மினி தொடர் (1) - தியாகி!
இமயமலைச்சாரலில் சொர்ணபுரி என்றொரு நகரம் இருந்தது. அதைத் தூமகேது என்ற மன்னன் ஆட்சி புரிந்தான். இவனிடம் தேவலோகத்திலிருந்த கற்பக மரம் ஒன்று இருந்தது. இதை இவனுடைய முன்னோர்களில் ஒருவருக்குத் தேவேந்திரன் பரிசாக அளித்திருந்தான்.தூமகேது கற்பக மரத்தின் உதவியினால் தன் பகைவர்களையெல்லாம் வென்று, பெரும் புகழுடன் அரசாட்சி செய்து கொண்டிருந்தான். பகைவர்கள், அவனை நெருங்கவே பயப்பட்டனர்.தூமகேதுவுக்கு ஜீமூதவாகனன் என்றொரு மகன் இருந்தான். இவன் நற்குணங்கள் நிரம்பப் பெற்றவன். தூமகேதுவுக்கு வயதாகிவிட்டதால் ஆட்சி புரிய விரும்பாமல், தமது மகன் ஜீமூதவாகனனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தான்.ஜீமூதவாகனன் பட்டத்திற்கு வந்ததும், எல்லா மக்களுக்கும் நன்மை செய்ய விரும்பினான்.ஒருநாள் பல காலமாகத் தங்களிடம் இருக்கும் கற்பக மரத்திடம் சென்றான். ''கற்பகத்தருவே, நீ இங்கிருப்பதால் எங்களுக்கு மட்டும்தான் பலன். உலகம் பூராவுக்கும் நன்மை தரக்கூடியவள் நீ. உன்னை சுயநலம் காரணமாக இங்கே வைத்திருப்பது நல்லதல்ல என்று கருதுகிறேன். எனவே, நீ இங்கிருந்து சென்று உலக மக்களுக்கெல்லாம் நன்மையைத் தருவாயாக,'' என்று கூறினான்.அடுத்த கணம் கற்பக மரம் தரையிலிருந்து வேருடன் கிளம்பியது. போகிற வழியெல்லாம் தங்க நாணயங்களை இறைத்துக் கொண்டே சென்றது. ஆகாயத்திலிருந்து பொழிந்த தங்க நாணயங்களை மக்கள் எல்லாரும் மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்டனர்.உலகம் பூராவும் தங்க நாணயங்களை பெய்து விட்டுக் கற்பகமரம் இந்திரலோகம் போய்ச் சேர்ந்தது.பலகாலமாக அவர்களிடமிருந்த கற்பக மரம் போய்விட்டதை அவர்களுடைய பங்காளிகள் அறிந்தனர். 'ஜீமூதவாகனனை முறியடிக்க இதுவே சரியான தருணம்' என்று நினைத்தனர்.உடனே அவர்கள் பெரிய படையைத் திரட்டிக் கொண்டு சொர்ணபுரியின் மீது படையெடுத்தனர்.இதைக் கண்ட தூமகேது, ''மகனே, பகைவர்களை விடப் பங்காளிகள் கொடியவர்கள். அவர்கள் எல்லாரும் இப்பொழுது ஒன்று திரண்டு நம்மீது படையெடுத்து வந்திருக்கின்றனர். அவர்களை வேருடன் அழித்து நாசம் செய்ய வேண்டியது உன் பொறுப்பு,'' என்று மகனிடம் கூறினான்.''தந்தையே! பங்காளியைக் கொன்றுவிட்டு எவ்வளவு காலம் நாம் மட்டும் நிலையாக ஆட்சி செய்து கொண்டிருக்க முடியும்? என்றாவது ஒரு நாள் நாமும் இறந்து போகக் கூடியவர்கள்தானே! சில காலம் மட்டுமே உயிருடன் வாழ்வதற்கு இத்தகைய பாபச் செயல்களைச் செய்யலாமா? அழிந்து போகக் கூடிய இந்த உடலைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நம்முடைய உறவினர்களையே கொல்லலாமா? எனவே, இந்த நாட்டை அவர்களிடமே கொடுத்து விட்டுக் காட்டுக்குச் சென்றுவிடலாம் என்று பார்க்கிறேன். தங்கள் யோசனை என்னவோ!'' என்று தந்தையைப் பார்த்துக் கேட்டான் ஜீமூதவாகனன்.''மகனே, எனக்கோ வயதாகிவிட்டது. காடு வா வா என்கிறது. வீடு போ போ என்கிறது. இந்த நிலையில் எனக்கு ஆட்சியின் மீது எவ்விதப் பற்றும் இல்லை. எனக்குப் பிறகு நீ தான் இந்த நாட்டின் ஆட்சியைக் கவனித்துக் கொள்ளப் போகிறவன். நீயே இதை வேண்டாமென்று உதறித் தள்ளுகையில், நான் மட்டும் அவர்களிடம் போரிட்டு என்ன பயன்? எனவே, நீ சொன்னவாறு இந்த நாட்டை அவர்களிடமே கொடுத்துவிட்டு நானும் உன்னுடன் காட்டுக்கு வந்துவிடுகிறேன்,'' என்றார் தூமகேது.பங்காளிகள் அனைவரும் தங்கள் படை களைக் கண்டு தந்தையும், மகனும் காட்டுக்கு ஓடிவிட்டதாக நினைத்துக் கொண்டனர்.ஜீமூதவாகனனும், அவன் தந்தை தூம கேதுவும் காட்டுக்குச் சென்றனர்.கடிட்டில் விச்வாவசு என்றொரு முனிவர் இருந்தார். அவருக்கு மலையவதி என்றொரு பெண்; அவள் அழகு மிக்கவள். உலகம் பூராவுக்கும் நன்மையை அளித்த ஜீமூதவாகனனின் புகழ் அவள் செவியிலும் விழுந்தது. 'மணந்தால் அவரையே மணப்பேன்; இல்லாவிட்டால் உயிரை விட்டுவிடுவேன்' என்று சபதம் செய்திருந்தாள்.இதை அறிந்த அவளுடைய தோழிகளில் ஒருத்தி, ''தேவி! ஜீமூதவாகனர் அரச குலத்தைச் சேர்ந்தவர். அவருக்குப் பெண் தர எத்தனையோ அரசர்கள் காத்திருக்கின்றனர். அப்படியிருக்கையில் காட்டில் வசிக்கும் உங்களுக்கு அவர் கணவராக வாய்ப்பாரா? இதை எண்ணிப் பார்க்காமல் வீணாகச் சபதம் செய்வதில் என்ன பயன்,'' என்றாள்.''தோழி இந்தப் பிறவியில் அவரைக் கணவராக அடைய முடியாது என்று தெரிந்த பின்னரும் நான் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை. உடனே என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன். அடுத்த பிறவியிலாவது காளிதேவி எங்களை ஒன்று சேர்த்து வைப்பாளாக!'' என்று கூறிய மலையவதி, யார் சொல்லியும் கேளாமல் நேரே காளிகோவிலை அடைந்தாள். அங்கிருந்த மரக்கிளை ஒன்றில் தன் புடவைத் தலைப்பை முடிந்து சுருக்கிட்டாள். பின்னர் அதில் தன் கழுத்தை நுழைத்துச் சுருக்கிட்டுக் கொள்ளப் போனாள் மலையவதி.அப்பொழுது காளிதேவி அவள் முன் தோன்றி, ''குழந்தாய். அவசரப்பட்டு உயிரை மாய்த்துக் கொள்ள விரும்பாதே! உன் விருப்பப்படியே நடந்தேறும். நீ விரும்புகிற ஜீமூதவாகனனையே நீ அடைவாய். அவன் வித்தியாதரர்களுக்கெல்லாம் சக்ரவர்த்தியாகிப் பல கோடி ஆண்டுகள் உயிர் வாழ்வான்,'' என்று கூறி மறைந்தாள்.காளிதேவியின் வரத்தைப் பெற்று மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினாள் மலையவதி. அங்கு ஜீமூதவாகனனும், தூமகேதுவும் தங்கள் விருந்தினர்களாக வந்திருப்பதைக் கண்டு மேலும் மகிழ்ச்சி அடைந்தாள்.விச்வாவசு முனிவரின் விருந்தினர்களாக ஜீமூதவாகனனும், தூமகேதுவும் நீண்ட காலம் இருந்தனர். இச்சமயத்தில் ஜீமூதவாகனன் மலையவதியுடன் பழக நேரிட்டது. அவளுடைய குணங்கள் அவன் மனதைக் கவர்ந்தன. அவன் அவளையே மணக்க விரும்பினான். ஜீமூதவாகனனின் விருப்பத்தை அறிந்த விச்வாசுவும் தமது மகளை அவனுக்கு மணமுடித்து வைத்தார்.ஒருநாள் ஜீமூதவாகனன் அந்தக் காட்டிற்குள் வெகுதூரம் நடந்து சென்றான். அங்கு மலைபோல் எலும்புகள் குவிந்து கிடப்பதைக் கண்டான். அதற்குப் பக்கத்தில் ஓர் இளைஞனும் கிழவியும் பேசிக் கொண்டிருப்பதையும் கண்டான்.''மகனே! உன்னைப் பிரிந்து எப்படிச் செல்லுவேன். கொடிய அந்தக் கருடனுக்குப் பலியிடவா உன்னை நான் மகனாகப் பெற்றேன்?'' என்று அந்த இளைஞனைப் பார்த்துக் கூறிக் கொண்டிருந்தாள் கிழவி.''தாயே, கவலைப்படாதே! அரசனின் ஆணைக்குக் கட்டுப்பட்டவர்கள் நாம். அவனுடைய விருப்பத்துக்கு மாறாக நாம் என்ன செய்ய முடியும்? இன்று கருடனுக்கு இரையாக வேண்டியது என் முறை. நான் உயிருக்குப் பயந்து உங்களுடன் வந்து விட்டால் நமது அரசரின் கோபத்துக்கு ஆளாக வேண்டும். பசி நேரத்துக்கு இங்கே வந்து இரையைக் காணாத கருடன் கடுங்கோபம் கொண்டு நமது அரசனையும் நமது குலத்தவர்களையும் கூண்டோடு அழித்து விடுவான். எனவே, வருந்தாமல் வீட்டிற்குச் செல்லுங்கள்,'' என்றான் அந்த இளைஞன்.இவைகளைக் கேட்டு கொண்டிருந்த ஜீமூதவாகனன் அவர்கள் அருகில் வந்தான்.( - 1 தொடரும்)