பேச்சு வார்த்தை பழகு!
மதுரை மாவட்டம், நத்தம், அரசு உயர்நிலைப் பள்ளியில், 1968ல், 10ம் வகுப்பு படித்தபோது, மாணவர் தலைவராக இருந்தேன். பள்ளியில் அடிப்படை வசதிகள் வேண்டி, மாணவர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டேன்.விளையாட்டு ஆசிரியர் பின்னத்தேவர் அழைத்தார். அவரைக் கண்டாலே பயம். அனைவரும் ஓடி ஒளிவர். கண்டிப்பானவர் என்பதால் பயந்தபடியே சென்றோம். ஆச்சரியப்படுத்தும் விதமாக, லட்டு கொடுத்து வரவேற்றவர், 'படிக்கிற வயதில் போராட்டம் எல்லாம் கூடாது; பெயர் கெட்டுப்போகும்; நடத்தை சான்றிதழில் மோசமாக எழுதிவிட வாய்ப்பு உண்டு... எதிர்காலம் பாழாகும். எனவே, எதையும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண பழகிக்கணும்...' என அறிவுரைத்தார். போராட்டத்தை கைவிட்டு வகுப்புக்கு திரும்பினோம். தீவிர கவனம் செலுத்தி படித்தேன். பின்னாளில், ராணுவத்தில் சேர்ந்து சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன்.தற்போது எனக்கு, 73 வயதாகிறது. அந்த ஆசிரியர் கற்றுக்கொடுத்த ஒழுக்க பாடத்தை, வாழ்வில் இன்றும் கடைபிடித்து வருகிறேன்.- ஆர்.டி.தமாஸ், மதுரை.தொடர்புக்கு: 94884 00829