள்வி எழுப்பினால், உழைப்புக்கே முதலிடம் கொடுப்பான். தனக்கிருந்த கொஞ்ச நிலத்தில், இரவு, பகலாகப் பாடுபட்டு உழைத்தான்.வழக்கம் போல, நிலத்தை உழுத போது, கொக்கு ஒன்று அம்பு தாக்கி, பூமியில், விழுந்தது.விரைந்து ஓடி, கொக்கை எடுத்தான்; கால் அடிப்பட்டு இருந்தது. வீட்டுக்கு எடுத்து வந்து, சிகிச்சை செய்தான்; குணமான கொக்கு பறந்து சென்றது. ஒரு நாள் -ஏழைக் குடியானவன் வயலில், விதைக்க ஆரம்பித்த போது, பறந்து வந்து அந்தக் கொக்கு, அவன் மீது முலாம் பழ விதைகள் மூன்றை போட்டது; அந்த விதைகளை நிலத்தில் விதைத்தான்.சில நாட்களிலேயே, விதைகள் முளை விட, ஆரம்பித்தன. அவனது உழைப்பில், முலாம் பழங்கள் சீக்கிரமே கனிந்து குலுங்கின. அவற்றில் மிகப்பெரிய பழங்கள் மூன்றைப் பறித்து, ரொம்பச் சிரமப்பட்டு வீட்டுக்கு எடுத்து வந்தான்.வீட்டில், விருந்துக்கு ஏற்பாடு செய்து, நண்பர்களையும், உறவினர்களையும் அழைத்தான். முலாம் பழங்களில் ஒன்றை எடுத்து நறுக்கி, விருந்து படைக்க நினைத்து, கத்தியை எடுத்து, தோலைக் கீறினான். தோல், மிகவும் கெட்டியாக இருந்ததால், எப்படி முயன்றும் தோலைக் கீற முடியவில்லை; மற்ற பழங்களை எடுத்து, நறுக்க முயன்றான்; முடியவில்லை.'என்னடா இது... அதிசயமா இருக்குதே' என்று எண்ணியபடியே, ஒரு பெரிய வெட்டரிவாளை எடுத்து, பழத்தின் மீது ஒரு போடு போட்டான். முலாம் பழம், இரண்டு துண்டுகளாக விரிசல் அடைந்தது. அதன் உள்ளே இருந்து, தங்க நாணயங்கள் கொட்டின. மூன்று முலாம் பழங்களில் இருந்தும், தங்க நாணயங்கள் கிடைத்தன.பிறகு, அந்த ஏழை, மிகப்பெரிய பணக்காரன் ஆகி விட்டான். ஏழையின் வீட்டு பக்கத்தில், ஒரு செல்வந்தன் வசித்து வந்தான். ஏழை, திடீர் பணக்காரன் ஆனதைக் கண்டு, செல்வந்தனுக்கு ஒரே ஆச்சரியம்.அவன் வீட்டுக்குச் சென்றான். திடீர் பணக்காரத் தனம் ஏதுமின்றி, வழக்கம் போல் மரியாதை செலுத்தி, செல்வந்தனை வரவேற்றான். ''நீ எப்படி இவ்வளவு பெரிய பணக்காரனாக ஆனாய்...'' என்று கேட்டான், செல்வந்தன்.நடந்த விபரங்களைச் சொல்லி முடித்தான்.செல்வந்தனுக்கு அளவு கடந்த பேராசை ஏற்பட்டது. 'கொக்கு - முலாம்பழம் - தங்க நாணயம்' என்று, பைத்தியம் பிடித்தவன் போல், மனதிற்குள் உளறியபடியே வீடு வந்து சேர்ந்தான்.அடுத்த நாள் -தன் வயலை நோக்கிச் சென்றான் செல்வந்தன்; அங்கு, அந்தக் கொக்கு பார்வையில் பட்டது. அதற்கு தெரியாமல் ஒரு கம்பை எடுத்து, அதன் காலை ஓடித்தான்; பின், அந்தக் கொக்குக்கு சிகிச்சை செய்ய, வீட்டுக்கு எடுத்துச் சென்றான்.சில நாட்களில், அந்த கொக்கு குணமடைந்து, பறந்து போய் விட்டது; அந்தச் செல்வந்தன், தன் வயலுக்கு போய், அந்த கொக்கை எதிர்பார்த்து காத்திருந்தான்.ஒரு நாள் -அந்தக் கொக்கு பறந்து வந்து, இரண்டு விதைகளைப் போட்டது. அந்த விதைகளை எடுத்து, பயிர் செய்தான். விதைகள் முளைவிட்டன. கொடி படர்ந்து, பூவெடுத்துக் காய்த்து முலாம்பழங்கள் பழுத்துக் குலுங்கின.ஒரே கொண்டாட்டம்; அவன் உள்ளம் துள்ளிக் குதித்து, விளையாடியது.'இன்னும் மிகப்பெரிய செல்வந்தன் ஆகப் போகிறோம்' என்று, மனத்திற்குள் நினைத்தான். நண்பர், உறவினர் அனைவரையும், வீட்டுக்கு அழைத்தான்; செல்வந்தனின் வீடு, விருந்தினர் பட்டாளத்தால் களை கட்டியது.கழனியிலிருந்து வந்த முலாம் பழங்களை எடுத்தான்; கத்தியால், கீறினான்; அதிலிருந்து, தங்க நாணயம் வரும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், விரிசல் அடைந்த முலாம் பழத்திலிருந்து, பூரான்களும், தேள்களும் கூட்டம் கூட்டமாக வெளியே வந்தன. செல்வந்தனை, நண்பர், உறவினர்கள் கடித்துத் தீர்த்தன.செல்வந்தன் உயிர் பிழைப்பதே அபூர்வம் என்றாகி விட்டது.குட்டீஸ்... மற்றவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை பார்த்து, 'காப்பி' அடிக்க கூடாது; பொறாமைப்பட கூடாது; உங்களுக்கு எது கிடைக்கணும் என்று உள்ளதோ அது தான் கிடைக்கும; மீறி, மற்றவர்களுடைய அதிர்ஷ்டத்தில் மூக்கை நுழைத்தால், செல்வந்தன் கதிதான் ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !