உள்ளூர் செய்திகள்

தந்தைக்கு உதவுதல் கடமை!

கர்நாடக மாநிலம், கோலார் தங்கவயல், சுமதிஜெயின் மேல்நிலை பள்ளியில் படித்த போது, தலைமை ஆசிரியராக, மல்லிகார்ஜூனா என்பவர் இருந்தார். 'கல்வியும், ஒழுக்கமும் இரு கண்கள்...' என போற்றியவர். எவரேனும் ஒழுங்காக படிக்கவில்லை என்றாலோ, ஒழுக்கம் தவறினாலோ, வலது கையை திருப்ப சொல்லி, பிரம்பால் பலமாக அடிப்பார். அவரது பிரம்படிக்கு ஏகமாய் பயப்படுவோம்.அவர் கனிவானவரும் கூட... ஒரு விஷயத்தில், என் மீது, மிகவும் பரிவு காட்டி வந்தார். என் தந்தை, தபால்காரராக பணிபுரிந்தார்.பெரிய பெரிய பார்சல்களை, பட்டுவாடா செய்ய வேண்டும். அவரது உடல்நிலை சீராக இல்லாததால், பார்சல்களை சுமந்து செல்ல, மிகவும் சிரமப்படுவார். அந்த பார்சல்களை மூட்டைக் கட்டி, அப்பாவுடன் சென்று கொடுத்து வருவேன். தந்தைக்கு உதவ, தலைமை ஆசிரியர் வழங்கிய சிறப்பு அனுமதி இது. வகுப்பில் ஒரு மணி நேரம் மட்டுமே இருப்பேன். மற்ற நேரங்களில் தந்தைக்கு உதவ போய்விடுவேன். அந்த நேரத்தில் எடுக்கும் பாடங்களை, வகுப்பு நண்பர்களிடம் கேட்டுக் கற்றுக் கொள்வேன்.படிப்பு ஒரு கடமை என்றாலும், பெற்றோருக்கு உதவுவதும் முக்கியமானது என்பதை உணர்த்தினார், தலைமை ஆசிரியர். இப்போது, என் வயது, 53; இன்றும், என் நினைவில் அவர் தங்கியுள்ளார்.- சி.யோகநாதப்ரியன், தாம்பரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !