முடமாக்கும் நம்பிக்கை!
மதுரை, புனித சூசையப்பர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1970ல், 11ம் வகுப்பு படித்தேன்; அப்போது, நடந்த சம்பவம்!என் நெருங்கிய தோழி சுகன்யா; நன்கு படிப்பாள். அவளிடம் நிறைய மூட நம்பிக்கை உண்டு. அவள் குறிப்பிடும் நேரத்தில், காலையில் எழுப்பி விட வேண்டும்; சிறிது தாமதமானாலும், அம்மாவுடன் சண்டை போடுவாள். பேருந்தில், பயணச்சீட்டு வாங்கியதும், அதில் அச்சிடப்பட்டிருக்கும் வரிசை எண்ணை கூட்டுவாள்; ஒற்றைப் படையாக அமைந்தால், நாள் முழுவதும் புலம்பி தவிப்பாள்.பயணத்தின் போது, ஒற்றைப்படையில் பறவை தென்பட்டால், 'ஆகாது...' என்று அரற்றுவாள்.ஆண்டு இறுதி தேர்வில், தேர்வுக்கூட நுழைவு சீட்டு எண்ணின் கூட்டுத் தொகை, ஒற்றைப்படையாக அமைந்தது. இதை எண்ணி வருந்தி, கவனத்தை சிதறவிட்டதால், குறைந்த மதிப்பெண் தான் பெற்றாள்.வகுப்பு ஆசிரியை புளோரா மேரியிடம், அவளது செயல்களை கூறினோம். அவர் மிகுந்த அன்புடன், 'தன்னம்பிக்கையோடு செயல்படு; மூட நம்பிக்கை, முடமாக்கி வாழ்க்கை பாதையை மாற்றிவிடும். எண்களை ஆராய்ந்த, சகுந்தலாதேவி கணித மேதையாக போற்றப்படுகிறார்... அது போல் உன்னாலும் சாதிக்க முடியும். எண்களை நம்புவதை விடுத்து, ஆராய்ச்சி செய்...' என, அறிவுரை கூறினார். அது, பசுமரத்தாணி போல் எங்கள் மனதில் பதிந்தது; அவளும் விழிப்புணர்வு பெற்று நன்றாக படித்தாள். அரசு துறையில் நல்ல பதவியில் இருக்கிறாள்.தக்க சமயத்தில் உணர்த்திய அந்த ஆசிரியையை, வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்!- சாந்தினி நடராஜன், மதுரை.