உள்ளூர் செய்திகள்

சிங்கத்தை சந்திக்க தயாரா...

ஆசிய சிங்கங்களின் சரணாலயமாக உள்ளது, கிர் தேசிய பூங்கா. -குஜராத் மாநிலம், ஜுனாகாத் ரயில் நிலையத்தில் இருந்து, ஒன்றாரை மணி நேர பஸ் பயணத்தில் பூங்காவை அடையலாம். இது, 1412 சதுர கிலோ மீட்டர் பரப்பில் பரவியுள்ளது. சதுப்பு நிலங்கள், இயற்கை கொஞ்சும் குன்றுகள், நீர்வீழ்ச்சிகளை தரிசிக்கலாம். பூங்காவின் தண்ணீர் தேவையை கமலேஸ்வர் அணை நிறைவேற்றுகிறது. சுதந்திரத்துக்கு முன், இந்த பகுதியை ஆட்சி செய்த மன்னர்கள் சிங்கங்களை வேட்டையாடி கொன்றனர்; கொடூரமாக அழித்தனர். இதனால், சிங்க எண்ணிக்கை, 1900ல், மிகவும் குறைந்துவிட்டது. கிட்டத்தட்ட, 20 சிங்கங்கள் மட்டுமே இருந்ததாக புள்ளி விவரம் கூறுகிறது. சிங்க பாதுகாப்புக்கு, கிர் தேசிய பூங்கா, 1965ல் மத்திய அரசால் அமைக்கப்பட்டது. இங்கு, 523 சிங்கங்கள், 2015ல் இருந்தன. ஐந்து ஆண்டிற்கு ஒருமுறை கணக்கு எடுக்கப்படுகிறது. எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இங்கிருந்து, 126 சிங்கங்கள், பல நாடுகளுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, சிங்க எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளது வன விலங்கு பாதுகாப்பு துறை. இந்த பூங்காவில், 2,375 வகை விலங்குகள் உள்ளன.இவற்றில்... * பாலுாட்டி, 38 வகை* பாம்பு, பல்லி, 28 வகை* பூச்சியினம், 2000 வகை* பறவை, 380 இனங்கள் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.மஞ்சள் தோலில் கரும் புள்ளிகள் கொண்ட சிறுத்தையும் உள்ளது. மான், நரி, கழுதைப்புலி, காட்டுப்பூனை, துருவண்ண பூனை, நீண்ட வால் குரங்கு, முள்ளம்பன்றி, கருப்பு முயல் என, விலங்குகள் வாழ்கின்றன. பூங்காவில், 400க்கும் அதிகமான தாவர வகைகள் உள்ளன. காட்டுராஜா சிங்கத்தை, நம் நாட்டில் இயற்கையாக ரசிக்க உதவும் ஒரே பூங்கா இதுதான்.- ராஜிராதா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !