உள்ளூர் செய்திகள்

பசுமரத்தில் ஆணி!

சென்னை, பிராட்வே, துாய கேபிரியல் உயர்நிலைப் பள்ளியில், 1957ல், 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒழுக்கம், கண்டிப்புக்கு பெயர் பெற்ற பள்ளி. தாமதமாக வகுப்புக்கு வருதல், கவனக்குறைவு, காலை ஆட்டுதல் போன்றவற்றுக்கு கடும் தண்டனை உண்டு.அன்று, ஹிந்தி பாடம் நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியர் திவாரி. வகுப்பில், புதிதாக சேர்ந்திருந்தவன் என் அருகே துாங்கிக் கொண்டிருந்தான்.இதைக் கண்டதும் கடும் கோபம் கொண்டு, கையிலிருந்த டஸ்டரை அவனை நோக்கி வீசினார் ஆசிரியர். நிலைமையை உணர்ந்த நான், பாய்ந்து பிடித்தேன். அவ்வளவு தான்... ஆத்திரத்தில் என்னை கடுமையாக அடித்தார். தண்டனையாக, வகுப்பறைக்கு வெளியே நிறுத்தினார். அனைவரும் கேலி செய்தனர்.வகுப்பு முடிந்ததும், இருவரையும் அழைத்து விசாரித்தார். பணிவுடன், 'பாளையங்கோட்டையிலிருந்து நேற்று தான் ரயிலில் வந்தான். அதனால் பயணக் களைப்பில் துாங்கிவிட்டான்...' என்றேன். உண்மையை அறிந்ததும் கோபத்தை விட்டார். நாசுக்காக வருத்தம் தெரிவித்தார். எனக்கு, 75 வயதாகிறது. அந்த சம்பவம், இன்றும் பசுமரத்தாணி போல், மனதில் பதிந்துள்ளது.- எ.பி.பாலகிருஷ்ணன், காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !