உள்ளூர் செய்திகள்

பிரசன்டேஷன் முக்கியம்!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, நாடார் மேல்நிலைப் பள்ளியில், 1988ல், 7ம் வகுப்பு படித்த போது, மாதாந்திர தேர்வுக்கு, அரை குயர் நோட்டு எடுத்து வர சொன்னார் அறிவியல் ஆசிரியர்.அவரது அறிவுரையை தட்டிக்கழிக்கும் விதமாக, 'நல்லா எழுதி இருக்கோமான்னு தான் பார்ப்பாரே தவிர, நோட்டெல்லாம் எப்படி இருக்குன்னு கவனிக்க மாட்டார்...' என்றனர் உடன்படித்த மாணவர்கள். அது கேட்டு மெத்தனமானேன். வீட்டில் இருந்த, 80 பக்க நோட்டை, பழைய அட்டையில் தைத்து பயன்படுத்தினேன். பலர், பழைய பேப்பரை அட்டையில் தைத்து பயன்படுத்தினர். திருத்திய விடைத்தாள் நோட்டுகளுடன், வகுப்பறைக்கு வந்தார் ஆசிரியர்; பழைய பேப்பரில் தைத்தவற்றை, வெளியே விட்டெறித்தபடி, 'ஒழுக்கம், கீழ்படிதல் தான் எனக்கு பிடிக்கும்; தேர்வு எழுதும் நோட்டு, நேர்த்தியாக இருக்க வேண்டாமா... குப்பையில் போடும் காகிதத்தை கோர்த்து எழுதினால், திருத்தி தருவேன் என்று நினைத்தீரா...' என்றபடி அடித்து நொறுக்கினார்.என் முறை வந்தது. பயத்துடன் பதறி எழுந்து நின்றேன். 'பார்... அழகான நோட்டை, பழைய அட்டையில் தைச்சுருக்க... இந்த நோட்டிலேயே எழுதி இருக்கலாம்ல... ஏன் அசிங்கமா தச்சு வச்சிருக்க...' என்றபடி அட்டையை மட்டும் கிழித்து எறிந்து, நோட்டை கையில் தந்தார். உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது.இப்போது எனக்கு, 43 வயதாகிறது; என் பிள்ளைகளிடம், 'எதையும் நேர்த்தியாக செய்ய வேண்டும்' என, அந்த ஆசிரியரிடம் கற்றதை அறிவுறுத்தி வருகிறேன். - கவிதா மோகன், மதுரை.தொடர்புக்கு: 97892 53931


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !